மக்களாட்சிக் கோட்பாடுகள்
மக்களாட்சி என்ற ஒரு கோட்பாடு பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் பல்வேறு நாகரீகங்களில் பல்வேறு விதமாக உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. மக்களாட்சியின் தொன்மை கோட்பாடானது பண்டைய கிரேக்கத்தில் தோன்றியது ஆகும். கிரேக்கத்தின் புகழ்பெற்ற நகர அரசுகள் யாவும் நேரடியான தேர்தல், பொதுக்கொள்கை மீதான விவாதங்கள், மற்றும் பொதுமக்களே முடிவெடுக்கும் முறை போன்ற மக்களாட்சி விழுமியங்களைக் கொண்டிருந்தன. கிரேக்கப் பண்பாடு, நாகரிகம் மற்றும் மொழியானது ஐரோப்பா, வட மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் மெல்ல பரவத் தொடங்கிய போது இந்த மக்களாட்சியும் ஒரு ஆட்சி முறையாக அங்கெல்லாம் பரவியது.
கிரேக்க மக்களாட்சி முறையானது மெல்ல பிரதிநிதித்துவ மக்களாட்சியாக வளர தொடங்கியவுடன் அதன் முக்கியத்துவமும் அதன் தற்காலத்தைய பொருத்தமும் அதிகரித்தன. பின்பு பிரதிநிதித்துவ மக்களாட்சி முறை அறிவொளி காலகட்டங்களில் ஒரு பிரதான ஆட்சி முறையாக பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பரவத்தொடங்கியது. அமெரிக்க புரட்சி (1775 - 1783) மற்றும் பிரெஞ்சு புரட்சி
(1789-1799) காலங்களில் மக்களாட்சியானது அனைத்து தரப்பு மக்களின் பெரும் கோரிக்கையாக உருவெடுத்தது. தற்காலத்தில் மக்களாட்சி என்பது பல்வேறு மக்களாலும், பண்பாடு மற்றும் நாடு, மொழி ஆகியவற்றைக் கடந்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆட்சி முறையாக மாறிவிட்டது. மக்களாட்சி கோட்பாடுகள் அதன் நோக்கம் மற்றும் விளைவுகளைப் பொறுத்து பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
செயல்பாடு
கீழ்க்கண்ட வாக்கியங்களுள் எது சரி அல்லது தவறு
1. முடியாட்சி முறை ஆட்சி தற்போது வழக்கத்தில் இல்லை.
பதில்: --------------------------
2. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாடுகளுக்கிடையேயான உறவுகள் மிகுதியாக மக்களாட்சித்தன்மை வாய்ந்ததாக இப்போது உள்ளன.
பதில்: --------------------------
3. நாளுக்கு நாள் - மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் ஆளக்கூடிய நாடுகள் பெருகிக் கொண்டிருக்கின்றன.
பதில்: --------------------------
4. இராணுவ சர்வாதிகாரிகள் என்று தற்போதைய உலகில் யாரும் இல்லை.
பதில்: --------------------------
5. எது தூய அரசியல் அமைப்பிலான ஆட்சி அரசாங்கம் மக்களாட்சி அரசாங்கத்தை விட சிறந்தது?
பதில்: --------------------------
6. மக்களின் அறியாமை அதிகம் உள்ள நாடுகளில் மக்களாட்சி முறை தோல்வி அடைகிறது.
பதில்: --------------------------
7. மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் போது மக்களாட்சி தோல்வியடைகிறது.
பதில்: --------------------------
மக்களாட்சி பற்றி அறிஞர்கள் பார்வை
மக்களாட்சி என்பது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் தளத்தில் வாழும் ஓர் நிதர்சனம்/ மெய்மையாகும் - G.D.கோவார்டு கோல்
1. மக்களாட்சி என்பது மக்களால் நடத்தப்படும் அரசாங்கம், குறிப்பாக பெரும்பான்மை மக்களால் ஆகும்.
