வரைவிலக்கணம், வகைகள், காரணங்கள் - நிதிப் பொருளியல் - பொதுக்கடன் | 12th Economics : Chapter 9 : Fiscal Economics

   Posted On :  13.05.2022 02:29 pm

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 9 : நிதிப் பொருளியல்

பொதுக்கடன்

"கடன் என்பது அரசு கருவூலத்தால் கடன் வழங்கியவர்களுக்கு வட்டியும், அசலும் கொடுக்கப்பதற்கான உத்தரவாதம் ஆகும். நடப்பு நிதி பற்றாக்குறையைச் சரிசெய்வதற்காக திரட்டப்படும் நிதி ஆகும்"

பொதுக்கடன்


18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் அரசின் செயல்பாடானது குறைவானதாகும். ஆனால் 20ம் நூற்றாண்டிலிருந்து அரசிற்கான பொறுப்புகள் அதிகரித்துக்கொண்டே உள்ளது எனவே அரசானது ஏற்கனவே உள்ள பாரம்பரியமான வருவாயுடன் தனிநபர் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களிடம் கடன்கள் வாங்குகிறது. வளர்ச்சி குன்றிய நாடுகள், வளர்ச்சித் திட்டங்களுக்காக அதிகமான கடன் பெறுகிறது. சில நாடுகள் இத்தகைய கடன்களினால் கடன் பொறியில் சிக்கியுள்ளது.



1. வரைவிலக்கணம்

"கடன் என்பது அரசு கருவூலத்தால் கடன் வழங்கியவர்களுக்கு வட்டியும், அசலும் கொடுக்கப்பதற்கான உத்தரவாதம் ஆகும். நடப்பு நிதி பற்றாக்குறையைச் சரிசெய்வதற்காக திரட்டப்படும் நிதி ஆகும்"

- பிலிப் E. டெய்லர்.

“பொதுக்கடன் என்பது நிதிக் கருவிகள் வாயிலாக அரசானது தனியார் துறையிலுள்ள தனிநபர்கள் அல்லது நிறுவனங்களிடம் பெறுவதாகும். இதனைக் கொண்டு தனியார் துறையைத் தூண்டி அதன்

மனிதவளங்கள் மற்றும் உண்மையான வளங்களைப் பெருக்குவதற்கும் மற்றும் அந்த நிதியினைக் கொண்டு வளங்களை வாங்குதல் அல்லது நலத்தை உருவாக்குதல் அல்லது மானியங்களை வழங்குதல் ஆகியவற்றை செய்தலைக் குறிப்பதாகும்"

- கார்ல் எஸ். ஷோப்



2. பொதுக்கடனின் வகைகள் 

i) உள்நாட்டு பொதுக்கடன்

உள்நாட்டுக் கடன் என்பது, ஒரு நாட்டிற்குள் குடிமக்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து அரசினால் பெறப்படும் கடனாகும். உள்ளாட்டு பொதுக்கடன் என்பது செல்வத்தை மாற்றிக் கொள்வது பற்றியதாகும்.

உள்நாட்டு பொதுக்கடனின் முக்கிய ஆதாரங்களாவன

* அரசு பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை தனிநபர்கள் வாங்குதல்.

* அரசிடமிருந்து பத்திரங்களை தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் பெறுதல். 

* அரசு பத்திரங்களை நிதிசாரா நிறுவனங்க ளாகிய UTI, LIC, GIC போன்றவைகள் பெறுதல். 

* பண அளிப்பு வாயிலாக அரசிற்கு மைய வங்கி கடன் வழங்குகிறது. அரசின் செலவுகளை சந்திப்பதற்காக மைய வங்கி பணமாகவும் வழங்குகிறது. 

ii) வெளிநாட்டு பொதுக்கடன்

பன்னாட்டு நிறுவனம் மற்றும் வெளிநாட்டிலிருந்து பெறப்படும் கடன், அயல்நாட்டு கடன் என அழைக்கப்படுகிறது. IMF, உலக வங்கி, IDA, ADB போன்ற அமைப்புகளிடமும், வெளிநாட்டு அரசுகளிடம் கடன் பெறுவது அயல்நாட்டுக் கடன்களுக்கான முக்கிய ஆதாரமாக உள்ளது.




