நிதிப் பொருளியல் - பொதுநிதி மற்றும் தனியார் நிதி | 12th Economics : Chapter 9 : Fiscal Economics
பொதுநிதி மற்றும் தனியார் நிதி
பொது நிதி என்பது அரசின் வருவாய், செலவு, கடன்கள் மற்றும் நிதி நிர்வாகம் பற்றி விளக்குகிறது.. தனியார் நிதி என்பது தனிநபர் அல்லது தனியார் நிறுவனங்களின் வருவாய், செலவு, கடன் மற்றும் அதன் நிதி நிர்வாகம் ஆகியவற்றைப் பற்றி படிக்கிறது. பொதுநிதி மற்றும் தனியார் நிதி அடிப்படையில் ஒன்றுபோல் இருந்தாலும் அவற்றின் அளவு, நோக்கம், விளைவு, தாக்கம் ஆகியவற்றில் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன.
1. ஒற்றுமைகள்
1. பகுத்தறியும் தன்மை
பொது மற்றும் தனி நிதி பகுத்தறிவை அடிப்படையாக கொண்டவை. இரண்டும் குறைந்த செலவில் அதிக நலத்தைப் பெறுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
2. கடனுக்கான வரையறை
இரண்டுக்குமான கடன்கள் வரையரைக் கொண்டுள்ளது. தனது வருவாய்க்கு அப்பால் அரசும் செல்வதில்லை . அரசின் பற்றாக்குறை வரவு செலவு, திட்டத்திற்கும் எல்லை இருக்கிறது.
3. வளங்களின் பயன்பாடு
தனி மற்றும் பொது துறைகள் வரையறுக்கப்பட்ட வளங்களையே கொண்டுள்ளது. இவ்விரண்டும் உத்தம அளவில் வளங்களைப் பயன்படுத்த முனைகிறது.
4. நிர்வாகம்
நிர்வாகத் திறனானது அரசு மற்றும் தனியாரின் செயல்திறனைப் பொருத்து அமைகிறது. செயல்திறன் இன்மை மற்றும் ஊழல் ஆகியவை நிர்வாகத்தில் காணப்பட்டால் விரயங்கள் மற்றும் நட்டங்கள் ஏற்படும்.
2. வேற்றுமைகள்
1. வருமான மற்றும் செலவு சரிகட்டல்
அரசு செலவினை மதிப்பீடு செய்து, அதற்கேற்ப வருவாயை எழுப்ப முயற்சிக்கிறது. தனிநபர்கள் வருவாய்க்கு ஏற்ப செலவினை வைத்துக் கொள்வார்கள். எடுத்துக்காட்டாக தனியார் நிதி என்பது இருக்கக்கூடிய துணி அளவிற்கு மேலங்கி (Coat) தைப்பது போன்றும், பொதுநிதி என்பது மேலங்கியின் தேவைக்கேற்ப துணி அளவை முடிவு செய்வது போன்றதாகும்.
2. கடன்
அரசானது உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வழிகள் மூலம் கடன்களை பெறலாம். மேலும் அரசானது, பத்திரங்களை வெளியிட்டு மக்களிடம் கடனைப் பெறலாம். ஆனால் தனியார் இவ்வாறு அவர்களிடம் கடனைப் பெறமுடியாது.
3. பணம் அச்சடிக்கும் உரிமை
அரசு வேண்டுமெனில் பணத்தை அச்சடிக்கலாம். இது பணத்தை உருவாக்குதல், பகிர்வு செய்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். தனியார் பணத்தை உருவாக்க இயலாது.
4. நடப்பு மற்றும் எதிர்கால முடிவுகள்
அரசானது எதிர்காலத் திட்டங்களை கருத்தில் கொண்டு நீண்டகால முடிவினை மேற்கொள்கிறது. அரசின் முதலீடானது பள்ளிகளுக்கான கட்டிடங்கள் கட்டுதல், மருத்துவமனை மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்வது ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. ஆனால் தனியார் நிதியானது குறுகிய கால திட்டங்களுக்கான நிதியைக் கொண்டவை ஆகும்.
5. நோக்கம்
பொதுத்துறையின் முக்கிய நோக்கம், பொருளாதாரத்தில் சமூக நன்மையை வழங்குவதாகும். தனியார் துறையின் நோக்கம் சொந்த நன்மை உயர்த்துவது, அதாவது இலாபத்தை உச்சப்படுத்துவதாகும்.
6. கட்டாய வருவாய் பெறுவதற்கான வழிகள்
தனிநபரின் வருமானத்திற்கான ஆதாரங்கள் குறைவாகும். ஆனால் அரசுக்கு அதிகமாகும். அரசு தனது அதிகாரவரம்பை பயன்படுத்தி வருவாயைப் பெறலாம்.
7. பெரிய அளவிலான மாற்றங்களை கொண்டுவருவதற்கான திறன்
பொதுநிதிக்கு வருவாய் சார்ந்த பெரிய முடிவுகளை எடுப்பதற்கான திறன் உண்டு. தனது வருவாயை திறமையாக மற்றும் வெளிப்படையாக அரசால் சரிகட்ட இயலும். ஆனால் தனி நபர்கள் அவ்வாறான பெரிய முடிவுகளை எடுக்க இயலாது.