2. மக்களாட்சி அரசாங்கத்தில் மேலான அதிகாரம் மக்களிடம் இருக்கும். இந்த அதிகாரத்தை மக்கள் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க பயன்படுத்துவர். இங்கு தேர்தல்கள் சீரான இடைவெளியிலும் மற்றும் சுதந்திரமாகவும் நடைபெறும். - தாமஸ் ஜெஃபரசன்
பண்டைய கிரேக்கத்தில் நேரடியான மக்களாட்சி முறையாக தொன்மை மக்களாட்சி முறை உருவானது. இந்த மக்களாட்சி முறையானது ஏதென்ஸ் நகரத்தில் தான் முதன் முதலில் கிமு 800 மற்றும் கிமு 500 க்கும் இடையே உருவானது. ஏதென்ஸ் நகரின் நேரடி மக்களாட்சி முறையில் நகர அரசின் (City State) குடிமக்கள் அனைவரும் சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் ஆவர். அவர்கள் சட்டமியற்றுதலிலும், முடிவுகள் எடுப்பதிலும் நேரடியாக பங்கேற்றனர். குடியுரிமை பெற்ற குடிமக்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்ததால், அவர்கள் நகரின் பிரதான இடத்தில் கூடுவதற்கும், கூடி விவாதிப்பதற்கும் எளிதாக இருந்தது. அனைத்து குடிமக்களும் தங்களது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்தவும், விவாதிக்கவும், மற்றும் வாக்களிக்கவும் முழு உரிமை இருந்தது. இதுவே தொன்மை மக்களாட்சி என அழைக்கப்படுகிறது.
தொன்மை மக்களாட்சி வெற்றிகரமாக இயங்க இரண்டு நிபந்தனைகள் உள்ளன:
அ) குடிமக்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல் வேண்டும். அப்போது தான் அவர்கள் விவாதங்களில் பங்கு பெறவும் முக்கிய பிரச்சனைகளில் வாக்களிக்கவும் இயலும்.
ஆ) அனைத்து குடிமக்களையும் அரசியலில் ஈடுபடவைக்கும் அளவிற்கு தொன்மை மக்களாட்சியின் பொருளாதாரம் இருத்தல் வேண்டும்.
தொன்மை மக்களாட்சியின் விதிகளாக கீழ்க்கண்டவைகள் உள்ளன.
அ) அரசியலின் முதன்மை கருத்தியல்களாக மக்களிடையே சமத்துவம், சுதந்திரம், சட்டம் மற்றும் நீதிக்குரிய மதிப்பு ஆகியவை இருத்தல்.
ஆ) அனைவருக்கும் பொதுவான மற்றும் அனைவரையும் சமமாக நடத்தும் நீதி அமைப்புசமுகத்தின் எல்லாதளங்களிலும் இருத்தல். எளிதானதாக மற்றும் அனைவருக்குமான சுதந்திர அரசியல் வாழ்க்கை முறையும் இருப்பதாகும்.
தொன்மை மக்களாட்சியின் சிறப்பியல்பே அரசின் அனைத்து நிலைகளிலும் மக்களின் பங்களிப்பு இருப்பதே ஆகும்.
பாதுகாக்கும் மக்களாட்சி (Protective Democracy)
உரிமைகளைப் பாதுகாக்கும் மக்களாட்சி முறை அரசாக இது இருப்பதால் இந்த மக்களாட்சி முறையானது 'பாதுகாக்கும் மக்களாட்சி' என்றழைக்கப்படுகிறது. இந்த முறை மூலம் தனிமனிதர்கள் தங்களது உரிமையையும், சுதந்திரத்தையும் பாதுகாத்துக்கொள்கிறார்கள். பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய இந்த பாதுகாக்கும் மக்களாட்சி, உரிமைகளை அடிப்படையாக கொண்டது. இது நாட்டு மக்களின் மனித உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைக் காப்பதற்கான வழிமுறைகளை கொண்டுள்ளது. பிரிட்டனின் புகழ்பெற்ற அரசியல் சிந்தனையாளரான ஜான் லாக் (1631-1704) இந்த மக்களாட்சி முறையை பரிந்துரைப்பவர்களின் முதன்மையானவர் ஆவார். இயற்கை உரிமைகளான வாழ்வதற்கான உரிமை, சுதந்திர உரிமை மற்றும் சொத்துரிமை எந்த அளவுக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கிறதோ அந்த அளவிற்கு தான் அவர்களின் சுதந்திரமும், வாக்குரிமையும் இருக்கும் என்று லாக் கூறுகிறார். ஜெரமி பெந்தம் (1748-1832), ஜேம்ஸ் மில் (1773-1836) மற்றும் ஜான் ஸ்டுவர்ட் மில் (1806-1873) போன்ற பயன்பாட்டுவாத சிந்தனையாளர்கள் பாதுகாக்கும் மக்களாட்சி முறையை ஆதரிக்கின்றனர்.
