மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் | அலகு 4 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மனித உரிமைகள் ஆணையம் | 8th Social Science : Civics : Chapter 4 : Human Rights and UNO
மனித உரிமைகள்
ஆணையம்
மனித
உரிமைகளை மேம்படுத்துவதற்காக ஓர் ஆணையத்தை அமைக்க ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய அங்கமான
பொருளாதார மற்றும் சமூக சபை (ECOSOC) அதிகாரம் பெற்றது. மனித உரிமைகளின் பாதுகாப்பை
உறுதி செய்வதற்காக தேசிய மற்றும் மாநில அளவிலான மனித உரிமை ஆணையங்கள் நிறுவப்பட்டன.
அ. தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC)
இந்தியாவின்
தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) 1993ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் நாள் நிறுவப்பட்டது.
சுதந்திரமான, சட்டப்பூர்வமான அரசியலமைப்பு சாராத ஓர் அமைப்பாகும். இதன் தலைமையகம் புதுடெல்லியில்
அமைந்துள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் என்பது ஒரு தலைவரையும் பிற உறுப்பினர்களையும்
உள்ளடக்கிய ஓர் அமைப்பாகும். தலைவரையும் உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
அவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் (அ) 70 வயது வரை இதில் எது முன்னதாக வருகிறதோ அதுவரை
பதவியில் நீடிப்பார். தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது. சட்டப்பிரிவு,
புலனாய்வுப் பிரிவு, ஆராய்ச்சி மற்றும் திட்டப் பிரிவு, பயிற்சி அளித்தல் பிரிவு மற்றும்
நிர்வாகப் பிரிவு ஆகியனவாகும். இந்தியாவில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும்
மனித உரிமை ஆணையம் பொறுப்பாகும்.
ஆ. மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC)
தமிழ்நாட்டில் 1997ஆம் ஆண்டு ஏப்ரல் 17இல் மாநில மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டது. இது மாநில அளவில் செயல்படுகிறது. இது ஒரு தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்களை உள்ளடக்கியது. இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல் ஆகியவற்றின் கீழுள்ள துறைகள் தொடர்பான மனித உரிமை மீறல் தொடர்பானவைகளை மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்கும் (NHRC ஏற்கனவே விசாரிக்கும் வழக்குகளைத் தவிர)