இந்திய மக்களாட்சியின் சாதனைகள்
இந்தியாவையும், இந்திய அரசமைப்பையும் உருவாக்கிய நம் முன்னோர்கள் ஒரு வலிமையான மக்களாட்சிக்கு அடித்தளத்தை இட்டுச்சென்றுள்ளனர். இது நம் இந்தியாவை சிறந்த ஒரு நாடாகத் திகழச்செய்கின்றது. நமது மக்களாட்சியின் அடித்தளமானது நம் அரசமைப்பின் சமூக அரசியல் மற்றும் பொருளாதார மாற்றத்திற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. நம் அரசமைப்பின் முகவுரையானது அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள், வழிகாட்டு நெறிமுறைகள், நாடாளுமன்ற மக்களாட்சி முறை மற்றும் சட்ட திருத்த நடைமுறைகள், நீதிப் புனராய்வு மற்றும் அரசமைப்பின் அடிப்படை அம்சக் கோட்பாடுகள் என அரசு செயல்பட வேண்டிய விதத்தை காட்டும் ஒரு வழிகாட்டியாக உள்ளது.
❖ சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தல் 1951ம் ஆண்டு நடந்த போது, களத்தில் 54 அரசியல் கட்சிகள் இருந்தன. சமீபத்தில் நடந்து முடிந்த 2014ம் ஆண்டு பொது தேர்தலின் போது அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 264 ஆக கூடி இருந்தது. இதிலிருந்து அரசியல் நடைமுறை விரிவாகவும் ஆழமாகவும் மாறிவருவது புலனாகிறது.
❖ சுதந்திர இந்தியாவில் 1951ஆம் ஆண்டு நடந்த முதல் பொதுத்தேர்தலில் 17.30 கோடி இந்திய மக்கள் வாக்களிக்கும் உரிமை பெற்று இருந்தனர். இவர்களில் 44.87 சதவிகிதத்தினரே வாக்களித்தனர். நாட்டின் 16வது பொதுத்தேர்தல் 2014ஆம் ஆண்டு நடந்த போது வாக்காளர்களின் எண்ணிக்கை 81.40 கோடியாக அதிகரித்திருந்தது. இதில் 66.4 சதவிகிதத்தினர் வாக்களித்தனர். இவர்களில் 67.9 சதவீதத்தினர் ஆண்கள் மற்றும் 65.6 சதவீதத்தினர் பெண்கள். இந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கையும் 8251 ஆக அதிகரித்திருந்தது.
❖ 2004ஆம் ஆண்டு முதல் வாக்குகள், மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தின் மூலமாக பதிவு செய்யப்படுகின்றன. இந்த இயந்திரங்கள், இந்தியாவிலேயே தயார் செய்யப்படுகின்றன. இவற்றின் துல்லியம், மற்றும் ரகசியம் காக்கப்படுதல் ஆகியவை வெற்றிகரமாக சோதித்தறியப்பட்டுள்ளது.
❖ நம் தேர்தல் முறையானது அதிக வாக்குகளை எண்ணிக்கை அடிப்படையில் பெற்றவர் வெற்றி பெற்றவர் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பிரதிநிதி பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறார். சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில் தேர்தல் நடைபெறும். இதன் மூலம் வாக்காளர்கள் தங்களின் பிரதிநிதிகளை சட்டமன்றத்திற்கும் நாடாளு மன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கின்றனர்.
❖ நம் நாட்டில் 1989ஆம் ஆண்டிலிருந்து 18 வயது பூர்த்தியான அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது மக்களாட்சி எனும் மகுடத்தில் மேலும் ஒரு சிறகாகும்.
❖ உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடான இந்தியா, தனது அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து, மாநிலங்களின் பல்வேறு கோரிக்கைகளையும் ஏற்று கூட்டாட்சி தத்துவத்துடன் ஒரு வெற்றிகரமான அரசாக திகழ்கிறது.
❖ இந்திய அரசமைப்பின் 73-வது மற்றும் 74வது சட்டத் திருத்தம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும், பெண்களுக்கும் உள்ளாட்சி அரசாங்க அமைப்புகளான கிராம ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகரட்சிகளில் உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் போட்டியிட இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது.
❖ இந்திய மக்களாட்சி முறையானது இளமைத் துடிப்போடு உள்ள உத்வேகமான ஒரு மக்களாட்சியாகும். இந்திய ராணுவம் கூட அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தின் மீது எவ்வித செல்வாக்கையும் செலுத்த முடியாது. அதேசமயத்தில் ராணுவ அமைப்புக்கு முழு அதிகாரமும், உரிய மரியாதையும் அளிக்கப்படுகிறது.
மக்களாட்சி முறையானது அரசியல் அதிகாரத்தில் மிக முக்கிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. மக்களாட்சி முறையினால், அரசியல் அதிகாரமானது மத்திய மற்றும் உயர் வர்க்கம் மற்றும் நகர சமூகத்திடமிருந்து மெல்ல விலகி அது தற்போது சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களிடம் உள்ளது. சுதந்திரத்திற்குப்பின் அரசமைப்பின் மூலமாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு போலவே பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் அரசு பதவிகளிலும், சட்டமன்றங்களிலும் இடஒதுகீட்டை பெற்றுள்ளனர்.