பாதுகாக்கும் மக்களாட்சியின் அடிப்படை அம்சங்கள்
❖ பாதுகாக்கும் மக்களாட்சியானது மக்கள் இறையாண்மையில் நம்பிக்கை கொண்டுள்ளது.
❖ மக்கள் இறையாண்மை மற்றும் பிரதிநிதித்துவ மக்களாட்சி இரண்டுமே சட்டப்பூர்வமானவை ஆகும்.
❖ குடிமக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளைக் காப்பதே ஓர் அரசின் அடிப்படைக் கடமையாகும்.
❖ அதிகாரத்துவம் மக்களுக்குப் பொறுப்புடையதாக உள்ளது. இதை நிறுவ அவ்வப்போது தேர்தல்கள் நடைபெறும்.
❖ நீதி, நிர்வாகம் மற்றும் சட்டமன்ற அதிகாரங்களை அதிகாரப் பிரிவினை செய்தல் மூலமே உரிமைகள், சுதந்திரம் போன்றவற்றைக் காப்பதும், சலுகைகளை அனைவருக்கும் சமமாக அளிப்பதும் சாத்தியமாகும்.
❖ உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட பாதுகாக்கும் மக்களாட்சி அரசமைப்புவாதத்தைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது. அரசமைப்பு வாதத்தில் ஆள்பவர் மற்றும் ஆளப்படுவோர் அனைவரும் அரசமைப்பு வகுத்த விதிகளுக்கும், கொள்கைகளுக்கும் கட்டுப்பட்டவர்கள் ஆவர். அரசமைப்பு மட்டுமே அதிகாரத்தின் ஊற்றாகக் கருதப்படும். இதுவே உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும் உத்திரவாதமளிக்கிறது.
மார்க்சிய கோட்பாடானது மக்களாட்சியை சமூகத்தில் உள்ள வர்க்க அமைப்பின் பின்னணியில் காண்கிறது. இந்த வர்க்கப் பிரிவினையானது தொழிற்புரட்சி காலத்தில் தோன்றியதாகும். சமுகம் இரு வர்க்கங்களாக பிரிந்திருந்தது. அவை முதலாளிகள் அல்லது உரிமையாளர்கள் வர்க்கம் என்றும் தொழிலாளிகள் அல்லது பாட்டாளிகள் வர்க்கம் என்றும் அழைக்கப்பட்டன. மார்க்சின் மக்களாட்சிக் கோட்பாடானது எப்போதுமே முதலாளித்துவத்தின் மேலாதிக்கத்திற்கு சவால் விடும் வகையிலும், பாட்டாளி வர்க்கம் சுரண்டப்படுவதற்கு எதிரான வகையிலும் தனது அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. மார்க்சின் கோட்பாடு தேர்தல் தொடர்பான உரிமைகளை வலியுறுத்தவில்லை. மாறாக பொருளாதார உரிமைகளையே வலியுறுத்தி சமதர்ம மக்களாட்சி உருவாக வேண்டும் என்கிறது.
