4. மக்களாட்சியின் பன்மைவாத கோட்பாடு (Pluralist Theory of Democracy)
இது சிறுபான்மையினரின் விருப்பங்கள் மற்றும் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிறது. எனவே இது தாராளவாத மக்களாட்சியின் அடிப்படைப் பண்புகளை கொண்டுள்ளதாக கூறலாம். மக்களாட்சி நடைமுறைகளுக்காக சில அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது. குறிப்பாக சட்டமன்றத்திற்கு இரு அவைகள், ஆட்சி அமைப்பிற்கு கூட்டாட்சி முறை என சிலவற்றை இந்த கோட்பாடு பரிந்துரைக்கிறது. பன்மைவாத மக்களாட்சியில் சமுகத்தின் பல்வேறுவகையான குழுக்களும் பங்கேற்று தங்கள் உரிமைகளை பாதுகாத்திட இயலும். இந்த முறையிலான மக்களாட்சியில் சமூகத்தின் பல்வேறு வகையான குழுக்களிடம் அதிகாரமானது பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இதன் மூலம் சமூகத்தின் அனைத்து பிரிவுகளும் பயன்பெறுகின்றன. மக்களாட்சியில் சீரான கால இடைவெளியில் தேர்தல்கள் நடைபெறவேண்டும். அதில் கட்சிகள், குழுக்கள் மற்றும் தனிமனிதர்களிடையே அரசியல் போட்டியை பன்மைவாத மக்களாட்சி முறை ஊக்குவிக்கிறது. ஜேம்ஸ் மேடிசன், (James Madison) ஜான் ஸ்டுவர்ட் மில் (John Stuart Mill) மற்றும் டி டாக்வில் (Tocqueville) போன்ற பயன்பாட்டுவாத சிந்தனையாளர்கள் தேர்தல்களின் மூலமே மாறுபட்ட மற்றும் பல்வேறுவிதமான மக்களின் விருப்பங்கள் வெளிப்படும் என்கின்றனர்.
ராபர்ட் டால் (Robort Dhal) எனும் அறிஞர் மக்களாட்சியின் சாராம்சமே குழுவாட்சி (Polyarchy) எனப்படும் பல்வேறு சிறுபான்மை சமூகத்தினரும் இணைந்து பணியாற்றும் அரசியல் அமைப்பில் தான் சிறப்பாக வெளிப்படும் என்கிறார்.
உங்களுக்குத் தெரியுமா?
ராபர்ட் டாலின் கோட்பாட்டில் பின்பு ஒரு திருத்தம் செய்யப்பட்டது. அமெரிக்காவில் மக்களாட்சி செயல்படும் விதத்தை சிறப்பாக விவரிப்பதற்காக உருக்குலைந்த குழுவாட்சி என்ற கோட்பாட்டினை முன்னிறுத்த அந்த திருத்தத்தை ராபர்ட் டால் செய்தார்.