மக்களாட்சியை அளவிடுதல் மற்றும் மதிப்பிடுதல்
மக்களாட்சி என்பது மக்கள் தங்களது ஒப்புதலையோ அல்லது ஒப்புதலின்மையையோ காட்டுவதற்கான ஒரு சரியான முறையான வழியாகும். இந்திய அரசமைப்பின் வரைவுக் குழு தலைவர் முனைவர் பி.ஆர்.அம்பேத்கர் இதை வலியுறுத்திக் கூறுகிறார். "அரசியலில் நமக்கு சமத்துவம் இருக்கும். ஆனால் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் சமத்துவமற்ற தன்மையே நிலவும்" என்றார். அரசியலில் ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒவ்வொரு வாக்கிற்கும் ஒரே மதிப்பு என்ற விதியை அங்கீகரிக்கிறோம். ஆனால் நம் சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பின் காரணமாக நம்முடைய சமூக பொருளாதார வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே மதிப்பு என்ற விதிமுறையை தொடர்ந்து மறுத்தே வருகிறோம். மக்களாட்சியை மதிப்பிடுதல் மற்றும் அளவிடுதல் என்பது அதன் தரம் மற்றும் அளவின் அடிப்படையில் நிகழ்கிறது. தர நிலையை பகுப்பாய்வு செய்வதன் மூலம் சமூக மாற்றத்தின் இயக்காற்றலை கண்டறிய ஏதுவாகிறது. அதே சமயத்தில் அளவு நிலையை பகுப்பாய்வு செய்வதன் மூலம் சிறப்பான மக்களாட்சி நடைமுறைக்கான மாற்றம் எவ்வாறு உள்ளது என்று அறிய முடிகிறது.
மக்களாட்சியின் தர நிலையினை மக்கள் பங்கெடுக்கும் ஆர்ப்பாட்டங்கள், கண்டன கூட்டங்கள், பிரச்சாரங்கள், மக்கள் கருத்து சுதந்திரத்தினை பயன்படுத்தும் விதம் மற்றும் அரசமைப்பு மக்களுக்கு கொடுத்திருக்கும் உரிமைகள் இவற்றின் மூலம் அறியலாம். சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகள் சமூக மாற்றத்திற்கான குறிப்பாக சாதி, மத, பாலின மற்றும் பண்பாட்டு கண்ணோட்டங்களில் முன்னோக்கி செல்லவேண்டியதை வலியுறுத்துகின்றன. வளர்ச்சிக்கான பொருளாதார முறையானது மாறிக்கொண்டேயிருக்கிறது. கொள்கைகள் வகுப்பதன் முலம் ஏற்றத்தாழ்வுகளை களைவதற்காக மக்களாட்சி இம் மாறிவரும் பொருளாதார முறையுடன் நேரடி தொடர்பில் உள்ளது. மனித வள மேம்பாட்டுக் குறியீடு மற்றும் தனி நபர் வருமானத்தின் மூலம் மக்களாட்சியானது மதிப்பிடப்படுகிறது. கீழ்கண்ட அடிப்படை காரணிகள் மக்களாட்சியை அளவிடவும் மதிப்பிடவும் உதவுகின்றன.
1. இறையாண்மை: ஒரு ஆட்சியானது எந்த அளவிற்கு மற்ற நாடுகளின் குறுக்கீடு இல்லாமல் தன் நாட்டின் உள் விவகாரங்கள் மற்றும் வெளியுறவு கொள்கைகளை கையாள முடிகிறதோ அதுவே அதன் இறையாண்மை எனப்படும்.
2. ஆட்சி அதிகாரம்: நாட்டின் எல்லைக்குள் எந்த அளவிற்கு மத்திய அரசாங்கத்தின் அதிகாரம் செல்லுபடியாகுமோ அந்த எல்லைகள் ஆட்சி அதிகாரத்துக்குட்பட்டவை எனப்படும்.
3. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம்: இரகசிய வாக்கெடுப்பு முறை தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கையில் ஆட்சி அதிகாரம் இருப்பதை இது குறிக்கிறது.
4. வயது வந்தோர் வாக்குரிமை: தேர்தல்களில் ஒரு குறிப்பிட்ட வயதை கடந்த அனைத்து குடிமக்களுக்கும் எந்த வித பாகுபாடுமின்றி வாக்களிக்க கொடுக்கப்பட்டிருக்கும் உரிமை.
5. மொத்த வாக்குப்பதிவு: தேர்தல் நாளன்று வாக்களித்த மக்களின் வாக்கு சதவீதத்தை குறிக்கிறது.
6. முறைப்படுத்தப்பட்ட தேர்தல்கள்: தேர்தல் ஒரு சீரான இடைவெளியில் (5 ஆண்டுக்கு ஒரு முறை) குறிப்பிட்ட அட்டவணையில் அரசமைப்பு கூறியுள்ளபடி நடத்துதல்
7. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள்: அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட நியாயமான வாய்ப்புகளை வழங்குதல். மேலும் வாக்காளர்கள் எந்த வித பயமும், பாரபட்சமுமின்றி தங்கள் வாக்கை பதிவு செய்தல்.
8. ஊடகங்களை அணுகுதல் மற்றும் பரப்புரை: அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கும் ஊடகங்கள் மற்றும் பொதுவெளியில் பரப்புரை செய்ய அவர்களின் வாக்கு விகிதத்திற்கு ஏற்றார் போல் வாய்ப்பு வழங்குதல்.
9. சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்தல்: அரசமைப்பில் கூறியுள்ளபடியும் நீதிமன்றங்களின் விளக்கங்கள் மற்றும் வழிகாட்டுதலின் படியும் சட்டத்தை ஆட்சியாளர்கள் செயல்படுத்துதல்.
10. சட்டமன்ற அதிகாரம்: நாடாளுமன்ற அமைப்பின் மூலமாக சட்டமன்றமானது செயலாட்சித்துறை மீது ஏற்படுத்தும் கட்டுப்பாடு சட்டமன்ற அதிகாரம் எனப்படும்.
11. சுதந்திரமான நீதித்துறை: நீதித்துறையானது செயலாட்சி துறை மற்றும் எந்த ஒரு வெளிப்புற குறுக்கீடும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படுதலை இது குறிக்கிறது.
12. எதிர்க் கட்சிகளின் பங்கு: எதிர்க் கட்சிகள், ஆளும் கட்சியின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்தும், விமர்சித்தும் அது அரசமைப்பு வகுத்த பாதையை விட்டு விலகாமல் ஆட்சி புரிய வைத்து நாடாளுமன்ற மக்களாட்சியைக் காப்பதை இது குறிக்கிறது.
13. நீதிப் புனராய்வு: சட்டமன்றம் இயற்றும் சட்டங்களையும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும், அரசமைப்பு விதிகளின் அடிப்படையில் சீராய்வு செய்யவும், அவை மற்ற அமைப்புகளால் எந்த அளவிற்கு மதிக்கப்படுகிறது என்பதை கண்காணிக்கவும் உள்ள நீதிமன்ற அதிகாரம்.
14. கட்சி பலம்: கட்சிகள் நிறுவனமயமாக்கப்பட்டு அவற்றின் அதிகாரம் மற்றும் பணிகள் பரவலாக்கப்பட்டு அவை அனைவருக்குமான கட்சிகளாக இருப்பதே அவற்றின் பலத்தை தீர்மானிக்கிறது.
15. கட்சியின் சித்தாந்தம்: அரசியல் கட்சிகள் நன்கு வரையறுக்கப்பட்ட நிலையான மற்றும் ஒத்திசைவான கட்சி சித்தாந்தங்களை வகுத்துள்ளன.
16. கட்சி முறை அமைப்பு: சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை.
17. பத்திரிகை சுதந்திரம்: பத்திரிகைகள் சுதந்திரமாகவும், பயமின்றியும் தங்களது பல்வேறு வகையான அரசியல் கருத்துக்களையும், விமர்சனங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல எந்த அளவிற்கு முடிகிறதோ அதுவே பத்திரிகை சுதந்திரமாகும்.
18. சுதந்திரமான குடிமைச்சமூகம்: குடிமைச் சமூகமானது அரசுக்கு எதிரான அரசியல் தலைவர்களுக்கு எதிரான தங்களது கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை எந்த வித அச்சுறுத்தலுமின்றி வெளிப்படுத்தும் சூழல்.
19. குடிமைச்சுதந்திரம்: அரசமைப்பில் பேணப்பட்டுள்ள அடிப்படை மற்றும் மனித உரிமைகள் அனைத்து குடிமக்களுக்கும் வழங்கப்படுதல்.
20. சொத்துரிமை: அரசமைப்பில் பாதுகாப்பளிக்கப்பட்டிருக்கும் சொத்து உரிமைகள்.
21. மத சுதந்திரம்: மதங்களிடையே நல்லிணக்கத்தை பேணுவதற்கும் அரசியல் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் மதச்சார்பின்மையை நிலைநாட்டவும் மத சுதந்திரமானது அரசமைப்பால் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உத்திரவாதமளிக்கப்பட்டுள்ளது.
22. வளங்கள் மீதான அனைவருக்குமான வாய்ப்பு: வளங்கள் சரிசமமாக அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு பொருளாதார சமநிலையை வருவாய், கல்வி மற்றும் சுகாதாரத்தின் மூலம் ஏற்படுத்துதல். இது அரசியலில் அனைவரும் பங்கேற்பதற்கான ஒரு சிறந்த யுத்தியாகும்.
23. இயற்கைச் செல்வங்கள் மற்றும் பொதுச்சொத்துக்கள் மீதான அனைவருக்குமான வாய்ப்பு: இயற்கை செல்வங்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் மீது அனைவருக்கும் சரிசமமான வாய்ப்பு மற்றும் அதை எளிதில் பயன்படுத்தும் வழிகள் இருப்பின் அது அனைவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் மற்றும் சமூக விடுதலைக்கு வித்திடும்.
24. பாலின சமத்துவம்: சட்டமன்றம், சமூக அமைப்புகள் மற்றும் அரசின் பல்வேறு பதவிகளில் பெண்ணுக்கும், ஆணுக்கும் இணையான பிரதிநிதித்துவம் மற்றும் அவர்களை கண்ணியமாக நடத்துதல்.
25. ஏழை எளியோரின் சமூக பொருளாதார நிலை மேம்பட அரசியல் சமத்துவம்: சாதி, இன, பழங்குடியினர் மற்றும் மத சிறுபான்மையினருக்கு அரசமைப்பில் சமஉரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் அவர்கள் தங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை எட்டவும் அரசின் நிர்வாக அதிகாரத்தில் பங்கேற்கவும் ஏதுவாகிறது. மேலும் சட்ட மன்றத்தில் அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை பெறவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பதையும் அவர்கள் தங்களின் அரசியல் பங்கேற்பின் மூலம் பெறுகின்றனர்.