மார்க்சிய மக்களாட்சி, முதலாளித்துவத்தின் வீழ்ச்சியையும் அதன் பின் புரட்சியின் மூலம் சமூக மாற்றத்திற்கும் அறைகூவல் விடுக்கிறது. சமதர்ம சித்தாந்தத்தின் மூலமே அரசியல் அதிகாரம் சாத்தியம் என்றும் இது நாட்டின் வளத்தையும், உற்பத்தி மீதான உரிமையையும் சரிசமமாக மக்களுக்கு பிரித்தளிப்பதன் அடிப்படையில் மட்டுமே நிகழும் என்றும் கூறுகிறது. வர்க்க வேறுபாடுகள், சிறப்பு சலுகைகள் போன்றவற்றை நீக்குவதன் மூலமே சுதந்திரம், சமூக நிலை மற்றும் மக்களாட்சிச் போன்றவை சாத்தியப்படும் என்று மார்க்சிய மக்களாட்சிவாதிகள் வாதிடுகின்றனர்.
சமதர்ம சிந்தனையாளர்கள் அனைவருக்குமான கல்வி மூலம் மக்கள் தங்களை தாங்களே ஆள கற்றுக்கொள்வர் என்கின்றனர். மார்க்சின் கோட்பாடு தாராளவாத மக்களாட்சியைப் போலியானது என்று விமர்சிக்கின்றது. அது ஆளும் வர்க்கத்துக்கு ஆதரவாக இருப்பதாக கூறுகிறது. பொருளாதார ஏற்ற தாழ்வே வர்க்க பிரிவினைக்கு அடிப்படை என்றும் உற்பத்தி மற்றும் அதன் விநியோகம் மீதான உரிமையே வர்க்க பிரிவினையை ஏற்படுத்துகிறது என்றும் மார்க்சிய கோட்பாடு கூறுகிறது.
கீழ்கண்ட மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் மக்களாட்சியில் சமதர்மம் மலர முடியும் என்கின்றனர்.
அ) மார்க்சிய மக்களாட்சிவாதிகள் அரசை மக்களுக்கு எதிராக குற்றமிழைக்கின்ற ஒரு நிறுவனமாக பார்க்கின்றனர். நாட்டின் இராணுவத்துக்கு பதிலாக குடிமக்கள் அடங்கிய குடிமக்களின் படை ஏற்படுத்தப்படுதல்.
ஆ) அரசை நடத்துவோர் தேர்ந்தெடுக்கப்படுதல் மற்றும் அவர்கள் செயல்படாத நிலையில் அவர்களைத் திரும்ப அழைத்தல்.
இ) அரசியல் சார்புடைய காவல்துறை முழுவதுமாக நீக்கப்படல்.
ஈ) முடியாட்சியை அகற்றுதல்.
மக்களாட்சி பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள்
மக்களாட்சியே சமதர்மத்திற்கான பாதை ஆகும். - கார்ல் மார்க்ஸ் (Karl Marx)
மக்களாட்சி என்பது மக்களால் மக்களுக்காகவே மக்களாலான அரசாங்க முறை ஆகும். - ஆப்ரகாம் லிங்கன்
எளியோருக்கும் வலியோருக்கும் சம வாய்ப்பு வழங்குதல் மக்களாட்சியில் மட்டுமே நடைபெறும் என்பதே என் 'கருத்து. இது வன்முறையற்ற வழியில் மட்டுமே சாத்தியப்படவேண்டும். - மகாத்மா காந்தி (Mahatma Gandhi)
மக்களாட்சியில் சமூக மற்றும் பொருளாதாரத்தில் உயர் அடுக்கில் உள்ளோரின் பங்கு தவிர்க்க முடியாதது. பல நுற்றாண்டுகளாக உயர் அடுக்கில் இருப்போர் முக்கிய வளங்களை தங்கள் கட்டுக்குள் வைத்துள்ளனர். இச்சமூகங்களில் உயர் அடுக்கில் உள்ளோர் நிலப்பிரபுக்களாகவும் தொழிற்சாலை முதலாளிகளாகவும் உள்ளனர். பின்னர் அவர்கள் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றி ஆளத் தொடங்கி விடுகின்றனர்.
