டயாபடீஸ்
மெல்லிடஸ் (நீரிழிவு நோய்)
டயாபடீஸ் மெல்லிடஸ் ஒரு
நாள்பட்ட வளர்சிதை மாற்றக் கோளாறாகும். (கிரேக்கத்தில் டயாபடீஸ் - ஓடுகின்ற :
மெல்லிடஸ் - இனிப்பு எனப் பொருள்படும்)
இன்சுலின் சுரப்பியின் பற்றாக்குறையான, குறைபாடான
இன்சுலின் செயல்பாடு அல்லது இன்சுலின் சுரக்காமை போன்றவற்றால் அதிகரிக்கும்
இரத்த குளுக்கோஸ் அளவு இதன் பண்பாகும். இது பொதுவாக அதிக அளவில் காணப்படும்
கணையக் குறைபாடாகும். வகை - 1 மற்றும் வகை-2 நீரிழிவு
நோய்த்தாக்கம் உலக அளவில் அதிகரித்து வருகிறது.
நீரிழிவு நோயாளிகளில் 10%-லிருந்து 20%
IDDM (Insulin Dependent Diabetes Mellitus) வகையைச்
சார்ந்தவர்களாவர். இது குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே ஏற்படுகிறது.
இது திடீரெனத் தோன்றும், உயிருக்கு ஆபத்தானது. இது கணையத்தில்
உள்ள பீட்டா செல்கள் அழிவதன் காரணமாக ஏற்படுகிறது. இதனால் வழக்கத்திற்கு மாறாக,
போதுமான அளவு இன்சுலின் சுரக்காமல்
இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது (ஹைபர்கிளைசீமியா).
காரணங்கள்
: மரபணு
மரபுவழி மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் (வைரஸ் காரணமாக தொற்றுகள், கடுமையான மன
அழுத்தம்) ஆகியவை இவ்வகையான நீரிழிவு நோய்க்கு காரணமாகின்றன.
வயதானோரின்
நீரிழிவு நோய்
என்று அழைக்கப்படும். இது (NIDDM - Non Insulin Dependent Diabetes Mellitus) 80%-லிருந்து 90% நீரிழிவு நோயாளிகளில் காணப்படுகிறது.
இது மெதுவாகவும், மிதமாகவும் உருவாகி அதிக நிலைப்புத் தன்மை
பெறுகிறது. கணையத்தால் சுரக்கப்படுகின்ற இன்சுலினின் அளவு போதுமானதாக
உள்ளது. ஆனால் அதன் செயல்பாடு குறைபாடு உள்ளதாகக் காணப்படுகிறது.
இன்சுலினின் இலக்கு செல்கள் அதற்கு பதில்வினை புரிவதில்லை. இது செல்களுக்குள் குளுக்கோஸ்
செல்வதை அனுமதிப்பதில்லை.
காரணங்கள்
: இதற்கான
காரணங்கள் பல காரணிகளைக் கொண்டது. வயது அதிகரித்தல் (நடுத்தர மற்றும் வயதானவர்களை
பாதிக்கும்), உடல் பருமன், உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறை,
அளவுக்கதிகமாக உண்ணுதல், உடல் செயல்பாடுகள்
இல்லாமை போன்ற காரணிகள் இதற்கு காரணமாய் அமைகின்றன.
மேலும் அறிந்து கொள்வோம்
இந்தியாவில்
எட்டு பேரில் ஒருவர் நீரிழிவு நோயாளி ஆவார். WHO-வின் திருத்தம்
செய்யப்பட்ட புள்ளி விவரப்படி 2025-இல் இந்தியாவில் 57.2
மில்லியன் நீரிழிவு நோயாளிகள் இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சராசரி வயது 40 ஆகும். பிற
நாடுகளில் 55 வயதாகும். 2030 - இல்
இறப்பை ஏற்படுத்துகின்ற காரணிகளில் நீரிழிவு நோய் 7-வதாகத்
திகழுமென உலக சுகாதார (WHO) அமைப்பு தெரிவிக்கிறது.
அறிகுறிகள் : நீரிழிவு நோய் பல வளர்சிதை மாற்றங்களுடன் தொடர்புடையது. மிக
முக்கியமான அறிகுறிகளாவன,
· இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரித்தல் (ஹைபர்கிளைசீமியா).
· அதிகளவு சிறுநீர் வெளியேறுதல் (பாலியூரியா) அதனால்
ஏற்படும் நீர் இழப்பு.
