2. மக்களாட்சியின் மார்க்சிய கோட்பாடு
மார்க்சிய கோட்பாடானது மக்களாட்சியை சமூகத்தில் உள்ள வர்க்க அமைப்பின் பின்னணியில் காண்கிறது. இந்த வர்க்கப் பிரிவினையானது தொழிற்புரட்சி காலத்தில் தோன்றியதாகும். சமுகம் இரு வர்க்கங்களாக பிரிந்திருந்தது. அவை முதலாளிகள் அல்லது உரிமையாளர்கள் வர்க்கம் என்றும் தொழிலாளிகள் அல்லது பாட்டாளிகள் வர்க்கம் என்றும் அழைக்கப்பட்டன. மார்க்சின் மக்களாட்சிக் கோட்பாடானது எப்போதுமே முதலாளித்துவத்தின் மேலாதிக்கத்திற்கு சவால் விடும் வகையிலும், பாட்டாளி வர்க்கம் சுரண்டப்படுவதற்கு எதிரான வகையிலும் தனது அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. மார்க்சின் கோட்பாடு தேர்தல் தொடர்பான உரிமைகளை வலியுறுத்தவில்லை. மாறாக பொருளாதார உரிமைகளையே வலியுறுத்தி சமதர்ம மக்களாட்சி உருவாக வேண்டும் என்கிறது.
மார்க்சிய மக்களாட்சி, முதலாளித்துவத்தின் வீழ்ச்சியையும் அதன் பின் புரட்சியின் மூலம் சமூக மாற்றத்திற்கும் அறைகூவல் விடுக்கிறது. சமதர்ம சித்தாந்தத்தின் மூலமே அரசியல் அதிகாரம் சாத்தியம் என்றும் இது நாட்டின் வளத்தையும், உற்பத்தி மீதான உரிமையையும் சரிசமமாக மக்களுக்கு பிரித்தளிப்பதன் அடிப்படையில் மட்டுமே நிகழும் என்றும் கூறுகிறது. வர்க்க வேறுபாடுகள், சிறப்பு சலுகைகள் போன்றவற்றை நீக்குவதன் மூலமே சுதந்திரம், சமூக நிலை மற்றும் மக்களாட்சிச் போன்றவை சாத்தியப்படும் என்று மார்க்சிய மக்களாட்சிவாதிகள் வாதிடுகின்றனர்.
சமதர்ம சிந்தனையாளர்கள் அனைவருக்குமான கல்வி மூலம் மக்கள் தங்களை தாங்களே ஆள கற்றுக்கொள்வர் என்கின்றனர். மார்க்சின் கோட்பாடு தாராளவாத மக்களாட்சியைப் போலியானது என்று விமர்சிக்கின்றது. அது ஆளும் வர்க்கத்துக்கு ஆதரவாக இருப்பதாக கூறுகிறது. பொருளாதார ஏற்ற தாழ்வே வர்க்க பிரிவினைக்கு அடிப்படை என்றும் உற்பத்தி மற்றும் அதன் விநியோகம் மீதான உரிமையே வர்க்க பிரிவினையை ஏற்படுத்துகிறது என்றும் மார்க்சிய கோட்பாடு கூறுகிறது.
கீழ்கண்ட மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் மக்களாட்சியில் சமதர்மம் மலர முடியும் என்கின்றனர்.
அ) மார்க்சிய மக்களாட்சிவாதிகள் அரசை மக்களுக்கு எதிராக குற்றமிழைக்கின்ற ஒரு நிறுவனமாக பார்க்கின்றனர். நாட்டின் இராணுவத்துக்கு பதிலாக குடிமக்கள் அடங்கிய குடிமக்களின் படை ஏற்படுத்தப்படுதல்.
ஆ) அரசை நடத்துவோர் தேர்ந்தெடுக்கப்படுதல் மற்றும் அவர்கள் செயல்படாத நிலையில் அவர்களைத் திரும்ப அழைத்தல்.
இ) அரசியல் சார்புடைய காவல்துறை முழுவதுமாக நீக்கப்படல்.
ஈ) முடியாட்சியை அகற்றுதல்.
மக்களாட்சி பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள்
மக்களாட்சியே சமதர்மத்திற்கான பாதை ஆகும். - கார்ல் மார்க்ஸ் (Karl Marx)
மக்களாட்சி என்பது மக்களால் மக்களுக்காகவே மக்களாலான அரசாங்க முறை ஆகும். - ஆப்ரகாம் லிங்கன்
எளியோருக்கும் வலியோருக்கும் சம வாய்ப்பு வழங்குதல் மக்களாட்சியில் மட்டுமே நடைபெறும் என்பதே என் 'கருத்து. இது வன்முறையற்ற வழியில் மட்டுமே சாத்தியப்படவேண்டும். - மகாத்மா காந்தி (Mahatma Gandhi)