புள்ளியியல் | மூன்றாம் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு - பிரதிநிதித்துவ மதிப்புகள் | 7th Maths : Term 3 Unit 5 : Statistics
பிரதிநிதித்துவ மதிப்புகள்
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் 'சராசரி' என்ற சொல்லைப் பயன்படுத்தும் சூழ்நிலைகளைப் பார்த்திருக்கிறோம். பின்வரும் தகவல்களைக் கவனியுங்கள்
• மே மாதத்தில் சென்னையின் சராசரி வெப்பநிலை 40° C ஆகும்.
• ஒரு கணித அலகுத் தேர்வில் 6 ஆம் வகுப்பின் சராசரி மதிப்பெண்கள் 74
• மாலா சராசரியாகப் படிக்கும் காலம் 4 மணி நேரம்.
• மதன் ஒரு வாரத்தில் சராசரியாகச் செய்யும் செலவுத் தொகை ₹100.
இதுபோன்ற தகவல்களை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பார்க்கிறோம். நாம் மேற்கண்ட உதாரணத்திலிருந்து ஒன்றை எடுத்துக்கொள்வோம். ஓர் கணித அலகுத் தேர்வில் 6 ஆம் வகுப்பின் சராசரி மதிப்பெண்கள் 74 எனில், ஒவ்வொரு மாணவரும் 74 மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றார்கள் என்று அர்த்தமா? நிச்சியமாக இல்லை. சில மாணவர்கள் 74 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், சில மாணவர்கள் 74 மதிப்பெண்களுக்குக் குறைவாகவும் பெற்றிருப்பார்கள். ஆகவே, சராசரி என்பது, கணிதத் தேர்வில் 6 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுச் செயல்திறனைக் குறிக்கிறது.
இதேபோல 40° என்பது மே மாதத்தில் சென்னையின் பிரதிநிதித்துவ வெப்பநிலை. இதனால் மே மாதத்தின் அன்றாட வெப்பநிலை 40° என்று அர்த்தமல்ல. கொடுக்கப்பட்ட தரவுகளில் மிக உயர்ந்த, மிகக்குறைந்த மதிப்புகளுக்கிடையில் சராசரி இருப்பதால், சராசரி என்பது தரவுக்குழுவின் மையப்போக்கின் அளவீடு என்று அழைக்கப்படுகின்றது. வெவ்வேறு வகையான தரவுகளை விவரிப்பதற்கு வெவ்வேறு வகையான பிரதிநிதித்துவ மதிப்பு அல்லது மையப்போக்கு மதிப்பு தேவைப்படுகிறது.
இப்பாடப் பகுதியில் தரவுகளின் கூட்டுச் சராசரி, முகடு மற்றும் இடைநிலையளவு ஆகிய மூன்று வகையான மைய மதிப்புகளைப் பற்றிப் படிப்போம்.
முயன்று பார்
உனது வகுப்பில் உள்ள சக மாணவர்களின் உயரத்தைச் சேகரித்து, அத்தரவை ஏறுவரிசையில் அமைக்கவும்.
தீர்வு :
எனது வகுப்பில் உள்ள 15 சக மாணவர்களின் உயரம்.
130 செமீ, 150 செமீ, 155 செமீ, 142 செமீ, 138 செமீ, 145 செமீ, 148 செமீ, 147 செமீ, 148 செமீ, 143 செமீ, 141 செமீ, 152 செமீ, 147 செமீ, 139 செமீ, 155 செமீ.
ஏறுவரிசையில் :
130 செமீ, 138 செமீ, 139 செமீ, 141 செமீ, 142 செமீ, 143 செமீ, 145 செமீ, 147 செமீ, 147 செமீ, 148 செமீ, 148 செமீ, 150 செமீ, 152 செமீ, 155 செமீ, 155 செமீ.