மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் | அலகு 4 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மனித உரிமைகளின் வகைகள் | 8th Social Science : Civics : Chapter 4 : Human Rights and UNO
மனித உரிமைகளின்
வகைகள்
மனித
உரிமைகள் பிரகடனத்தில் 30 சட்டப்பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன. இந்த உரிமைகள் ஐந்து முதன்மைப்
பிரிவுகளாக விரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவைகள் பின்வருமாறு.
அ. வாழ்வியல் உரிமைகள்
வாழ்வியல்
(சிவில்) உரிமைகள் என்ற சொல் ஒவ்வொரு நபருக்கும் அரசாங்கத்தின் சட்டங்களால் வழங்கப்படும்
அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுகிறது. இந்த உரிமைகள் அனைவருக்கும் சமமாக கருதப்பட வேண்டியவைகள்
ஆகும். இதில் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், அடிமைத் தளையிலிருந்து விடுபடுதல், நியாயமற்ற
முறையில் கைது செய்யாமை ஆகிய உரிமைகள் அடங்கும்.
ஆ. அரசியல் உரிமைகள்
அரசாங்கத்தை அமைப்பதிலும், நிர்வகிப்பதிலும் அரசியல்
உரிமைகள் பயன்படுத்தப்படுகின்றன. வாழ்வியல்
உரிமைகளும், அரசியல் உரிமைகளும் நவீன மக்களாட்சியுடன் நேரடி தொடர்புள்ளவைகள் ஆகும்.
அவைகள் அரசியல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதிலிருந்து தனிநபரைப் பாதுகாக்கின்றன.
மேலும் ஒவ்வொரு தனிநபரையும் தங்கள் நாட்டின் அரசியல் செயல்பாட்டில் பங்கேற்க இவ்வுரிமைகள்
வழிவகுக்கிறது. கருத்துச் சுதந்திரம், அமைதியாக கூட்டம் நடத்துதல், தன் நாட்டின் அரசாங்கத்தில் பங்குகொள்ளும் உரிமை, வாக்களிக்கும்
உரிமை, பேச்சுரிமை மற்றும் தகவல்களைப் பெறும் உரிமை ஆகியவைகள் அரசியல் உரிமைகளுள் அடங்கும்.
இ. சமூக உரிமைகள்
ஒரு தனிநபர்
சமுதாயத்தில் முழுமையாக பங்கேற்பது அவசியமானது ஆகும். சமூக உரிமைகள் என்பது வாழ்க்கைத்
தரத்திற்கு தேவையான கல்வி, சுகாதாரம், உணவு, உடை, தங்குமிடம் மற்றும் சமூக பாதுகாப்பு
ஆகிய உரிமைகளை உள்ளடக்கியதாகும்.
ஈ. பொருளாதார உரிமைகள்
பொருளாதாரத்தில்
பங்கேற்பதற்கான உரிமை என்பது அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் விரும்பத்தக்க
வேலைக்குச் செல்வதாகும். ஒவ்வொரு தனிநபரும் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய
நிலைமை இருப்பதை உறுதி செய்கிறது. வேலைவாய்ப்பு , நியாயமான ஊதியத்திற்கான உரிமைகள்,
நியாயமான வேலை நேரம், தங்குமிடம், கல்வி, போதுமான வாழ்க்கைத் தரம், மற்றும் சொத்துரிமை
ஆகிய உரிமைகள் இதில் அடங்கும்.
உ. கலாச்சார உரிமைகள்
சமயச்சுதந்திரம், மொழியைப் பேசுவதற்கான உரிமை மற்றும்
சமூகத்தின் கலாச்சார வாழ்க்கையை நடைமுறைப்படுத்துவதற்கான உரிமை, அறிவியல் முன்னேற்றத்தில்
பங்கு பெறுவதற்கான உரிமை, தார்மீக மற்றும் பொருள் ஆர்வத்தைப் பாதுகாக்கும் உரிமை ஆகியவைகள்
கலாச்சார உரிமைகள் ஆகும்.