· நீரிழப்பினால் ஏற்படும் தாகம் (பாலிடிப்சியா)
மற்றும் அதனைத் தொடர்ந்து அதிகளவு நீர் பருகுதல்.
· அதிகப்படியான குளுக்கோஸ் சிறுநீரில்
வெளியேற்றப்படுதல் (கிளைகோசூரியா)
· அதிகப்படியான குளுக்கோஸ் சிறுநீரில் வெளியேறுவதன்
காரணமாக ஏற்படும் அதிகப்படியான பசி (பாலிபேஜியா).
· சோர்வு மற்றும் எடை இழப்பு.
உங்களுக்குத் தெரியுமா?
WHO-வின் அள வீட்டின்படி உணவுண்ணா நிலையில் இரத்த குளுக்கோஸின் அளவு 140
மிகி/டெசிலி விட அதிகமாகவும் அல்லது சீரற்ற இரத்த குளுக்கோஸ் அளவு 200 மிகி/டெசிலி-ஐ விட அதிகமாகவும் இரண்டு சந்தர்ப்பங்களுக்கு மேல்
காணப்பட்டால் டயாபடீஸைக் கண்டறிந்து உறுதிப்படுத்துதல் அவசியமானதாகும்.
நீரிழிவின் மேலாண்மையானது அதன்
வகை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும். உணவுக் கட்டுப்பாடு, குறை இரத்த
சர்க்கரைக்கான மருந்துகள், இன்சுலினுக்கான ஊசிகள் மற்றும்
உடற்பயிற்சி ஆகிய மேலாண்மை முறைகள் மூலம் இரத்த குளுக்கோஸின் அளவை சீராகப்
பராமரிப்பதே நீரிழிவு மேலாண்மையின் ஒட்டு மொத்த குறிக்கோளாகும்.
உணவுக் கட்டுப்பாட்டு மேலாண்மை
குறைவான கார்போஹைட்ரேட்
மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகள் மிகவும் பொருத்தமானவை. கார்போஹைட்ரேட்டுகள்
ஸ்டார்ச் மற்றும் சிக்கலான சர்க்கரை வடிவத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை (சுக்ரோஸ், குளுக்கோஸ்) எடுத்துக் கொள்ளுதல் தவிர்க்கப்பட
வேண்டும். நாள்தோறும் முழு தானியங்கள், சிறு தானியங்கள்
(சோளம், கம்பு, கேழ்வரகு) கீரை வகைகள்,
கோதுமை மற்றும் தீட்டப்படாத அரிசி போன்றவற்றை உள்ளடக்கியதாக உணவு
முறை அமைய வேண்டும்.
மொத்த கலோரி மதிப்பில் 50 - 55% அளவு
கார்போஹைட்ரேட் மூலம் பராமரிக்கப்பட வேண்டும். அத்தியாவசியமான அமினோ அமிலங்களைப்
பெற 10 - 15% புரதம் கொண்ட உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மொத்த கலோரியில் 15 - 25% கொழுப்பைக் கொண்டிருக்க வேண்டும்.
நிறைவுற்ற கொழுப்பினை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். நிறைவுறாத பல்கொழுப்பு
அமிலங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
இன்சுலின் மூலம் மேலாண்மை செய்தல்
இரத்தத்தில் குளுக்கோஸின்
அளவைப் பராமரிப்பதில் வணிக ரீதியில் தயாரிக்கப்படும் (குறுகிய மற்றும் நீண்ட
நாள்கள் செயல்படும்) இன்சுலின்களும் உதவுகின்றன.
உடல் செயல்பாடு
நீரிழிவு நோயைக்
கட்டுப்படுத்துவதில் உடற்பயிற்சி முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் இது
தசைகளுக்கு வலுவூட்டி,
அவற்றை விறைப்புத் தன்மையுடன் பராமரிக்கிறது.
கல்வி மற்றும் விழிப்புணர்வு
நீரிழிவு நோயால்
பாதிக்கப்பட்டவர்கள்,
நோயின் தன்மை, இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில்
இல்லாதபோது நோயின் தீவிரம் மற்றும் அதனால் ஏற்படும் நீண்ட கால சிக்கலுக்கான
வாய்ப்புகள் ஆகியவற்றைப் பற்றிய கல்வியறிவைப் பெற வேண்டும். உணவு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் தொடர்பான அறிவுரைகள் விளக்கப்பட வேண்டும்.
தகவல் துணுக்கு
கரையாத
நார்ச்சத்து கொண்ட ஆளி விதைகள், கொய்யா, தக்காளி மற்றும் கீரைகள் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் உதவுகின்றன.