Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | நிலையுருக்கள் (மாறிலிகள்) - C++ நிரல்
   Posted On :  24.09.2022 08:21 pm

11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம்

நிலையுருக்கள் (மாறிலிகள்) - C++ நிரல்

ஒரு நிரல் இயங்கும்போது மதிப்புகள் மாறாத தரவுகள் நிலையுருக்கள் ஆகும். எனவே, நிலையுருக்கள் மாறிலிகள் என அழைக்கப்படுகிறது.

நிலையுருக்கள் (மாறிலிகள்) Literals (Constants)


• ஒரு நிரல் இயங்கும்போது மதிப்புகள் மாறாத தரவுகள் நிலையுருக்கள் ஆகும். எனவே, நிலையுருக்கள் மாறிலிகள் என அழைக்கப்படுகிறது. C++ -ல் பல வகையான நிலையுருக்கள் உள்ளன.



எண் மாறிலிகள் (Numeric Constants)

மாறிகளாகப் பயன்படுத்தப்படும் எண்கள் எண் மாறிலிகள் ஆகும். எண் மாறிலிகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன: 

1. முழு எண் மாறிலிகள் நிலையான புள்ளி மாறிலிகள் (Integer Constants / Fixed point constants) 

2. மெய் எண் மாறிலிகள் / மிதப்புப்புள்ளி மாறிலிகள் (Real constants / Floating point constants)

 

(1) முழு எண் மாறிலிகள் / நிலையான புள்ளி மாறிலிகள் (Integer Constants (or) Fixed point constants)

பின்ன மதிப்புகள் இல்லாத எண்கள் முழு எண்களாகும். ஒரு முழு எண் மாறிலி எந்த ஒரு தசம புள்ளியும் இல்லாமல் குறைந்தபட்சம் ஒரு இலக்கத்தை கொண்டிருக்க வேண்டும். இது மறை குறியீடு அல்லது குறியீடு இல்லாமல் இருக்கும் மறை குறியீடு உள்ள முழு எண்கள் எதிர்மறை எண்ணாக கருதப்படுகின்றன. காற்புள்ளிகள் மற்றும் வெற்று இடைவெளிகள் ஆகியவை ஒரு பகுதியாக அனுமதிக்கப்படாது. 

C++ இல், மூன்று வகையான முழு எண் மாறிலிகள் உள்ளன: (i) பதின்மம் (ii) எண்ணிலை (iii) பதினாறு நிலை.


(i) பதின்மம் (Decimal)

0 முதல் 9 வரையான, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முழு எண் இலக்கங்களின் வரிசை

குறிப்பு:

ஒரு பதின்ம மாறிலியை பின்ன மதிப்புகளுடன் கொடுத்தால், நிரல்பெயர்ப்பி முழுஎண் பகுதியை மட்டுமே எடுத்துக்கொள்ளும் பின்ன பகுதியை நிராகரித்துவிடும். இது உள்ளுறை இனமாற்றம் (Implicit Conversion) என அழைக்கப்படுகிறது. இதைப் பற்றி பின்னர் தெரிந்துகொள்ளலாம்.


(ii) எண்ம / எண்ணிலை (Octal) 

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்ம இலக்கங்களின் வரிசை (0 ... .7). எண்ம மாறிலிகள் 0 என்ற முன்னொட்டுடன் தொடங்குகிறது.


குறிப்பு 

**0ல் தொடங்கும் ஒரு பின்ன எண்ணை, எண்ணிலை எண்ணாக பயன்படுத்தும் போது, அது எண்ம எண்ணாக கருதாமல், பதின்ம எண்ணாக கருதப்படும்.


(iii) பதினாறுநிலை (Hexadecimal) 

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பதினாறுநிலை இலக்கங்களின் வரிசை (0 …. 9, A …. F). பதினாறுநிலை மாறிலிகள் 0x அல்லது 0X என்ற முன்னொட்டு உடன் தொடங்குகிறது.


