HIV பரவுதல், நோய்க்கான அறிகுறிகள் மற்றும் சிகிச்சை, தடுப்பு மற்றும் கட்டுப்பாடு - எய்ட்ஸ் (பெறப்பட்ட நோய்த் தடுப்பாற்றல் குறைவு நோய்) | 10th Science : Chapter 21 : Health and Diseases
எய்ட்ஸ்
(பெறப்பட்ட நோய்த் தடுப்பாற்றல் குறைவு நோய்)
மனித தடைகாப்பு குறைவு வைரஸால்
(HIV) ஏற்படுத்தப்படும்
ஒரு கொடிய நோய் எய்ட்ஸ் ஆகும். இதில் நோய்த் தடைக்காப்பு மண்டலம் உடலின் நோய்க்
காரணிகளை ஒடுக்குவதில் தோல்வியடைகிறது. இவை லிம்போசைட்டுகளைத் தாக்கி
பாதிப்படைந்த நபர்களில் நோய்த் தொற்றினை ஏற்படுத்துகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
இந்தியாவின்
டாக்டர் சுனிதி சால்மோன் HIV ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையின்
முன்னோடி ஆவார். இவர் சென்னையில் 1980 -களில் எய்ட்ஸ்
ஆராய்ச்சிக்கான முதல் தன்னார்வ சோதனை மற்றும் ஆலோசனை மையங்களை ஏற்படுத்தினார்.
இவரது குழுவினர் 1985 - இல் இந்தியாவில் முதன் முதலில் HIV
தொற்றுக்கான ஆதாரத்தினை ஆவணப்படுத்தினார்கள் (இந்தியாவின் முதல்
எய்ட்ஸ் நோயாளி சென்னையைச் சேர்ந்தவர் ஆவார்).
1. HIV பரவுதல்
எய்ட்ஸ் நோய்க்கான வைரஸ்
சிறுநீர், கண்ணீர்,
உமிழ்நீர், தாய்ப்பால் மற்றும் கலவிக்கால்வாய்
சுரப்புகளில் காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட நோயாளியிடமிருந்து இரத்தத்தின் மூலம்
நலமான ஒருவருக்குப் பரவுகிறது. தொடுதல் அல்லது உடல் தீண்டல் வழியாக HIV / எய்ட்ஸ் பரவுவதில்லை. இது உடல் திரவங்கள் மற்றும் இரத்தத் தொடர்பின் மூலம்
பரவுகிறது.
பொதுவாக HIV பரவும்
முறைகள்
(i) பாதிக்கப்பட்டவருடன்
உடலுறவு கொள்ளுதல்.
(ii) போதை
மருந்து ஊசி பயன்படுத்துவோர் இடையே நோய்த் தொற்று ஊசிகள் மூலமாகப் பரவுதல்.
(iii) பாதிக்கப்பட்ட
நபரின் நோய்த் தொற்றுடைய இரத்தம் மற்றும் இரத்தப்பொருள்களைப் பெறுவதன் மூலம்
பரவுதல்.
(iv) பாதிக்கப்பட்ட
தாயிடமிருந்து சேய்க்கு தாய்சேய் இணைப்புத்திசு மூலம் பரவுதல்.
2. எய்ட்ஸ்
நோய்க்கான அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
அறிகுறிகள்
பாதிக்கப்பட்ட நபர்களில் நோய்
எதிர்ப்பாற்றல் குறைகிறது. இதனால் அந்நபர்கள் வைரஸ், பாக்டீரியா, புரோட்டோசோவா
மற்றும் பூஞ்சைத் தொற்றினால் அதிகளவில் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். நிணநீர்
முடிச்சுகளில் வீக்கம், மூளைச் சேதம், நினைவாற்றல்
குறைவு, பசியின்மை, எடை குறைதல்,
காய்ச்சல், நீடித்த வயிற்றுப்போக்கு, இருமல், சோம்பல், தொண்டை
அழற்சி, வாந்தி மற்றும் தலைவலி போன்றவை இந்நோயின்
அறிகுறிகளாகும்.
கண்டறிதல்
HIV வைரஸை எலைசா
(ELISA-Enzyme Linked Immuno Sorbent Assay) சோதனை
மற்றும் வெஸ்டர்ன் பிளாட் சோதனை மூலம் உறுதிப்படுத்தலாம்.
சிகிச்சை
ரெட்ரோ வைரஸிற்கு எதிரான
மருந்துகள், நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகின்ற சிகிச்சையின் மூலம் பாதிக்கப்பட்ட
நபரின் வாழ்நாளை நீட்டிக்கலாம்.
3. எய்ட்ஸ்
தடுப்பு மற்றும் கட்டுப்பாடு
கீழ்க்கண்ட படிநிலைகள் HIV நோய்த்
தொற்றினை பரவாமல் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
(i) இரத்த
வங்கியிலிருந்து இரத்தம் பெற்று ஏற்றுவதற்கு முன்னர் அக்குறிப்பிட்ட வகை
இரத்தமானது HIV சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
(ii) மருத்துவமனைகளில்
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஊசிகளை மீண்டும் பயன்படுத்தாமலிருப்பதை உறுதி
செய்ய வேண்டும்.
(iii) பாதுகாப்பான
பாலுறவு மற்றும் ஆணுறைகளைப் பயன்படுத்துவதன் நன்மைகளைப் பரிந்துரைக்க வேண்டும்.
(iv) எய்ட்ஸ்
நோயின் விளைவுகளை விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் அறிவுறுத்த வேண்டும்.
(v) எய்ட்ஸ் / HIV
நபர்களை குடும்பம் மற்றும் சமுதாயத்திலிருந்து தனிமைப்படுத்துதல்
கூடாது.
மேலும் அறிந்து கொள்வோம்
மக்களில்
பலர் எய்ட்ஸ் பற்றிய அறியாமையில் உள்ளனர். இதன் மூலம் நாம் கூறுவது "அறியாமையினால்
இறக்கக் கூடாது". நம் நாட்டில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) மற்றும் பிற அரசு சாராத தொண்டு அமைப்புகள் (NGO'S) மக்களுக்கு
எய்ட்ஸ் பற்றிய கல்வியைப் புகட்டுகின்றன. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 1 ஆம் நாள் "உலக எய்ட்ஸ் தினம்" ஆக அனுசரிக்கப்படுகிறது.