வகைகள், புற்றுநோய்க் காரணிகள், சிகிச்சை, தடுப்பு வழிமுறைகள் - புற்றுநோய் | 10th Science : Chapter 21 : Health and Diseases
புற்றுநோய்
உலகளவில் ஆண்டு தோறும் 4 மில்லியன்
மக்கள் புற்றுநோயின் காரணமாக இறக்கின்றனர். இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும்
அதிகமானோர் புற்றுநோயின் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். புற்றுநோய் என்ற சொல்லுக்கு
இலத்தீன் மொழியில் ‘நண்டு’ என்று
பொருள். புற்றுநோயைப் பற்றிய படிப்புக்கு “ஆன்காலஜி”
(ஆன்கோ - கட்டி) என்று பெயர்.
கட்டுப்பாடற்ற, அபரிமிதமான
செல் பிரிதல் புற்று நோயாகும். இது அருகிலுள்ள திசுக்களுக்குள் ஊடுருவி, கட்டிகள் அல்லது நியோபிளாசத்தை (புதிய வளர்ச்சி) உருவாக்கி
திசுக்களை அழிக்கிறது. இது வேறுபட்ட செல்களின் தொகுப்பாகும். இது இயல்பான செல்
பிரிதலை மேற்கொள்வதில்லை.
புற்று செல்கள் உடலின்
தொலைவிலுள்ள பாகங்களுக்கும் இடம் பெயர்ந்து புதிய திசுக்களை அழிக்கின்றன.
இந்நிகழ்வு மெட்டாஸ்டாசிஸ் என்று அழைக்கப்படுகிறது. மெட்டாஸ்டாசிஸ்ஸினால் அடிக்கடி
பாதிப்புக்கு உள்ளாகும் உறுப்புகள் நுரையீரல், எலும்புகள், கல்லீரல்,
தோல் மற்றும் மூளை ஆகும்.
மேலும் அறிந்து கொள்வோம்
உலக
புற்றுநோய் நாள் - பிப்ரவரி 4
தேசிய
புற்றுநோய் விழிப்புணர்வு நாள் - நவம்பர் 7
1. புற்றுநோயின் வகைகள்
உருவாகும் திசுக்களின்
அடிப்படையில் புற்றுநோய்கள் வகைப்படுத்தப்படுகின்றன. அவை,
1. கார்சினோமா: எபிதீலியல் மற்றும் சுரப்பிகளின்
திசுக்களில் உருவாகிறது. இவ்வகைப் புற்றுநோய் தோல், நுரையீரல்,
வயிறு மற்றும் மூளை ஆகியவற்றில் ஏற்படலாம். சுமார் 85% புற்றுநோய்கள் இவ்வகையைச் சார்ந்தவை
2. சார்கோமா: இணைப்பு மற்றும் தசைத்
திசுக்களில் உருவாகும் புற்றுநோய் இவ்வகையைச் சார்ந்தது. இவ்வகைப் புற்றுநோய்
எலும்பு, குருத்தெலும்பு,
தசை நாண்கள், அடிப்போஸ் திசு
மற்றும் தசைகள் ஆகியவற்றில் ஏற்படலாம். புற்றுநோயில் 1% இவ்வகையைச் சேர்ந்தவை.
3. லியூக்கேமியா: எலும்பு மஜ்ஜை மற்றும்
நிணநீர் முடிச்சுகளில் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது இதன்
பண்பாகும். இது இரத்தப் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாகக்
காணப்படும் இவ்வகைப் புற்றுநோய் 15 வயதுக்கும் குறைவான குழந்தைகளில் பாதிப்பை
ஏற்படுத்துகிறது.
மேலும் அறிந்து கொள்வோம்
கட்டிகளின்
வகைகள் :
தீங்கற்ற அல்லது மேலிக்னன்ட் வகை அல்லாத கட்டிகள்
உறுப்புகளுக்குள்ளாகவே பாதிப்பை ஏற்படுத்தும். உடலின் மற்ற பாகங்களுக்கு பரவாது.
மேலிக்னன்ட் கட்டிகள்
பெருக்கமடைந்த
செல் குழுக்கள் வேகமாக வளர்ச்சியடைந்து சுற்றியுள்ள இயல்பான திசுக்களில் ஊடுருவி
பாதிப்பை ஏற்படுத்தும்.
