C++ ஓர் அறிமுகம் - C++ தரவு இனங்கள் | 11th Computer Science : Chapter 9 : Introduction to C++
C++ தரவு இனங்கள்
C++ல் தரவு இனங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவை,
(1) அடிப்படை தரவு இனங்கள் (Fundamental data types)
(2) பயனர் வரையறுக்கும் தரவு இனங்கள் (User-defined data types and)
(3) தருவிக்கப்பட்ட தரவு இனங்கள் (Derived data types).
இந்த பாடப் பகுதியில் அடிப்படை தரவு இனங்களைப் பற்றி அறிந்து கொள்வோம். தரவு இனங்களின் வேலை செய்யும் விதத்தை பற்றி அறிந்து கொள்ள, மாறிகளைப் (Variable) பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும். மாறிகள் என்பவை குறிப்பிட்ட தரவு இனங்களின் மதிப்புகளை தாங்கியுள்ள, பெயரிடப்பட்ட நினைவாக இடங்களை குறிக்கிறது. C++ -ல் மாறிகளை பயன்படுத்துவதற்கு முன்னரே அவற்றை அதன் தரவினங்களோடு கண்டிப்பாக அறிவிக்கவேண்டும். அதாவது, எந்த வகையான தரவுகளை மாறியில் இருத்தப்போகிறோம் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
மாறிகளை அறிவிப்பதற்கான கட்டளை அமைப்பு
<தரவினம் > < மாறியின் பெயர் ;
எடுத்துக்காட்டாக:
int num1;
ஒரே இனத்தை சார்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட மாறிகளை ஒரே அறிவிப்புக் கூற்றில் குறிப்பிட முடியும். அவை, காற்புள்ளியால் (,) பிரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக:
int num1, num2, sum;
மேலே கொடுக்கப்பட்ட கூற்றின் படி மதிப்பெண்களை சேமிக்க முதலில் மாறியை அதன் தரவினத்தோடு அறிவிக்க வேண்டும். தகுந்த தரவினத்தை தேர்ந்தெடுப்பதற்கு அறிவும், அனுபவமும் தேவை சாதாரணமாக, மதிப்பெண்கள் முழு எண்களாகவே இருக்கும். எனவே, கணிப்பொறி மதிப்பெண்ணை சேமிக்கும் மாறி முழு எண் தரவினமாக இருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு:
int comp_science_marks;
இப்பொழுது comp_science_marks என்ற ஒரு மாறியில் மதிப்பெண் சேமிப்பதற்கு தயாராக உள்ளது.
மாறிகளை பற்றி மேலும் பின்வரும் பகுதிகளில் தெரிந்து கொள்ளலாம்.