அலகு 5
மக்களாட்சி
மக்களாட்சி என்ற சொல், கிரேக்க சொற்களான "டெமோஸ்" மற்றும் "கிரேட்டோஸ்" என்ற இரு சொற்களில் இருந்து உருவானது. கிரேக்க மொழியில் டெமோஸ் என்றால் மக்கள் என்றும் "கிரேட்டோஸ்" என்றால் ஆட்சி என்றும் பொருள்படும். இவ்விரு வார்த்தைகளின் இணைப்பிலிருந்து தான் மக்களாட்சி என்ற சொல் பிறந்தது. இதற்கு மக்களின் ஆட்சி அல்லது மக்களால் ஆளப்படுகின்ற ஆட்சி என்பது பொருள்.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து மக்களாட்சி என்பது பெரிதும் விவாதிக்கப்படுகிற ஒரு முக்கியமான கருத்தாக இருந்து வருகிறது. இருபத்தியோராம் நூற்றாண்டில் இதன் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. மக்களாட்சியின் தொடக்கம் பண்டைய கிரேக்கத்தில் இருந்தாலும் தற்போதைய நவீன கால மக்களாட்சி முறையானது பிரிட்டனில் இருந்தே தொடங்கி வந்துள்ளது.
தற்காலத்தில் மக்களாட்சி, மக்களால் மிகவும் விரும்பக்கூடிய ஒரு அரசாங்க முறையாகத் திகழ்கிறது. மேலும் உலக மக்களால் உயர்ந்த அரசியல் கருத்தாக்கமாக இது உருவாகி உள்ளது.
அ) தனிமனித உரிமைகள், மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை உள்ளடக்கிய பெரும்பான்மையோரின் ஆட்சி என்ற கொள்கை அடிப்படையில் மக்களாட்சி அமைந்துள்ளது.
ஆ) மக்களாட்சியின் முக்கிய அம்சமே, மக்களுக்கு தாங்கள் தேர்ந்தெடுத்த அரசிடம் கேள்வி கேட்கும் உரிமை உள்ளது என்பது மற்றும் மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு மக்கள் எளிதாக அணுகக் கூடிய அளவிலும், அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுப்பதும் அரசின் கடமை என்பதும் ஆகும்.
மக்களாட்சி:தத்துவவாதிகளின் வரையறை
மக்களாட்சி என்பது ஒரு மகிழ்ச்சியான அரசாங்க வகையாகும். இவ்வகை அரசில் எவ்வளவு குழப்பங்கள் இருந்தாலும் எந்த வித பாகுபாடுமின்றி அனைவரும் சமமாக நடத்தப்படுவதற்கும் அதன் மூலம் சமத்துவ சமுதாயத்திற்குமான வழி உள்ளது. - சாக்ரடீஸ் (Socrates)
ஓர் அரசின் மகிமையே அதன் மக்களாட்சியில் உள்ள சுதந்திரம்தான். எனவே மக்களாட்சியானது இயற்கையாகவே அரசில் சுதந்திரம் இருக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது. - பிளாட்டோ (Plato)
ஒர் மக்களாட்சி அரசமைப்பின் அடித்தளமே சுதந்திரம் தான். மக்கள் இதை விரும்பக் காரணமே, இந்த அரசமைப்பில் தான் அனைவருக்கும் சமமான அளவில் சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கும். - அரிஸ்டாட்டில் (Aristotle)
இ) மக்களாட்சியின் தலையாய பணியே
1) சட்டத்தின் முன் அனைவரும் சமம்,
2) அனைவருக்கும் சமமான சட்டப் பாதுகாப்பு
3) பேச்சுரிமை
4) மத சுதந்திரம்
5) அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பது அவற்றை சமுதாயத்தில் ஏற்பாடு செய்யவுமான உரிமை போன்றவைகளும் மற்றும் மனிதனின் அடிப்படை உரிமைகளை காப்பதுமேயாகும்.
ஈ) மக்களாட்சியில் மட்டுமே சுதந்திரமான மற்றும் நேர்மையான அனைத்து குடிமக்களும் பங்கேற்கும் வகையில் தேர்தல் நடைபெறும்.
உ) மக்களாட்சியானது அனைத்து குடிமக்களும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதையும், அவர்களது உரிமைகள் அரசமைப்பு சட்டங்களினால் பாதுகாக்கப்படுவதையும் உறுதிசெய்கிறது.
ஊ) மக்களாட்சி முறையானது ஒவ்வொரு நாட்டின் அரசியல், சமூக மற்றும் பண்பாட்டு வாழ்வினைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
எ) அரசியல் அமைப்பில் குடிமக்களின் பங்கேற்பை மக்களாட்சி உறுதி செய்கிறது.
ஏ) மக்களாட்சி முறை அரசாங்கத்தில் அதிகார மற்றும் குடிமை பொறுப்புகள் நேரடியாகவோ அல்லதுமறைமுகமாகவோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடமே உள்ளது.