3. பொதுக்கடன் அதிகரிப்பதற்கான காரணங்கள்

பின்வரும் துணைத் தலைப்புகளில் பொதுக்கடன் அதிகரிப்பதற்கான காரணங்களைக் காணலாம்.

1. போர் மற்றும் போர்கால ஆயத்தம்

போர் நெருக்கடி தான் அரசின் பொதுக் கடனை அதிகரிப்பதற்கான முக்கிய காரணியாக இருக்கின்றது. இன்றைய நாளில் போருக்கு ஆயத்தம் செய்தல் மற்றும் அணு ஆயுத்திட்டங்கள் ஆகியவற்றிற்கு அரசு பெருவாரியான செலவு செய்கிறது. இதனால் கடன் ஏற்படுகிறது.

2. சமுதாயத் தேவைகள்

தற்கால அரசானது நல அரசாக செயல்படுவதால் சமுதாய தேவைகளான பொது சுகாதாரம், தூய்மை , கல்வி , காப்பீடு, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு போன்றவற்றை மேற்கொள்வதற்கும், இதர குறைந்தபட்ச தேவைகளை மக்களுக்கு செய்கிறது. இதற்கான செலவினை மேற்கொள்ள பொதுக்கடனை பெற வேண்டியுள்ளது.

3. பொருளாதார முன்னேற்றம் மற்றும் நிதி பற்றாக்குறை

அரசு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை மேற்கொள்கிறது. இரயில்வே கட்டுமானம், மின்சாரத் திட்டங்கள், நீர்பாசனத் திட்டங்கள், கனரக தொழிற்சாலைகள் அமைத்தல் போன்றவற்றிற்கு தேவையான வளங்களை பொதுக்கடன் வாயிலாக அரசு பெருகிறது. அதிகளவில் பொதுச் செலவின் காரணமாக அரசு எப்பொழுதும் பற்றாக்குறை வரவு செலவுத் திட்டத்தை எதிர்கொள்கிறது. இந்த பற்றாக்குறையை கடன்களால் மட்டுமே சரிசெய்ய முடியும்.

4. வேலைவாய்ப்பு

தற்காலத்தில் அரசு வேலையின்மை பிரச்சனையை எதிர்கொள்கிறது. பொதுச் செலவின் வாயிலாக இது போன்ற சிக்கல்களை தீர்ப்பது அரசின் கடமையாக உள்ளது. இதற்காக அரசு பெரிய தொகையினை செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனை பொதுக்கடன் வாயிலாகவே மேற்கொள்கிறது.

5. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல்

புழக்கத்தில் உள்ள பணத்தை அரசு திரும்ப பெற பொதுக்கடன் வழிமுறையை கையாளுகிறது. இதனால் விலை ஏற்றத்தைத் தடுக்கிறது.

6. மந்தத்தை தடுத்தல்

மந்த காலங்களில் தனியார் முதலீடு குறைவாக இருக்கும். அதனை ஈடுகட்ட அரசானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலங்களின் மூலம் கடன் பெறுவதை மேற்கொள்ளும்.



4. பொதுக்கடனை திரும்ப செலுத்தும் முறைகள்

பொதுக்கடன் தீர்வு என்பது பொதுக்கடனை திரும்பச் செலுத்தும் வழிமுறையைக் குறிப்பதாகும். அரசு விற்பனை செய்துள்ள பத்திரங்களை பொதுமக்கள் அதன் முதிர்வு காலத்தில் பத்திரங்களை ஒப்படைத்து அதற்கான தொகையை வட்டியுடன் பெறுவர். பொதுக்கடன் பின்வரும் வழிகளில் கடன் தீர்க்கப்படுகிறது. 

