ஹைட்ரஜனின் பயன்கள்
1. தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ஹைட்ரஜனில் 90%க்கு மேல், அத்தொழிற்சாலைகளிலேயே தொகுப்பு முறை பயன்பாட்டிக்கு வினைபொருளாகப் பயன்படுகிறது. அம்மோனியாவை பெருமளவில் தயாரிக்க பயன்படும் ஹேபர்முறை இதற்கு ஒரு உதாரணமாகும். நைட்ரிக் அமிலம், உரங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்ட வேதிச் சேர்மங்களை பெருமளவில் தயாரிப்பதில் அம்மோனியா பயன்படுகிறது.
2. தொழிற்சாலைகளில் பெருமளவு கரைப்பானாகப் பயன்படுத்தப்படும் மெத்தனாலை, கார்பன் மோனாக்சைடிலிருந்து தாமிரத்தை (Cu) வினையூக்கியாகக் கொண்டு தயாரிக்கப் பயன்படுகிறது.
3. Pt / H2 ஐப் பயன்படுத்தி, நிறைவுறாத கொழுப்பு எண்ணெய்களை வனஸ்பதி என்றழைக்கப்படும் நிறைவுற்ற கொழுப்புகளாக (Margarine) மாற்றலாம்.
4. உலோகவியலில் உலோக ஆக்சைடுகளை அதிக வெப்பநிலையில் உலோகமாக ஒடுக்க ஹைட்ரஜன் பயன்படுகிறது.
CuO + H2 → Cu + H2O
WO3 + 3 H2 → W + 3 H2O
5. அணுநிலை ஹைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன்-ஆக்சிஜன் கலவையானது உலோகங்களை ஒட்டவும், வெட்டவும் பயன்படுகிறது.
6. ராக்கெட்டுகளை உந்தித்தள்ளும் எரிபொருளாக நீர்ம ஹைட்ரஜன் பயன்படுகிறது.
7. எரிமின்கலங்களில், மின் ஆற்றலை உற்பத்தி செய்ய ஹைட்ரஜன் பயன்படுகிறது. ஹைட்ரஜனை மீள் முறையில் ஏற்றுக்கொள்ளும் உலோகங்களின் தன்மையானது, மறு மின்னூட்டம் செய்யும் வகையிலான உலோக ஹைட்ரைடு மின்கலங்கள் தயாரிப்பதில் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
படம் 4.3 ராக்கெட் எரிபொருளின் பயன்பாடு