2. புற்றுநோய்க்
காரணிகள்
புற்றுநோயை உண்டாக்கும்
காரணிகள் 'கார்சினோஜென்கள்' அல்லது புற்றுநோய்க் காரணிகள் என்றழைக்கப்படுகின்றன. இவை, இயற்பியல்,
வேதியியல், அயனியாக்கும் கதிர்வீச்சுகள்
மற்றும் உயிரியல் காரணிகளாகும்.
இயற்பியல்
காரணிகள்
அதிகளவு புகைபிடித்தலினால்
நுரையீரல், வாய்க்குழி, தொண்டை மற்றும் குரல்வளைப் புற்றுநோய்
உண்டாகிறது. வெற்றிலை மற்றும் புகையிலை மெல்லுதல் வாய்ப் புற்றுநோயை
ஏற்படுத்துகிறது. தோலின் மீது படும் அதிக சூரிய ஒளியினால் தோல் புற்றுநோய்
ஏற்படலாம்.
வேதியியல்
காரணிகள்
புகையிலை, காஃபின்,
நிலக்கரி மற்றும் எண்ணெய் ஆகியவற்றை எரிப்பதால் உருவாகும் பொருட்கள்,
பூச்சிக் கொல்லிகள், கல்நார், நிக்கல், சில சாயங்கள், செயற்கை
இனிப்பூட்டிகள் போன்றவை புற்றுநோயைத் தூண்டுகின்றன.
கதிரியக்கம்
அயனியாக்கும் கதிர்வீச்சுகளான
எக்ஸ் - கதிர்கள்,
காமா கதிர்கள், கதிரியக்கப் பொருள்கள் மற்றும்
அயனியாகாத கதிர்வீச்சுக்களான UV கதிர்கள் DNA - வை பாதிப்பிற்குள்ளாக்கி புற்றுநோய் உண்டாக வழிவகுக்கிறது.
உயிரியல்
காரணிகள்
புற்றுநோயை உண்டாக்கும்
வைரஸ்கள் ஆன்கோஜெனிக் வைரஸ்கள் எனப்படும்.
3. புற்றுநோய்
சிகிச்சை
புற்றுநோய் சிகிச்சை கீழ்க்கண்ட
வழிமுறைகளை உள்ளடக்கியது.
அறுவை
சிகிச்சை
புற்றுக்கட்டிகளை அறுவை
சிகிச்சையின் மூலம் நீக்குவதால், இது அருகிலுள்ள செல்களுக்கு மேலும் பரவாமல்
தடுக்கலாம்.
கதிரியக்க
சிகிச்சை
சுற்றியுள்ள சாதாரண செல்களை
பாதிக்காமல் புற்றுநோய் செல்களை மட்டுமே கதிர்வீச்சின் மூலம் அழிப்பது.
வேதிமருந்து
சிகிச்சை (கீமோதெரபி)
இது எதிர்ப் புற்றுநோய்
மருந்துகளை உள்ளடக்கியது. இது செல்பிரிதலைத் தடுப்பதன் மூலம் புற்று செல்களை
அழிக்கிறது.
தடைகாப்பு
சிகிச்சை
உயிரியல் துலங்கல் மாற்றிகளான
இண்டர்பெரான்கள் தடைகாப்பு மண்டலத்தைத் தூண்டுவதன் மூலம் கட்டிகளை அழிக்கின்றன.
4. புற்றுநோய்
தடுப்பு வழிமுறைகள்
புற்றுநோய் தடுப்புத்
திட்டங்கள், முதன்மை தடுப்பு மற்றும் ஆரம்பநிலையில் கண்டறிதல் ஆகியவற்றில் கவனம்
செலுத்த வேண்டும்.
புகைபிடித்தலைத் தவிர்ப்பதால்
நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கலாம். தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் நச்சு
நிறைந்த மாசுக் காரணிகளின் பாதிப்பிலிருந்து விடுபட பாதுகாப்பு நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும். தோல் புற்றுநோயை தடுக்க அதிகப்படியான கதிர்வீச்சுக்கு
உட்படுதலைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.