❖ இந்தியாவின் பத்திரிகை சுதந்திரம் மற்றும் சுதந்திரமான நீதித்துறையானது இந்திய சமூகம் தொடர்ந்து சட்டத்தின் ஆட்சியின் படி செயல்பட வழிவகை செய்கிறது.
❖ இந்தியர்களின் சராசரி ஆயுட்காலமானது 36 வருடங்கள் என்று 1951ஆம் ஆண்டில் இருந்தது. இது 2014-ஆம் ஆண்டு கிட்டதட்ட இரட்டிப்பாகி 66 வருடங்கள் என்று உயர்ந்துள்ளது. இதற்கு காரணமாக மருத்துவத்துறையில் இந்தியாவின் வளர்ச்சி, அனைவரையும் சென்றடைய கூடிய வகையில் அரசின் சுகாதார திட்டங்கள், தொற்றுநோய்கள் மற்றும் கொள்ளை நோய்கள் ஒழிப்புக்கான மருந்துகள் மற்றும் அதற்கான திட்டமிடல் போன்றவற்றை கூறலாம்.
❖ இதை போலவே சின்னம்மை மற்றும் இளம்பிள்ளை வாதம் ஆகிய நோய்களும் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டன. கல்வித்துறையிலும் மாபெரும் வளர்ச்சியை இந்தியா கண்டுள்ளது. 1950-51-ல் வெறும் 27 பல்கலைக்கழகங்களும் 578 கல்லூரிகளும் இருந்த இந்தியாவில், 2014ஆம் ஆண்டு கணக்கின்படி சுமார் 712 பல்கலைகழகங்களும் 36,671 கல்லூரிகளுமாக பெருகி வளர்ந்து உள்ளன. இதை போலவே, எழுத்தறிவு விகிதமும் 1951-ல் 18.3 சதவிகிதத்திலிருந்து 2011-ல் 73 சதவிகிதமாக கிட்டத்தட்ட நான்கு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது.
இது பாதுகாப்பு விவகாரங்கள், அரசமைப்பு சட்டப்படியான மக்களாட்சி ஆளுகை, சமூகம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
❖ இந்தியா தன் பொருளாதாரம், ராணுவம் மற்றும் அணு ஆற்றலின் காரணமாக ஆசியாவில் ஒரு வட்டார சக்தியாகவும், தெற்கு ஆசியாவில் ஒரு வல்லரசாகவும் உருவாகியுள்ளது.
இதன்படி 1991ஆம் ஆண்டு வரை நாட்டின் வளர்ச்சிக்கு ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டமிடல், வேலை வாய்ப்பிற்கு பெரிய அளவில் பொதுத்துறை நிறுவனங்களை ஏற்படுத்துதல், இளைஞர்களுக்கு அறிவியல் தொழில்நுட்ப கல்வி என்றிருந்த நிலையில் 1991ஆம் ஆண்டு தாராளமயம் மற்றும் சந்தை சார்ந்த மாதிரியிலான உலகமயமாதல் என்ற பொருளாதாரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இது கட்டமைப்பு, சீரமைப்பு செயல்திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு பிறகு நாட்டின் பொருளாதாரத்தில் தனியார் மற்றும் அயல் நாட்டவரின் பங்களிப்பு அதிகரித்தது. இதன் மூலம் புதிய தொழில்முறை நடுத்தர வர்க்கம் என்ற பிரிவு உண்டாக்கியது. கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்தில் தொழில் நுட்ப புதுமைகள் மிகப்பெரும் வளர்ச்சியை கொண்டு வந்தன. மேலும் நகரங்களிலும், கிராமங்களிலும் உள்கட்டமைப்பு மற்றும் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. இதன் மூலம் மின்னனு தொழில்நுட்ப இந்தியா என்ற வளர்ந்த நிலை நோக்கி இந்தியா நகரத் தொடங்கியுள்ளது. வங்கித் துறை சீர்திருத்தங்களும் பெரிய சமூக மாற்றங்களை சாத்தியப்படுத்தியுள்ளன.
❖ இந்தியாவின் ஒட்டு மொத்த தேசிய வருவாயானது 1950-51-ல் ருபாய் 2.92 லட்சம் கோடியாக இருந்து 2014-2015-ல் கிட்டத்தட்ட 35 மடங்கு வளர்ந்து ரூபாய் 105.28 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதை போலவே, தனி நபர் வருமானமும் 1950-51-ல் ரூபாய் 274ஆக இருந்து, 2014 - 2015 ஆம் ஆண்டு ரூபாய் 88,533ஆக உயர்ந்துள்ளது.
❖ இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 1950-51 ஆம் ஆண்டுகளில் 50.8 கோடி டன்களாக இருந்தது. அது 2014-15ஆம் ஆண்டுகளில் 264.77 கோடி டன்களாக கிட்டத்தட்ட ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது. இந்திய விவசாயத் துறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியே இதன் முக்கிய காரணமாகும்.