மக்களாட்சி அதன் செயல்பாட்டையும் நோக்கங்களையும் பொறுத்து பல்வேறு விதங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அ) அரசியல் மக்களாட்சி (Political Democracy)
ஆ) சமூக மக்களாட்சி (Social Democracy)
இ) தொழில்சார் மக்களாட்சி (Industrial Democracy)
ஈ) பொருளாதார மக்களாட்சி (Economic Democracy)
உ) முற்றதிகார மக்களாட்சி (Totalitarian Democracy)
ஊ) தீவிர முன்னேற்றவாத மக்களாட்சி (Radical Democracy)
எ) பொது வாக்கெடுப்பு முறை மக்களாட்சி (Plebiscitary Democracy)
அ) அரசியல் மக்களாட்சி
அரசியல் மக்களாட்சியில் அரசாங்கத்தில் குடிமக்கள் தங்களின் பங்கேற்பின் மூலமாக பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுப்பர். தேர்ந்தேடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர் ஆவர். மக்களின் நேரடி ஈடுபாட்டின் மூலமோ அல்லது அவர்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டங்களின் மூலமோ மக்களாட்சி செயல்படுகிறது. இது மக்களின் துவக்கமுறை (Popular Initiative) என்று அறியப்படுகிறது. இதை போலவே ஒரு சட்ட முன்வரைவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உருவாக்கும் போது அதற்கு மக்கள் தங்கள் வாக்கின் மூலமாக ஒப்புதல் அளிக்கின்றனர். இது பொது மக்கள் வாக்கெடுப்பு (Referendum) என்று அறியப்படுகிறது.
இதில் இரண்டாவது வகை மக்களாட்சி முறை, பிரதிநிதித்துவ மக்களாட்சி முறை எனப்படும். இதில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை குறிப்பிட்ட சில காலத்திற்கு தேர்ந்தெடுக்கிறார்கள். இப்பிரதிநிதிகள் மக்களின் சார்பாக கொள்கைகளை தீர்மானிக்கிறார்கள். இந்த பிரதிநிதித்துவ மக்களாட்சி முறையே உலகின் பிரதான மக்களாட்சி முறையாக பல்வேறு நாடுகளில் உள்ளது. அதே சமயத்தில் நேரடி மக்களாட்சி முறையானது கூட்டாட்சி குடியரசான சுவிட்சர்லாந்து நாட்டில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.
ஆ) சமூக மக்களாட்சி
இம் மக்களாட்சி முறையானது பொருளாதாரத்தையும், சமூக நீதியையும், சமூக சமத்துவத்தையும் மேம்படுத்துகிறது. சமூக மக்களாட்சியானது பாலினம், பண்பாடு, நம்பிக்கைகள்,மரபுகள் மற்றும்விழுமியங்களில் சமூக சமத்துவத்தை நிலை நாட்டுவதை அடிப்படைக் கொள்கையாக கொண்டுள்ளது. அனைவருக்குமான சுதந்திரம் மற்றும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளே மனித உரிமைகளுடனான வாழ்விற்கு அடிப்படை என்று சமூக மக்களாட்சி வலியுறுத்துகிறது. மேலும் ஒவ்வொரு தனிமனிதனையும் அவர்களின் உழைப்பின் மூலம் வாழ்வில் வெற்றிபெற அவனை இயன்றவனாக்குகிறது.
சமத்துவ வளர்ச்சியே சுதந்திரத்திற்கும், சுதந்திரத்தின் வளர்ச்சியே ஒரு நாட்டின் சிறந்த மக்களாட்சிக்கும் அடிப்படை என்று சமூக மக்களாட்சி வலியுறுத்துகிறது.
இ) தொழில்சார் மக்களாட்சி
தொழில்சார் மக்களாட்சி என்பது தொழிற்சாலைகளில் மக்களாட்சிக் கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்களின் பாதுகாப்பையும், உரிமைகளையும் மேம்படுத்தி அவர்களைப் பொறுப்புடன் செயலாற்ற வைக்கும் முறையாக இம் மக்களாட்சி முறை உள்ளது.
முடிவுகள் எடுப்பதில் நிர்வாகத்துடன் தொழிலாளர்கள் இணைந்து செயல்படுவதை இம் மக்களாட்சி முறை ஊக்குவிக்கிறது. இது தொழிலாளர்களைத் தொழிலின் பங்குதாரர்களாக ஆக்குவதன் மூலம் அவர்களை ஆற்றலுறச் செய்கிறது. நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களின் இணைந்த செயல்பாட்டின் மூலமாகவே சமுதாய வளர்ச்சி மற்றும் நாட்டின் வளர்ச்சி சாத்தியப்படும், உற்பத்தி பெருகும் என்று இம்மக்களாட்சி முறை வலியுறுத்துகிறது.
