நவீன மற்றும் சமகால மக்களாட்சி (Modern and Contemporary Democracy)
நவீன மற்றும் சமகால மக்களாட்சியானது 18ஆம் நுற்றாண்டின் இறுதியில் மேற்கு ஐரோப்பாவில் தொழிற்புரட்சியின் விளைவாகத் தோன்றியது. அதனுடன் கூடவே தொழிலாளர்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் தோன்றின.
நவீன மற்றும் சமகால மக்களாட்சியின் சிறப்பம்சங்கள்
• எழுதப்பட்ட அரசமைப்பு. மக்களின் அன்றாட வாழ்வின் தேவைக்கேற்றார்போல் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இதை வைத்திருத்தல் வேண்டும்.
• ஒவ்வொரு தனி மனிதனுக்கும், சமூக குழுக்களுக்கும், குறிப்பாக எளியோர் மற்றும் மத சிறுபான்மையினோருக்கான அரசமைப்பு உத்திரவாதமளிக்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள்.
• அரசின் பல்வேறு அமைப்புக்களுக்கிடையேயான அதிகார பிரிவினை.
• அரசாங்கம் (நிர்வாக அதிகாரம்) நாடாளுமன்றம் (சட்ட அதிகாரம்) மற்றும் நீதி அமைப்புகள் (நீதி அதிகாரம்).
• கருத்து, பேச்சு, எழுத்து மற்றும் பத்திரிகை சுதந்திரம்.
• மத சுதந்திரம்.
• அனைவருக்கும் சமமான மற்றும் பொதுவான வாக்குரிமை (ஒருவருக்கு ஒரு ஓட்டு) மற்றும் வயது வந்தோர் வாக்குரிமை.
மக்களாட்சியின் முக்கிய அம்சமாக “பெரும்பான்மையினரின் ஆட்சி” கூறப்பட்ட போதிலும் அந்த நடைமுறையானது நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் மூலமே சாத்தியப்படுகிறது. மேலும் உரிமைகளுக்கு தரப்படும் முக்கியத்துவம் அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் முதலான சுதந்திரங்கள் பிரதிநிதித்துவ மக்களாட்சியில் இன்றியமையாதவை ஆகும். மேலும் மக்கள் அரசியல் பரப்புரைகள், தேர்தல் அறிக்கைகள் மூலம் வேட்பாளர் யார் என்று அறிகிறார்கள், அதனடிப்படையில் தங்கள் வாக்குகளை முடிவு செய்கிறார்கள்.
மக்களாட்சி முறையானது ஒரு கட்சி ஆட்சி முறையில் இருந்து பல கட்சி ஆட்சி முறை வரை பல்வேறு நாடுகளில் செயல்பட்டுவருகிறது. பல நாடுகளில் அனைவருக்கும் சமமான வாக்குரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் மக்களாட்சி செயல்படுகிறது. ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மக்களாட்சி என்ற சொற்பதத்தை மக்கள் தாராளவாத மக்களாட்சியாகவே உணர்கிறார்கள். இதன் சிறப்பம்சமே அரசியல் பன்முகத்தன்மை, சட்டத்தின் முன் அனைவரும் சமம், குடிமைச் சுதந்திரங்கள் மற்றும் மனித உரிமைகள் ஆகியவைகளாகும். பேச்சு சுதந்திரமே நவீன மக்களாட்சியின் அடிப்படைத் தேவையாகும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து அரசாங்கங்களுமே மக்களின் பேச்சு சுதந்திரத்தின் மூலம் பொறுப்புடையதாக்கப்படுகின்றன. தற்போது எளிதாக கிடைக்கின்ற தகவல்களால் மக்களும், அரசாங்கமும் சிறந்த முடிவுகளை எடுக்க முடிகின்றது.
மக்களாட்சி கீழ்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது.
❖ அதிகாரப் போட்டி நிறைந்த அரசியல் அமைப்பு
❖ பொதுவாழ்வில் பங்கேற்கும் உரிமை
❖ சட்டத்தின் ஆட்சி