5. மக்களாட்சியின் ஆழ்விவாதக் கோட்பாடு (Deliberative Theory of Democracy)
மக்களாட்சியின் நோக்கமே ஆழ்ந்த பொது விவாதங்கள், பரப்புரைகள், மற்றும் வாத பிரதிவாதங்கள் வழியே பொதுமக்களின் நலன் காக்கப்படுவதாகும். இதையே இம் மக்களாட்சி முறை வலியுறுத்துகிறது. பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் விவாதங்கள் ஆகியவை கிராம அளவில் வெகு காலமாகவே உறுதியாக உள்ளன. அரசாங்கத்தின் செயல்பாட்டை கீழ்மட்டத்தில் பஞ்சாயத்து அமைப்புகள் வலுப்படுத்துகின்றன. ஜேம்ஸ் மில்லரின் கூற்றுப்படி ஆழ் விவாத கோட்பாடானது பங்கேற்பாளர்களின் பொதுவிவாதம், அதன் மூலம் அனைவரின் கருத்தையும் உள்ளடக்கிய முடிவுகள் என்ற அம்சங்களை கொண்டுள்ளது. இதன் சிறப்பம்சமே மக்கள் பொறுமையாக மாற்றுக்கருத்தை கேட்பதும், அதன் அடிப்படையில் தங்களது கருத்தில் மாற்றங்கள் கொண்டுவருவதும் தான். பொதுவிருப்பமும், பொது கருத்துமே ஆழ் விவாத கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட மக்களாட்சியின் முக்கிய பண்புகளாகும். இந்த மக்களாட்சி முறையானது பிரதிநிதித்துவ மக்களாட்சி மற்றும் நேரடியான மக்களாட்சியுடன் இணக்கமாக உள்ளது. நீதி கோட்பாடுகளின் புகழ் பெற்ற சிந்தனையாளர்களான ரால்ஸ் (Rawls) மற்றும் ஹேபர்மாஸ் (Habermas) இருவரும் அரசியல் தேர்வானது முறையாக, சட்டப்படியாக இருத்தல் வேண்டும் என்றும், ஒரு தெளிவான இலக்கை நோக்கிய சுதந்திரமான விவாதம் சமமான மற்றும் பகுத்தறியும் நபர்களிடையே நடந்து அதன் அடிப்படையில் அரசியல் தேர்வுகள் இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
செயல்பாடு
❖ தொலைகாட்சிகளில் நம் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றங்களில் தங்கள் தொகுதி பிரச்சனைகள் தொடர்பாக பேசுவதை கவனிக்கவும்.
❖ வகுப்பில் மாணவர்கள் தங்கள் வகுப்பு தலைவரை ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கவும்.
❖ நாடாளுமன்ற நடைமுறைகளை பின்பற்றி வகுப்பிலும் மாணவர் நாடாளுமன்றம் ஏற்பாடு செய்து விவாதங்கள் நடத்தவும். '
செயல்பாடு
அ) மக்களாட்சி நடைபெறும் சமூகங்களில் மதத்தையும், அரசையும் பிரிப்பது ஏன் முக்கியமாகிறது?
ஆ) அரசு பள்ளிகள் எந்த ஒரு மதத்தையும் ஏன் ஊக்குவிக்க கூடாது?
இ) இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதற்கான ஏதேனும் இரண்டு சான்றுகளை தருக.
ஈ) இந்தியா ஒரு மதச்சார்பற்ற அரசாக இருப்பதற்கு அச்சுறுத்தலாக உள்ள முக்கிய காரணங்கள் ஏதேனும் மூன்றினைக் கூறு.
உ) நாடாளுமன்றம், சட்டமன்றம், மாநகராட்சி மற்றும் பஞ்சாயத்துகள் என எல்லா மக்களாட்சி அமைப்புகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிகாலம் 5 ஆண்டுகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளதாக நீ படித்துள்ளாய். அது ஏன் அவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது?
ஊ) தினசரி பத்திரிகைகளில் நீ கண்ட ஏதேனும் மூன்று வித போராட்டங்களை பட்டியலிடு அதை ஒரு விளக்கப்படத்தில் (chart) ஒட்டி உன்னுடைய வகுப்பறையில் காட்சிப்படுத்துக.
எ) வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களும் சுழற்சி முறையில் பங்கேற்றல்: மக்களாட்சியின் குறைகள் பற்றி முதல் மாணவனிடமிருந்து தொடங்கி ஒவ்வொரு மாணவனாக பேசவும்.
தற்காலத்தில் மக்களாட்சிமுறை ஒரு சிறந்த அரசாங்க முறையாக உருவாகி உள்ளது. ஆனாலும் அதில் குறைகள் இல்லாமலில்லை. இந்த வாக்கியம் சரியானது என நிரூபிக்க ஏதேனும் ஐந்து குறைகளை எழுதுக.