இதய
நோய்கள்
இதய நோய்கள், இதயம் மற்றும்
இரத்த நாளங்களுடன் தொடர்பு கொண்டவை. பரவலாகக் காணப்படும் இதயக்குழல் நோய்
(கரோனரி இதய நோய் - CHD), இரத்த நாளங்களில் கொலஸ்டிரால் படிவதால் ஏற்படுகிறது.
கொழுப்பு படிதலானது, வழக்கமாக
குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்கி பல ஆண்டுகள் நீடிப்பதன் காரணமாக இதய நோய்
உண்டாகிறது. இவை மெல்லிய கொழுப்பு கீரல்கள் முதல் சிக்கலான நாரிழைத் தட்டுகளான,
பிளேக் உருவாவது வரை இருக்கலாம். இது
இதயத் தசைகளுக்கு இரத்தத்தை வழங்குகின்ற பெரிய மற்றும் நடுத்தர அளவுடைய தமனிகளைச்
சுருங்கச் செய்வதன் மூலம், ஆர்த்ரோஸ்கிளிரோசிஸ் நோய்க்கு வழிவகுக்கிறது. மேலும் இது திடீரெனத் தோன்றும் இஸ்கிமியா
(இதயத் தசைகளுக்கு குறைவான இரத்த ஓட்டம்) மற்றும் இதயத் தசை நசிவுறல்
(இதயத் தசை திசுக்களின் இறப்பு) நோய்க்கு வழிவகுக்கிறது.
மேலும் அறிந்து கொள்வோம்
இந்தியர்களின்
இரத்தத்தில் இருக்க வேண்டிய விரும்பத்தக்க கொழுப்பின் அளவானது 200 மிகி/டெசிலி ஆகும். இரத்தத்தில் கொழுப்பின் அளவு 200லிருந்து 300 மிகி/டெசிலி ஆக அதிகரிக்கும் போது
இதயக் குழல் (கரோனரி இதய நோய்) நோய்க்கான ஆபத்தும் அதிகரிக்கிறது.
ஆபத்து காரணிகள்
இதய நோய்க்கான முக்கிய காரணம்
மற்றும் பங்களிப்புக் காரணிகளாக ஹைபர் கொலஸ்டீரோலீமியா (இரத்த கொழுப்பு
அதிகரித்தல்) மற்றும் மிகை இரத்த அழுத்தம் (ஹைபர்டென்சன்) போன்றவை விளங்குகின்றன.
இதற்கு சிகிச்சை மேற்கொள்ளாவிடில், மூளை மற்றும் சிறுநீரகங்களில் கடுமையான பாதிப்பை
உண்டாக்கி இறப்பை ஏற்படுத்தலாம்.
காரணங்கள்
பாரம்பரியம் (குடும்ப வரலாறு), அதிகளவு
நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ராலைக் கொண்ட உணவு, உடற்பருமன்,
வயது அதிகரித்தல், புகை பிடித்தல், உணர்ச்சிவசப்படுதலால் ஏற்படும் மன அழுத்தம், இயக்கமில்லாத
வாழ்க்கை முறை, அதிகளவு ஆல்கஹாலை உட்கொள்ளுதல் மற்றும் உடல்
உழைப்பின்மை போன்றவை இதய நோய்க்கான காரணங்களாகும்.
அறிகுறிகள்
மூச்சுத் திணறல், தலைவலி,
சோர்வு, தலை சுற்றல், நெஞ்சு
வலி, கால் வீக்கம் மற்றும் இரைப்பை குடல் தொந்தரவுகள்
போன்றவை இதய நோயின் அறிகுறிகளாகும்.
உங்களுக்குத் தெரியுமா?
HDL (அதிக அடர்த்தி கொண்ட லிப்போபுரதம்) அல்லது நல்ல கொலஸ்ட்ரால் இதய
நோய்க்கான ஆபத்தை குறைக்கிறது. மாறாக LDL (குறை அடர்த்தி
கொண்ட லிப்போபுரதம்) இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது.
உணவுக் கட்டுப்பாடு
குறைவான கலோரி கொண்ட உணவினை
உட்கொள்ளல், நிறைவுற்ற கொழுப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் கொண்ட உணவு வகைகள், குறைவான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சாதாரண உப்பு ஆகியவற்றைக் குறைவாக
உடகொள்ளுதல் போன்றவை நாம் உணவு முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களாகும். அதிகளவு
நிறைவுறாத பல்கொழுப்பு அமிலங்கள் (PUFA) கொண்ட உணவு
அவசியமானதாகும். நார்ச்சத்து மிக்க உணவுகள், பழங்கள்,
காய்கறிகள், புரதம், கனிமங்கள்
மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளுதல் தேவையானதாகும்.
உடல் செயல்பாடுகள்
நாள்தோறும் உடற்பயிற்சி
செய்தல், நடத்தல்
மற்றும் யோகா போன்றவை உடல் எடையைப் பராமரிப்பதற்கு அத்தியாவசியமான ஒன்றானதாகும்.
அடிமைப்படுத்தும் பொருள்களை தவிர்த்தல்
ஆல்கஹால் பருகுதல் மற்றும்
புகைபிடித்தலை தவிர்க்க வேண்டும்.
செயல்பாடு - 3
மிகை
இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களைத் தடுப்பதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய
மற்றும் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் அடங்கிய விளக்கப்படம் தயாரிக்கவும்.
இந்நிலையைச் சமாளிக்க உணவுக் கட்டுப்பாடு அல்லாமல் பின்பற்றப்பட வேண்டிய வாழ்க்கை
நடைமுறை மாற்றங்களைக் கூறுக.