தயாரித்தல், பண்புகள், வகைகள்: பயன்கள் - சிலிக்கோன்கள் | 12th Chemistry : UNIT 2 : p-Block Elements-I
சிலிக்கோன்கள்:
சிலிக்கோன்கள் அல்லது பாலி சிலாக்சேன்கள் என்பவை கரிம சிலிக்கான் பலபடிகளாகும், இவற்றின் பொதுவான எளிய வாய்ப்பாடு (R2SiO). இவற்றின் எளிய வாய்ப்பாடு , கீட்டோன்களைப் (R2CO) போன்ற அமைப்பை பெற்றிருப்பதால் இவை சிலிக்கோன்கள் என பெயரிடப்பட்டுள்ளன. இந்த சிலிக்கோன்கள் நேர்க்கோட்டுபலபடிகளாகவோ அல்லது குறுக்கப்பலபடிகளாகவோ இருக்கலாம். இவற்றின் மிக அதிக வெப்ப நிலைப்புத் தன்மையின் காரணமாக, இவை உயர்வெப்பப் பலபடிகள் என்றழைக்கப்படுகின்றன.
தயாரித்தல்:
பொதுவாக, டைஆல்கைல்டைகுளோரோ சிலேன்கள் (R2SiC12) அல்லது டைஅரைல்டைகுளோரோ சிலேன்களை Ar2SiC12, நீராற்பகுப்பதன் மூலம் சிலிக்கோன்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை, காப்பர் வினைவேக மாற்றி முன்னிலையில், 570 K வெப்பநிலையில், சிலிக்கான் மீது ஆவிநிலையிலுள்ள RCI அல்லது ArCl ஐ செலுத்தி தயாரிக்கப்படுகின்றன.
டைஆல்கைல்குளோரோ சிலேன்களை (R2SiC12) நீராற்பகுக்கும் போது சங்கிலித் தொடர் பலபடிகள் உருவாகின்றன. இவை இருமுனைகளிலும் நீண்டுகொண்டே செல்கின்றன.
மோனோஆல்கைல்குளோரோ சிலேன்களை (RSiC13) நீராற்பகுக்கும் போது மிகவும் சிக்கலான குறுக்க பலபடிகள் உருவாகின்றன. சங்கிலித் தொடர் சிலிக்கோன்களிலுள்ள முனைய - OH தொகுதிகளிலிருந்து நீர் மூலக்கூறுகளை நீக்குவதன் மூலம் அவற்றை வளைய சிலிக்கோன்களாக மாற்ற இயலும்.
(i) நேர்க்கோட்டு சிலிக்கோன்கள்:
இவை டைஆல்கைல் அல்லது டைஅரைல் சிலிக்கான் குளோரைடுகளை நீராற்பகுத்தலைத் தொடர்ந்து குறுக்க வினைக்கு உட்படுத்தி பெறப்படுகின்றன
a) சிலிக்கோன் இரப்பர்கள் :இவ்வகைசிலிக்கோன்கள், மெத்திலீன் அல்லது அதையொத்த தொகுதிகளைக் கொண்டு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
b) சிலிக்கோன் பிசின்கள் : சிலிக்கோன்களை, அக்ரிலிக் எஸ்டர்கள் போன்ற கரிம பிசின்களுடன் கலப்பதன் வாயிலாக இவை பெறப்படுகின்றன.
(ii) வளைய சிலிக்கோன்கள்
இவை R2SiC12 ஐ நீராற்பகுப்பதன் மூலம் பெறப்படுகின்றன.
(iii) குறுக்கு பிணைப்பு சிலிக்கோன்கள்:
இவை RSiC13ஐ நீராற்பகுப்பதன் மூலம் பெறப்படுகின்றன.
பண்புகள்
குறுக்க பிணைப்புகளின் அளவும், ஆல்கைல் தொகுதியின் தன்மையும், பலபடியின் தன்மையை நிர்ணயிக்கின்றன. இவை எண்ணெய் திரவம் முதல் ரப்பர் போன்ற திண்மங்கள் வரை வேறுபடுகின்றன. அனைத்து சிலிக்கோன்களும் நீர் வெறுக்கும் தன்மை கொண்டவைகளாகும். சிலிக்கானைச் சுற்றியுள்ள கரிம பக்கத் தொகுதிகள் மூலக்கூறுக்கு ஆல்கேன் போன்ற தோற்றத்தை தருகின்றன. இதனால் நீர்வெறுக்கும் பண்பு தோன்றுகிறது. இவை, வெப்பம் மற்றும் மின்கடத்தா பொருட்களாகும். இவை மந்த வேதித் தன்மை கொண்டவையாகும். சிறிய சிலிக்கோன்கள் எண்ணெய் போன்ற திரவங்களாகவும், நீண்ட சங்கிலி அமைப்பைக் கொண்ட உயர் சிலிக்கோன்கள் மெழுகு போன்ற திண்மங்களாகவும் உள்ளன. சிலிக்கோன் எண்ணெயின் பாகு நிலைத்தன்மை மாறாமல் நிலையாக உள்ளது. மேலும் வெப்பநிலையைப் பொறுத்து மாறுவதில்லை. சிலிக்கோன் எண்ணெய்கள் குளிர்காலங்களில் கெட்டியாவதில்லை.
பயன்கள்:
1. சிலிக்கோன்கள் குறைந்த வெப்பநிலை உயவுப் பொருளாகவும், வெற்றிட பம்புகள், உயர் வெப்பநிலை எண்ணெய்த் தொட்டிகளிலும் பயன்படுகின்றன.
2. இவை நீர்வெறுக்கும் ஆடைகள் தயாரித்தலில் பயன்படுகின்றன.
3. இவை, மின்மோட்டார்கள் மற்றும் மற்ற வீட்டு உபயோகப் பொருட்களில் மின்காப்பு பொருளாக பயன்படுகின்றன.
4. சிலிக்கோன்கள் சேர்க்கப்பட்ட பெயிண்ட் மற்றும் எனாமல், அதிக வெப்பநிலை, சூரிய ஒளி, ஈரப்பதம் (ஓதம்) மற்றும் வேதிப்பொருட்கள் தாக்குதல் ஆகியவற்றை தாக்குபிடிக்கின்றன.