உயர்ந்தோர் குழாம் மக்களாட்சி கோட்பாட்டாளர்களுள் வில்பிரெடோ பரேட்டோ (1848-1923) கெய்டன் மோஸ்கா (1857-1941) மற்றும் ராபர்ட் மைக்கேல் (1876-1936) ஆகிய மூவரும் முக்கியமானவர்கள் ஆவர். பரேட்டோமக்களை ஆளும் உயர்ந்தோர் மற்றும் ஆளாத உயர்ந்தோர் என்று இரண்டாக பிரிக்கிறார். ஆளும் உயர்ந்தோரிடம் ஆட்சி அதிகாரம் உள்ளது. அவர்கள் தங்களது அதிகாரத்தை கல்வி, சமூக நிலை அரசியல் பதவி தொடர்புகள் மற்றும் செல்வம் மூலம் அடைகின்றனர். இவர்களுடைய பண்புகளை பரேட்டோ உளவியல் ரீதியாக இரண்டாக பிரிக்கிறார் (அ) நரிகள்: தந்திரத்தின் மூலம் மக்களை ஏமாற்றி ஆள்வர், சூழ்ச்சியின் மூலமாக மக்களின் ஆதரவை பெறுவர். (ஆ) சிங்கங்கள்: மேலாதிக்கம் பலவந்தப்படுத்துதல் மற்றும், வன்முறை மூலமாக ஆட்சி அதிகாரத்தை அடைவர்.
மக்களாட்சி மற்றும் சமதர்மம் முதலிய சமத்துவ கருத்துக்களை விமர்சித்து அதற்கெதிராக உயர்குடியின வாதம் வளர்ந்தது. ஆனால் ராபர்ட் மைக்கேல் (Robert Michels) எனும் சிந்தனையாளர் மக்களாட்சி பற்றி மாறுபட்ட கருத்தினைக் கொண்டுள்ளார். மக்களாட்சி முறையில் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு நிர்வாகத்தில் மக்களின் அல்லது மக்கள் பிரதிநிதிகளின் பங்கு இருக்கும்படி இருந்தாலும் அவர்களுள் சிறு குழுவினரே அனைவரின் சார்பாகவும் முடிவுகள் எடுத்துக் கொள்கைகளை உருவாக்கி நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இதை சிறுகுழு ஆட்சியின் இரும்புச்சட்டம் (Iron Lav of Oligarchy) என்று இவர் கூறுகிறார்.
இது சிறுபான்மையினரின் விருப்பங்கள் மற்றும் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிறது. எனவே இது தாராளவாத மக்களாட்சியின் அடிப்படைப் பண்புகளை கொண்டுள்ளதாக கூறலாம். மக்களாட்சி நடைமுறைகளுக்காக சில அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது. குறிப்பாக சட்டமன்றத்திற்கு இரு அவைகள், ஆட்சி அமைப்பிற்கு கூட்டாட்சி முறை என சிலவற்றை இந்த கோட்பாடு பரிந்துரைக்கிறது. பன்மைவாத மக்களாட்சியில் சமுகத்தின் பல்வேறுவகையான குழுக்களும் பங்கேற்று தங்கள் உரிமைகளை பாதுகாத்திட இயலும். இந்த முறையிலான மக்களாட்சியில் சமூகத்தின் பல்வேறு வகையான குழுக்களிடம் அதிகாரமானது பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இதன் மூலம் சமூகத்தின் அனைத்து பிரிவுகளும் பயன்பெறுகின்றன. மக்களாட்சியில் சீரான கால இடைவெளியில் தேர்தல்கள் நடைபெறவேண்டும். அதில் கட்சிகள், குழுக்கள் மற்றும் தனிமனிதர்களிடையே அரசியல் போட்டியை பன்மைவாத மக்களாட்சி முறை ஊக்குவிக்கிறது. ஜேம்ஸ் மேடிசன், (James Madison) ஜான் ஸ்டுவர்ட் மில் (John Stuart Mill) மற்றும் டி டாக்வில் (Tocqueville) போன்ற பயன்பாட்டுவாத சிந்தனையாளர்கள் தேர்தல்களின் மூலமே மாறுபட்ட மற்றும் பல்வேறுவிதமான மக்களின் விருப்பங்கள் வெளிப்படும் என்கின்றனர்.