(1) மூழ்கும் நிதி 

கடனுக்கென அரசு தனியொரு நிதியினை ஏற்படுத்தும் அதனை 'மூழ்கும் நிதி' என்பர். அரசு ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட நிலையான தொகையை செலுத்துகிறது. கடன் முதிர்ச்சியடையும் போது வட்டியோடு அசலையும் சேர்த்து வழங்கும் வகையில் இந்நிதி பெருகிவிடும். இந்த முறை முதன்முதலில் இங்கிலாந்தைச் சேர்ந்த வால்போல் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

 (2) கடனை மாற்றுதல்

பொதுக்கடன் திரும்பக் செலுத்தப்படும் மற்றொரு முறை கடன் மாற்றுதல் ஆகும். இம்முறையில் பழைய கடனை புதிய கடனாக மாற்றப்படுகிறது. இம்முறையின் கீழ் அதிக வட்டி கொண்ட பொதுக்கடன் குறைவான வட்டி கொண்ட பொதுக்கடனாக மாற்றப்படுகிறது... டால்டன் கடன் மாற்றுதல் கடன் பளுவை குறைக்கிறது என்கிறார்.

(3) வரவு செலவு திட்ட உபரி

உபரி வரவு செலவு திட்டத்தை அரசு தாக்கல் செய்யும்போது அந்த உபரியை கடனைத் திருப்பிச் செலுத்த பயன்படுத்திக் கொள்ளும். பொது வருவாய், பொதுச் செலவை விட அதிகரிக்கும் போது உபரி ஏற்படுகிறது. இது எப்போதாவது தான் பயன்படுத்தப்படுகிறது

(4) பகுதியாகச் செலுத்தல்

இந்த முறையின் கீழ் அரசு பொதுக்கடனை சம வருடாந்திர தவணைகளாக செலுத்துகிறது. இது பொதுக் கடனைச் செலுத்தும் மிக சுலபமான முறையாகும்.

(5) கடன் மறுப்பு

அது அரசு கடன் செலுத்தும் சுமையிலிருந்து வெளி வருவதற்கான எளிமையான முறையாகும். இதில் அரசானது ஏற்கனவே செலுத்துவதாக உறுதியளித்த கடமையை மறுக்கும். இது கடனை திரும்ப செலுத்துவதாகாது, அதனை அழிப்பதாகும். சாதாரண சூழ்நிலைகளில் கடனை மறுக்க இயலாது ஏனெனில் அது அரசின் நாணயத்தன்மையை பாதித்து விடும். 

(6) வட்டி வீதத்தை குறைத்தல்

நிதிச் சிக்கல் ஏற்படும் நேரங்களில் கட்டாயமாக வட்டியை குறைத்து கடனை செலுத்துவதும் ஒரு வகையான கடன் தீர்வு முறையாகும்...

(7) மூலதனத் தீர்வை

ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் அல்லது வளர்ச்சி போக்கில் உள்ள மூலதன சொத்துக்கள் பெற்றிருப்பின் அதன் மீது அரசு வரி விதித்து, அதனை போர்க்கால கடனை செலுத்துவதற்கு பயன்படுத்துவதாகும். ஆனால் இது சர்ச்சைக்குரிய கடன் தீர்வை முறையாகும்


Tags : Definitions, Types, Causes, Methods of Redemption - Fiscal Economics வரைவிலக்கணம், வகைகள், காரணங்கள் - நிதிப் பொருளியல்.
12th Economics : Chapter 9 : Fiscal Economics : Public Debt Definitions, Types, Causes, Methods of Redemption - Fiscal Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 9 : நிதிப் பொருளியல் : பொதுக்கடன் - வரைவிலக்கணம், வகைகள், காரணங்கள் - நிதிப் பொருளியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 9 : நிதிப் பொருளியல்