3. மக்களாட்சியின் உயர்ந்தோர் குழாம் கோட்பாடு: (Elitist Theory)
மக்களாட்சியில் சமூக மற்றும் பொருளாதாரத்தில் உயர் அடுக்கில் உள்ளோரின் பங்கு தவிர்க்க முடியாதது. பல நுற்றாண்டுகளாக உயர் அடுக்கில் இருப்போர் முக்கிய வளங்களை தங்கள் கட்டுக்குள் வைத்துள்ளனர். இச்சமூகங்களில் உயர் அடுக்கில் உள்ளோர் நிலப்பிரபுக்களாகவும் தொழிற்சாலை முதலாளிகளாகவும் உள்ளனர். பின்னர் அவர்கள் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றி ஆளத் தொடங்கி விடுகின்றனர்.
உயர்ந்தோர் குழாம் மக்களாட்சி கோட்பாட்டாளர்களுள் வில்பிரெடோ பரேட்டோ (1848-1923) கெய்டன் மோஸ்கா (1857-1941) மற்றும் ராபர்ட் மைக்கேல் (1876-1936) ஆகிய மூவரும் முக்கியமானவர்கள் ஆவர். பரேட்டோமக்களை ஆளும் உயர்ந்தோர் மற்றும் ஆளாத உயர்ந்தோர் என்று இரண்டாக பிரிக்கிறார். ஆளும் உயர்ந்தோரிடம் ஆட்சி அதிகாரம் உள்ளது. அவர்கள் தங்களது அதிகாரத்தை கல்வி, சமூக நிலை அரசியல் பதவி தொடர்புகள் மற்றும் செல்வம் மூலம் அடைகின்றனர். இவர்களுடைய பண்புகளை பரேட்டோ உளவியல் ரீதியாக இரண்டாக பிரிக்கிறார் (அ) நரிகள்: தந்திரத்தின் மூலம் மக்களை ஏமாற்றி ஆள்வர், சூழ்ச்சியின் மூலமாக மக்களின் ஆதரவை பெறுவர். (ஆ) சிங்கங்கள்: மேலாதிக்கம் பலவந்தப்படுத்துதல் மற்றும், வன்முறை மூலமாக ஆட்சி அதிகாரத்தை அடைவர்.
மக்களாட்சி மற்றும் சமதர்மம் முதலிய சமத்துவ கருத்துக்களை விமர்சித்து அதற்கெதிராக உயர்குடியின வாதம் வளர்ந்தது. ஆனால் ராபர்ட் மைக்கேல் (Robert Michels) எனும் சிந்தனையாளர் மக்களாட்சி பற்றி மாறுபட்ட கருத்தினைக் கொண்டுள்ளார். மக்களாட்சி முறையில் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு நிர்வாகத்தில் மக்களின் அல்லது மக்கள் பிரதிநிதிகளின் பங்கு இருக்கும்படி இருந்தாலும் அவர்களுள் சிறு குழுவினரே அனைவரின் சார்பாகவும் முடிவுகள் எடுத்துக் கொள்கைகளை உருவாக்கி நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இதை சிறுகுழு ஆட்சியின் இரும்புச்சட்டம் (Iron Lav of Oligarchy) என்று இவர் கூறுகிறார்.