ராபர்ட் டால் (Robort Dhal) எனும் அறிஞர் மக்களாட்சியின் சாராம்சமே குழுவாட்சி (Polyarchy) எனப்படும் பல்வேறு சிறுபான்மை சமூகத்தினரும் இணைந்து பணியாற்றும் அரசியல் அமைப்பில் தான் சிறப்பாக வெளிப்படும் என்கிறார்.
உங்களுக்குத் தெரியுமா?
ராபர்ட் டாலின் கோட்பாட்டில் பின்பு ஒரு திருத்தம் செய்யப்பட்டது. அமெரிக்காவில் மக்களாட்சி செயல்படும் விதத்தை சிறப்பாக விவரிப்பதற்காக உருக்குலைந்த குழுவாட்சி என்ற கோட்பாட்டினை முன்னிறுத்த அந்த திருத்தத்தை ராபர்ட் டால் செய்தார்.
மக்களாட்சியின் நோக்கமே ஆழ்ந்த பொது விவாதங்கள், பரப்புரைகள், மற்றும் வாத பிரதிவாதங்கள் வழியே பொதுமக்களின் நலன் காக்கப்படுவதாகும். இதையே இம் மக்களாட்சி முறை வலியுறுத்துகிறது. பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் விவாதங்கள் ஆகியவை கிராம அளவில் வெகு காலமாகவே உறுதியாக உள்ளன. அரசாங்கத்தின் செயல்பாட்டை கீழ்மட்டத்தில் பஞ்சாயத்து அமைப்புகள் வலுப்படுத்துகின்றன. ஜேம்ஸ் மில்லரின் கூற்றுப்படி ஆழ் விவாத கோட்பாடானது பங்கேற்பாளர்களின் பொதுவிவாதம், அதன் மூலம் அனைவரின் கருத்தையும் உள்ளடக்கிய முடிவுகள் என்ற அம்சங்களை கொண்டுள்ளது. இதன் சிறப்பம்சமே மக்கள் பொறுமையாக மாற்றுக்கருத்தை கேட்பதும், அதன் அடிப்படையில் தங்களது கருத்தில் மாற்றங்கள் கொண்டுவருவதும் தான். பொதுவிருப்பமும், பொது கருத்துமே ஆழ் விவாத கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட மக்களாட்சியின் முக்கிய பண்புகளாகும். இந்த மக்களாட்சி முறையானது பிரதிநிதித்துவ மக்களாட்சி மற்றும் நேரடியான மக்களாட்சியுடன் இணக்கமாக உள்ளது. நீதி கோட்பாடுகளின் புகழ் பெற்ற சிந்தனையாளர்களான ரால்ஸ் (Rawls) மற்றும் ஹேபர்மாஸ் (Habermas) இருவரும் அரசியல் தேர்வானது முறையாக, சட்டப்படியாக இருத்தல் வேண்டும் என்றும், ஒரு தெளிவான இலக்கை நோக்கிய சுதந்திரமான விவாதம் சமமான மற்றும் பகுத்தறியும் நபர்களிடையே நடந்து அதன் அடிப்படையில் அரசியல் தேர்வுகள் இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
செயல்பாடு
❖ தொலைகாட்சிகளில் நம் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றங்களில் தங்கள் தொகுதி பிரச்சனைகள் தொடர்பாக பேசுவதை கவனிக்கவும்.
❖ வகுப்பில் மாணவர்கள் தங்கள் வகுப்பு தலைவரை ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கவும்.
❖ நாடாளுமன்ற நடைமுறைகளை பின்பற்றி வகுப்பிலும் மாணவர் நாடாளுமன்றம் ஏற்பாடு செய்து விவாதங்கள் நடத்தவும். '
செயல்பாடு
அ) மக்களாட்சி நடைபெறும் சமூகங்களில் மதத்தையும், அரசையும் பிரிப்பது ஏன் முக்கியமாகிறது?
ஆ) அரசு பள்ளிகள் எந்த ஒரு மதத்தையும் ஏன் ஊக்குவிக்க கூடாது?
இ) இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதற்கான ஏதேனும் இரண்டு சான்றுகளை தருக.
ஈ) இந்தியா ஒரு மதச்சார்பற்ற அரசாக இருப்பதற்கு அச்சுறுத்தலாக உள்ள முக்கிய காரணங்கள் ஏதேனும் மூன்றினைக் கூறு.
