மதுவினால் உடல் நலத்திற்கு ஏற்படும் தீமையான விளைவுகள் - ஆல்கஹாலின் தவறான பயன்பாடு | 10th Science : Chapter 21 : Health and Diseases
ஆல்கஹாலின்
தவறான பயன்பாடு
சமுதாயத்தில் செல்வந்தர்கள்
மற்றும் ஏழை மக்களால் மேற்கொள்ளப்படும் ஆல்கஹால் பயன்படுத்துதல் (நுகர்வு) என்பது
ஒரு சமுதாயத் தீங்கு ஆகும். ஆல்கஹாலை சார்ந்திருத்தல் மதுப்பழக்கம் எனவும், அடிமையாதல் மதுவுக்கு
அடிமையாதல் எனவும் அழைக்கப்படுகிறது. இது ஆல்கஹால் தவறான பயன்பாடு
என்று அழைக்கப்படுகிறது. மது அருந்துதல் ஒருவரின் உடல், உடலியல்
மற்றும் உளவியல் செயல்பாடுகளை பாதிப்பிற்குள்ளாக்குகிறது.
செயல் - 2
மது
அருந்தாத மற்றும் மது அருந்திய நபர்களின் கல்லீரல் படங்களை சேகரிக்கவும்.
அப்படங்களை ஒப்பிட்டு நீ கண்டறிந்த மாற்றங்களைக் குறிப்பிடவும்.
நீண்ட காலமாக மது அருந்துவதால், அது ஒரு மயக்க
மருந்தாகவும் மற்றும் வலி நிவாரணி போன்றும் செயல்பட்டு நரம்பு மண்டலத்தை நலிவடையச்
செய்கிறது. அவற்றின் தீமை பயக்கும் சில விளைவுகளாவன,
· நரம்பு செல்லைப் பாதித்து பல்வேறு விதமான மன
மற்றும் உடல் ரீதியான தொந்தரவுகளை உண்டாக்குகிறது.
· உடல் உறுப்புகளின் ஒருங்கிணைப்பைக் குறைக்கிறது.
· மங்கலான, குறைந்த பார்வை,
சாலைகளில் விபத்துகளில் முடிகிறது.
· இரத்த நாளங்களின் விரிவடைதல் இதயத்தின்
செயல்பாட்டைப் பாதிக்கின்றது.
· கல்லீரல் சேதத்தினால் கல்லீரலில் அதிக அளவு
கொழுப்பு சேமிக்கப்பட்டு சிர்ரோஸிஸ் மற்றும் நார்த் திசுக்கள் உருவாதலை ஏற்படுத்துகிறது.
· உடல் தன் கட்டுப்பாட்டையும், தன்ணுணர்வினையும்
இழந்து உடல் நலக் கோளாறுகளை உண்டாக்கி இறுதியில் இறப்பை ஏற்படுத்துகிறது.