தயாரிப்பு பகுப்பாய்வு | பொருளாதாரம் - விகித அளவு விளைவு விதி | 11th Economics : Chapter 3 : Production Analysis
விகித அளவு விளைவு விதி (Laws Of Returns To Scale)
நீண்ட காலத்தில் அனைத்து உற்பத்திக் காரணிகளும் மாறக்கூடியவை. அனைத்து உற்பத்தி காரணிகளும் எண்ணிக்கையில் அதிகரிக்கும்போது வெளியீட்டில் அதிகரிப்பு ஏற்படலாம். இவ்விரண்டிற்கும் உள்ள தொடர்பை விளக்குவதே விகித அளவு விளைவு விதியாகும். உயரும் அளவு என்பது அனைத்து உள்ளீடுகளும் ஒரு சேர அதிகரிப்பதாகும்.
விகித அளவு விளைவு விதி பின் வரும் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டது.
1. தொழில் அமைப்பைத் தவிர அனைத்து உற்பத்திக் காரணிகளும் மாறக்கூடியவை, (நிலம், உழைப்பு, மற்றும் மூலதனம்).
2. தொழில் நுட்பத்தில் மாற்றம் இல்லை
3. பண்டங்களின் அங்காடியில் நிறைவுப் போட்டி நிலவுகிறது.
4. வெளியீடு அல்லது உற்பத்தி பரும அலகுகளால் அளவிடப்படுகிறது.
1. வளர்ந்து செல் விகித அளவு
இந்நிலையில் அனைத்து உள்ளீடுகளும் 1 விழுக்காடு உயரும்போது வெளியீடுகள் 1 விழுக்காட்டிற்கும் மேல் உயர்கிறது.
2. மாறா விகித அளவு
இதில் அனைத்து உற்பத்திக் காரணிகளும் 1 விழுக்காடு உயரும்போது வெளியீடும் அதே அளவு சமவிகித அளவில் 1 விழுக்காடு உயரும்.
3. குறைந்து செல் விகித அளவு
இங்கு அனைத்து உற்பத்திக் காரணிகளும் 1 விழுக்காடு உயரும்போது வெளியீடு 1 விழுக்காட்டிற்கு குறைவாக உயர்கிறது.
விகித அளவு விளைவு விதிகளின் மூன்று நிலைகளும் பின்வரும் வரைபடம் மூலம் விளக்கப்படுகின்றன.
வரைபடம் 3.2ன் படி புள்ளி a க்கும் b க்கும் இடையேயான பகுதி வளர்ந்து செல் விகித விளைவு விதியை குறிப்பிடுகிறது. ஏனென்றால் உற்பத்தியானது 2 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது q=1 லிருந்து q = 3 வரை இதற்காக 1 அலகு உழைப்பும் 1 அலகு மூலதனமும் (ஒரு மடங்குதான்) அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
புள்ளி b க்கும் c க்கும் இடையே உள்ள பகுதி மாறா விகித அளவு விளைவு விதியை குறிக்கிறது. ஏனென்றால் இங்கு உழைப்பையும் மூலதனத்தையும் 100 சதவீதம் அதிகமாகப் பயன்படுத்தி வெளியீட்டின் அளவும் 100 சதவீதம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
(q=3 லிருந்து q= 6 வரை)
புள்ளி C லிருந்து d வரை உள்ள பகுதி குறைந்து செல் விகித அளவு விளைவு விதியை குறிக்கிறது. உற்பத்திக் காரணிகளை 4 அலகிலிருந்து 8 அலகுகளாக இரு மடங்கு உயர்த்தியபோதும், அதிகரித்த வெளியீடு உள்ளீட்டின் உயர்வை விட குறைவாகும். அதாவது 33.33 சதவீதம் வெளியீடு கூடியுள்ளது. (q=6 லிருந்து q=8 வரை)