உ) நாடாளுமன்றம், சட்டமன்றம், மாநகராட்சி மற்றும் பஞ்சாயத்துகள் என எல்லா மக்களாட்சி அமைப்புகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிகாலம் 5 ஆண்டுகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளதாக நீ படித்துள்ளாய். அது ஏன் அவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது?
ஊ) தினசரி பத்திரிகைகளில் நீ கண்ட ஏதேனும் மூன்று வித போராட்டங்களை பட்டியலிடு அதை ஒரு விளக்கப்படத்தில் (chart) ஒட்டி உன்னுடைய வகுப்பறையில் காட்சிப்படுத்துக.
எ) வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களும் சுழற்சி முறையில் பங்கேற்றல்: மக்களாட்சியின் குறைகள் பற்றி முதல் மாணவனிடமிருந்து தொடங்கி ஒவ்வொரு மாணவனாக பேசவும்.
தற்காலத்தில் மக்களாட்சிமுறை ஒரு சிறந்த அரசாங்க முறையாக உருவாகி உள்ளது. ஆனாலும் அதில் குறைகள் இல்லாமலில்லை. இந்த வாக்கியம் சரியானது என நிரூபிக்க ஏதேனும் ஐந்து குறைகளை எழுதுக.
நிகழ் ஆய்வு
இரண்டு கேலிச்சித்திரங்கள் கூறும் நிகழ்வுகள்
நேபாள நாட்டில் ஏப்ரல் புரட்சியும், மக்களாட்சியும்
ஏப்ரல் மாதம் 2006 -ஆம் ஆண்டு ஏழு கட்சி கூட்டணி என்ற மக்களாட்சியை ஆதரிக்கின்ற தலைவர்கள் நேபாள தலைநகரான காட்மாண்டுவை சுற்றி ஏழு இடங்களில் எதிர்ப்பு கூட்டங்களை நடத்த மக்களுக்கு அழைப்பு விடுத்தனர். அதை ஏற்று கூடிய லட்சக்கணக்கான நேபாள நாட்டு மக்கள் எதேச்சாதிகார முடியாட்சியை முடிவுக்கு கொண்டுவரவும், முழுமையான மக்களாட்சியை கொண்டுவரவும் நேபாள நாட்டுமுடியரசுடன் போராடத் தொடங்கினர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இருந்த இந்த போராட்டம் அரசர் கியானேந்திராவை (King Gyanendra) பதவி விலக வைத்து மக்களாட்சிக்கு வழி வகுத்தது.
நிகழ் ஆய்வு
பூடானில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மாற்றம்
நன்றி : தி ஹிந்து 03.11.2008 வரைந்தவர்: கேசவ்
பூடானின் நான்காவது அரசர் ஜிக்மே சிங்யோ வாங்சக் (Jigme Singye Wangchuck) பூடானின் 20 மாவட்டங்களுக்குப் பயணம் செய்தார். ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மாற்றத்தை விளக்கவே அந்த பயணம். பூடானின் அரசர் அந்நாடு பரம்பரை முடியாட்சியிலிருந்து நாடாளுமன்ற மக்களாட்சி முறைக்கு மாறவேண்டியதன் அவசியத்தை இந்த பயணத்தில் மக்களிடம் எடுத்துரைத்தார். அவர் 2006–ம் ஆண்டு, தான் 34 ஆண்டுகாலமாக அமர்ந்திருந்த அரியாசனத்தை துறந்தார். பூடான் நாடு நாடாளுமன்ற மக்களாட்சி முறைக்கு மாறியது. அரசின் தலைவராக பூடான் மன்னரின் மகன் ஜிக்மே கேசர் நம்கெயில் வாங்சக் (Jigme Khesar Namgyel Wangchuck), பொறுப்பேற்றார். இப்பொழுது பூடான் நாடாளுமன்ற மக்களாட்சியை கொண்டுள்ளது மற்றும் அரசர் ஜிக்மே ஓர் அரசமைப்பிலான மன்னராவார்.