புரட்சிகளின் காலம் | வரலாறு - மீள்பார்வை | 9th Social Science : History: The Age of Revolutions
மீள்பார்வை
● அமெரிக்கா கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஐரோப்பியக்குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டதும்,
ஏனைய ஐரோப்பிய சக்திகளை வெற்றி கொண்ட இங்கிலாந்து 13 குடியேற்றங்களையும் தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததும் விவரிக்கப்பட்டுள்ளன
● தாங்கவியலா வரிச்சுமையும், குடியேற்ற நாடுகளின் சுயாட்சியை, சுதந்திரத்தை இழக்கச் செய்த இங்கிலாந்தின் காலனியச் சுரண்டல் கொள்கைகளும் விவாதிக்கப்பட்டுள்ளன
● குடியேற்றநாடுகளின் “பிரதிநிதித்துவம் இல்லாமல்வரிவிதிப்பும் இல்லை " என்ற பிரகடனமானது குடியேற்ற நாடுகளுக்கு எதிராகப் போர் அறிவிப்புச் செய்ய இங்கிலாந்தைத் தூண்டியமை விளக்கப்பட்டுள்ளது
● குடியேற்ற நாடுகளின் எதிரப்பையும் மீறித் தேயிலை இறக்குமதி செய்யப்பட்டது பாஸ்டனில் கிளர்ச்சியைத் தூண்டியதும், அது அமெரிக்கச் சுதந்திரப் போர் வெடிப்பதற்கு இட்டுச் சென்றதென்பதும் விவரிக்கப்பட்டுள்ளன
● குடியேற்ற நாடுகளுக்கும் இங்கிலாந்து நாட்டுப் படைகளுக்குமிடையே நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த லெக்ஸிங்டன்,
பங்கர் குன்று, யார்க்டவுன் போர்கள் கோடிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளன
●
1774ஆம் ஆண்டில் கூடிய கண்டங்கள் மாநாட்டில் அமெரிக்கர்களின் உரிமைப் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் இரண்டாவது கண்டங்கள் மாநாட்டில் இராணுவத்தின் தலைமை பொறுப்பு ஜார்ஜ் வாஷிங்டனுக்கு வழங்கப்பட்டதும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன
● இங்கிலாந்து இராணுவத்திற்குத் தலைமையேற்ற காரன்வாலிஸ் பிரபு சரணடைந்ததும்,
1783இல் பாரிஸ் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதும் அவ்வுடன்படிக்கை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுதந்திரத்தை அங்கீகரித்ததும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன
● பதினாறாம் லூயியால் ஸ்டேட்ஸ் ஜெனரல் (நாடாளுமன்றம்) கூட்டப்பட்டதைத் தொடர்ந்து பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது குறிக்கப்பட்டுள்ளது.
● பிரபுக்களும் மதகுருமார்களும் வாழ்ந்த,
தனியுரிமைகளோடு கூடிய ஆடம்பர வாழ்க்கைக்கும் சமூகத்தின் மூன்றாவது பிரிவைச் சேர்ந்த விவசாயிகள், கைவினைஞர்கள், ஏனைய பிரிவுகளைச் சார்ந்த பொதுமக்கள் வாழ்ந்த துயரமிகுந்த வாழ்க்கைக்கும் இடையிலான வேறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன.
● பிரெஞ்சுப் புரட்சி வெடிப்பதற்கான அரசியல்,
பொருளாதார, சமூகக்காரணங்கள் திறனாய்வு செய்யப்பட்டுள்ளன.
● புரட்சியாளர்களுக்கு விழிப்புணர்வூட்டி,
அவர்களை உத்வேகப்படுத்தி மக்களால் விரும்பப்படாத முடியாட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய வைத்ததில் பிரெஞ்சுத் தத்துவஞானிகள் வகித்த பங்கு கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
● மூன்றாவது ஸ்டேட் உறுப்பினர்களின் டென்னிஸ் மைதான உறுதிமொழியைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகளான பாஸ்டில் சிறைத் தகர்ப்பு,
வெர்சே நோக்கிப் பெண்கள் மேற்கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேரணி ஆகியன விளக்கப்பட்டுள்ளன
● முடியாட்சியும் நிலப்பிரபுத்துவமும் ஒழிக்கப்பட்டமை,
மனிதன், குடிமகன் உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்டதோடு, திருச்சபையின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டமை, குடியரசுப் பிரகடனம், அதன் விளைவாய் முடியாட்சி முறை முடிவுக்கு வந்தமை ஆகியவை விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. தேசியப் பேரவைத் (நேஷனல் கன்வென்ஷன்) தலைவரான ரோபஸ்பியரின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் அதனுடைய பயங்கரவாத ஆட்சி எவ்வாறு புரட்சியாளர்களிடையே பிளவை ஏற்படுத்தியது என்பது விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
● தேசியப்பேரவை ரோபஸ்பியருக்கு எதிராகத் திரும்பி அவரை கில்லட்டினுக்கு அனுப்பியது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
● இயக்குநர் குழு,
அதனைத் தொடர்ந்து கான்சலேட் உருவானது, அரசு அதிகாரத்தை நெப்போலியன் கைப்பற்றியது, பின்னர் அவரே தன்னை ஃபிரான்சின் முடியரசராக அறிவித்தது ஆகியன தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
● நெப்போலியனின் எழுச்சியானது, புரட்சியின் முடிவை அறிவிப்பதாய் இருந்தாலும் புரட்சிகரமான கொள்கைகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகள் பின்னாளைய அரசியல் இயக்கங்களுக்கு ஊக்கமூட்டுவதாய் இருந்ததும், ஐரோப்பாவிலும் ஏனைய நாடுகளிலும் தாராளவாத ஜனநாயகம் உருவாவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்ததும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.