ஈ) பொருளாதார மக்களாட்சி
பொருளாதார மக்களாட்சி என்பது பல்வேறு வகுப்புகளுக்கிடையே சமத்துவத்தை ஏற்படுத்தவும் அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி, சமூக மற்றும் பொருளாதார வேறுபாடுகளையும், ஏழை - பணக்காரன் என்ற இடைவெளியை குறைப்பதுடன் பொருளாதார உற்பத்தி பெருக மக்களாட்சி முறையில் தகுந்த சூழலை ஏற்படுத்துவதும் பொருளாதார மக்களாட்சியின் அடிப்படைப் பண்புகளாகும்.
உ) முற்றதிகார மக்களாட்சி
முற்றதிகார மக்களாட்சி முறையில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்த பின் வேறு எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரமற்றவர்கள் ஆவர். மக்கள் பிரதிநிதிகளே நாட்டின் அனைத்து முடிவுகளையும் எடுக்கின்றனர். இந்த முறை மக்களாட்சியில் மக்கள் பிரதிநிதிகள் தேர்தல்கள் மூலம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் அவர்கள் வாக்களித்த மக்களை விட மேம்பட்டவர்களாகவே உள்ளனர். மக்களாட்சி முறையில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருந்தாலும் சர்வாதிகார முறையிலேயே ஆட்சி புரிகின்றனர். மக்களின் விருப்பங்களை விட ஆட்சியாளர்களின் கொள்கைகளும் ஆளும் கட்சியின் சித்தாந்தமுமே உயர்வாக இந்த மக்களாட்சி முறையில் காணப்படுகிறது. மக்களின் நலன் என்ற பெயரில் மக்களின் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடுவதும், பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரத்தை பறித்து ஒட்டுமொத்த மக்களையும் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் இதன் பண்புகள் ஆகும். முற்றதிகார மக்களாட்சி என்பது நாட்டின் பொருளாதாரத்தின் மேல் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. மேலும் அதன் மூலம் இது மக்களையும் கட்டுப்படுத்துகிறது.
ஊ) தீவிர முன்னேற்றவாத மக்களாட்சி (Radical Democracy)
இந்த மக்களாட்சி முறையை புகழ்பெற்ற இந்திய அரசியல் சிந்தனையாளர் எம்.என்.ராய் அவர்கள் சிறந்த மக்களாட்சி முறை என்று பரிந்துரைத்தார். இந்த முறையில் மட்டுமே உண்மையான மக்களாட்சி மலரும் என்று நம்பினார். இந்த மக்களாட்சி முறையில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் மக்களுக்கு நேரடியாகப் பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள் ஆவர். தீவிர முன்னேற்றவாத மக்களாட்சியானது மனித நேயத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமியற்றுபவர்களை விட மக்களே அரசியல் அதிகாரத்தின் உண்மையான தலைவர்கள் என்று இது கூறுகிறது.
மக்கள் பங்களிப்புடன் கூடிய உண்மையான மக்களாட்சியை தீவிர முன்னேற்றவாத மக்களாட்சி நிலைநாட்டுகிறது இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் அதிகாரிகளும் மக்களுக்கு பொறுப்புடையவர்களாக உள்ளனர். தேவைப்பட்டால் அரசாங்கத்தை மாற்றும் அதிகாரம் மக்களிடம் உள்ளது.
எ) பொது வாக்கெடுப்பு முறை மக்களாட்சி (Plebiscitary Democracy)
பொது வாக்கெடுப்பு முறை மக்களாட்சியில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை அல்லது கட்சியை தேர்ந்தெடுத்தல், பொதுவான பிரச்சனைகளில் முடிவெடுத்தல், புதிய அரசியல் அமைப்பைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் மாகாணசுய நிர்ணயம் போன்றவற்றில் பொது வாக்கெடுப்பின் மூலம் தங்களது நிலைப்பாட்டினை தெரிவிக்கின்றனர்.
மக்கள் விரும்பினால் ஒரு சட்ட முன்வரைவை கொண்டுவருவதற்கும், கொள்கை உருவாக்குவதற்கும் உரிமை இந்த மக்களாட்சி முறையில் உள்ளது. ஒரு குறிப்பிட்ட அளவு ஆதரவை மக்கள் தாங்கள் கையெழுத்திட்ட மனு மூலம் தெரிவித்து தாங்கள் விரும்பிய மாற்றங்களை செய்ய அரசுக்கு பரிந்துரைக்கலாம்.
மேலும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி சரியாக செயல்படாதபோது அல்லது மக்கள் விருப்பத்திற்கு மாறாக செயல்படும் போது, மக்கள் ஒரு குறிப்பிட்ட அளவு கையெழுத்துக்களை அவருக்கு எதிராக சேகரித்து அதன் மூலம் அவரை திரும்ப அழைக்கலாம். (இம்முறைக்கு திரும்ப அழைத்தல் என்று பொருள்)