தற்கால மக்களாட்சியின் வகைகள்:
பிரதிநிதித்துவ மக்களாட்சி (Representative Democracy)
பிரதிநிதித்துவ மக்களாட்சியில் தகுதிவாய்ந்த அனைத்து குடிமக்களும் வாக்களித்தலின் மூலம் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு தொகுதிக்கும் பிரதிநிதிகளை அந்தந்த தொகுதி மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு தொகுதியும் மக்கள் தொகையின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும். சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனித்தனியே சித்தாந்தங்கள், கொள்கைகள் மற்றும் திட்டங்களைக் கொண்டுள்ளன. அவற்றை சீர்தூக்கி ஆராய்ந்து மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். வெற்றி வாய்ப்பு, மக்களிடம் உள்ள செல்வாக்கு போன்றவற்றின் அடிப்படையில் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றன.
தேர்தலின் போது கட்சிகள் தங்கள் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை தேர்தல் அறிக்கையாக வெளியிடுகின்றன. இந்தியா போன்ற மிகப்பெரிய மக்களாட்சி நாட்டில், தேசிய மற்றும் பிராந்தியக் கட்சிகள் தங்கள் எதிர்காலத் திட்டங்கள், அதை அடையும் வழிகள் என அனைத்தையும் தேர்தல் அறிக்கையாக தயாரித்து அதன் மூலம் மக்களின் நம்பிக்கையை வெல்ல முற்படுகின்றன. எந்த ஒரு குடிமகனும், கட்சி சார்பின்றி தேர்தல்களில் போட்டியிட விரும்பினால் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கவும் அனுமதி உண்டு . பிரதிநிதித்துவ மக்களாட்சி அமைப்பில் அரசியல் கட்சிகளின் பங்கு முக்கியமானது. அரசியல் கட்சிகள் அவ்வப்போது நடத்தும் பொதுக்கூட்டங்கள், அரசின் கொள்கைகளை விமர்சித்தோ ஆதரித்தோ வெளியிடும் அறிக்கைகள், முதலியவற்றின் வழியே மக்களை விழிப்புணர்வடையச்செய்கின்றனர். எனவே இதன் மூலம் அரசியல் கட்சிகள் மக்கள் தங்கள் தேவையை அறியச்செய்கின்றன. மேலும் அதனுடன் முக்கிய பிரச்சனைகளில் ஒரு பொதுக்கருத்தையும் உருவாக்குகின்றன. மக்கள் பிரதிநிதிகள் அரசமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவர்கள். இப்பிரதிநிதிகள் மக்கள் நலனுக்கான தங்களது பொறுப்பையும், கடமையையும் செய்வதற்கு அரசமைப்பால் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதிநிதித்துவ மக்களாட்சி முறை, தாராளவாத மக்களாட்சி முறையுடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது. தாராளவாத மக்களாட்சி முறையானது அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் தோன்றி பின்பு பல மூன்றாம் உலக நாடுகளில் பரவி தற்போது முன்னாள் சோவியத் ரஷ்ய நாடுகளிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் காலுன்றியுள்ளது. தாராளவாத மக்களாட்சி அரசானது அதிபர் முறை மக்களாட்சி அல்லது நாடாளுமன்ற முறை மக்களாட்சி என இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தாலும் அவற்றுள் சில வேறுபாடுகளும் உள்ளன. பிரதிநிதித்துவ மக்களாட்சியானது ஒன்றுக்கொன்று தொடர்புடைய எண்ணிலடங்கா கொள்கைகளால் ஆனது.
அவற்றுள் சில:
❖ ஒரே சீரான இடைவெளியில் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறும் தேர்தல். வயதுவந்தோர் வாக்குரிமை மற்றும் வாக்களித்தலின் ரகசியம் காக்கப்படுதல் அடிப்படையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் எனும் ஒரு சுயேச்சையான அமைப்பு.
❖ மக்கள் தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக பல கட்சிகள் போட்டியிடும் தேர்தல்.
❖ சுதந்திரமான நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இயங்கும் தேர்தல் சட்டங்கள்.
❖ பேச்சு மற்றும் கூட்டங்கள் கூடுவதற்கான சுதந்திரம்.
❖ தேர்தலில் ஒரு வேட்பாளராக பங்கேற்கும் சுதந்திரம்.
பங்கேற்பு மக்களாட்சி (Participatory Democracy)
பங்கேற்பு மக்களாட்சியானது, சமத்துவம் என்ற நிலையிலிருந்து சம நீதியின் அடிப்படையிலான பங்கு என்ற நிலைநோக்கி செல்ல ஊக்குவிக்கிறது. சமீப காலங்களில் பங்களிப்பு மக்களாட்சியில் மக்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. தொன்மை பிரதிநிதித்துவ மக்களாட்சியை விட மக்களே நேரடியாக பங்கேற்கும் மக்களாட்சியில் தான் மக்களாட்சியின் தன்மை அதிகமிருக்கும். இது குடிமை சமூகத்தின் அடிப்படையிலானது. அனைவருக்குமான வாய்ப்புகளை ஏற்படுத்தி, அந்த வாய்ப்புகளை அனைவரும் பயன்படுத்த ஏதுவான சூழலையும், முடிவெடுத்தலில் அனைவருக்குமான பங்கையும் இது உறுதி செய்கிறது. சமூக உறவுகளே அரசியல் நடவடிக்கைகளுக்கு அடிப்படையாகும்.
பங்களிப்பு மக்களாட்சியானது மக்களின் பங்களிப்பை அதிகரித்து அரசியல் சமத்துவத்தை ஏற்படுத்தி அதன் மூலம் சமூகத்தையே மக்களாட்சிமயமாக்குகிறது.
பங்கேற்பு மக்களாட்சியின் நோக்கமே ஆர்வமுள்ள மக்களை அரசியல், பொருளாதார மற்றும் சட்ட நடைமுறைகளில் பங்கேற்கச் செய்வதும், மக்களை அரசின் முடிவுகளுக்கு பொறுப்புடையவர்களாக மாற்றுவதுமே ஆகும். பங்கேற்பு மக்களாட்சியின் சிறப்பம்சமே அரசின் செயல்பாடுகள் மற்றும் முடிவுகள் எடுப்பதில் மக்கள் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதுதான். இந்த முறை மக்களாட்சியில் அதிகாரம் நேரடியாக மக்களிடம் மட்டும் இருக்குமே தவிர வேறு எந்த அமைப்பிடமோ, தனி நபர்களிடமோ இருக்காது. தற்போதைய பொருளாதார வளர்ச்சிக் காலத்தில் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சமத்துவத்தை ஏற்படுத்த, மக்கள் தங்கள் பங்கேற்புகளை அளிக்கும் வகையில் பங்கேற்பு மக்களாட்சியானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மிக முக்கிய பண்பே அரசியல் சமத்துவம் உள்ள ஒரு மக்களாட்சி முறையாக இருப்பதாகும். அதில் அனைவருக்கும் சமமான அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் உறுதிபடுத்தப்பட்டிருக்கும்.