பொதுவாக, ஒரு முழு எண்ணுடன், L அல்லது l மற்றும் U அல்லது u ஆகியவற்றுள் ஒன்றை பின்னொட்டாக கொடுக்கும் போது அது long அல்லது unsigned வகை மாறிலியாக கருதிக்கொள்ளும்.


(2) மெய் மாறிலிகள் / மிதப்புப்புள்ளி மாறிலிகள் (Real Constants (or) Floating point constants) 

ஒரு மெய் அல்லது மிதப்புப்புள்ளி மாறிலி பின்னப்பகுதியை கொண்ட ஒரு எண் மாறிலி ஆகும். இந்த மாறிலிகள் பின்ன வடிவில் அல்லது அடுக்கு வடிவத்தில் எழுதப்படலாம். 

பின்ன வடிவில் உள்ள ஒரு மெய் மாறிலி குறியிடப்பட்ட (signed) அல்லது குறியிடப்படாத (unsigned), இலக்கங்களின் இடையில் ஒரு தசம புள்ளியைக் கொண்ட வரிசை ஆகும். ஒரு தசம புள்ளிக்கு முன்னும் பின்னும் ஒரு இலக்கத்தை அது கொண்டிருக்க வேண்டும். இதில் + அல்லது - குறியீடு முன்னொட்டாக இருக்கும். எந்த குறியீடும் இல்லாத மெய் மாறிலி நேர்மறை எண்ணாகக் கருதப்படுகிறது. 

அடுக்கு (Exponent) வடிவில் உள்ள மெய் மாறிலிகள் இரண்டு பாகங்களைக் கொண்டுள்ளது: 

(1) அடிஎண் (Mantissa) மற்றும் (2) அடுக்குக்குறி (Exponent). அடி எண் ஒரு முழு எண் அல்லது மெய் மாறிலியாக இருக்கவேண்டும். ஒரு எண்ணை அடுக்குக்குறி வடிவில் கொடுப்பதற்கு அடி எண்ணை தொடர்ந்து E அல்லது e என்ற ஒரு எழுத்து இருக்க வேண்டும். அடுக்குக்குறி எப்பொழுதும் முழு எண்ணாக இருக்கவேண்டும்.

உதாரணமாக, 58000000.00 என்பதை 0.58 × 108 அல்லது 0.58E8 என எழுதலாம். 


எடுத்துக்காட்டு



பூலியன் நிலையுருக்கள் (Boolean Literals)

பூலியன் நிலையுருக்கள் பூலியன் மதிப்புகளில் ஒன்றான மெய் அல்லது பொய் என்பதை குறிப்பிடப் பயன்படுத்தப்படுகின்றன. மெய் எனில் மதிப்பு 1- என்னும் மற்றும் பொய் எனில் மதிப்பு 0 –எனவும் எடுத்துக்கொள்ளும்.


குறியுரு மாறிலி (Character Constant) 

குறியுரு மாறிலி என்பது ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் தரப்படும் ஒற்றை குறியுருவைக் கொண்டிருக்கும். C++ -ல் ஒரு குறியுரு மாறிலி, ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் ஒற்றை எழுத்தை கண்டிப்பாக கொண்டிருக்கவேண்டும். 

சரியான குறியுரு மாறிலிகள் : A', '2', '$' 

தவறான குறியுரு மாறிலிகள் : “A”

ஒவ்வொரு ஒற்றை குறியுரு மாறிலி மதிப்புக்கும் நிகரான ASCII மதிப்பு உள்ளது. உதாரணமாக, 'A'-ன் மதிப்பு 65 ஆகும். 


விடுபடுவரிசை / வடிவற்ற-குறியுரு (Escape sequences / Non-graphic characters)

C++ சில அச்சிட முடியாத எழுத்துக்களை குறியுரு மாறிலிகளாக ஏற்கிறது. அச்சிட முடியாத எழுத்துக்கள், வடிவற்ற - குறியுருக்கள் என அழைக்கப்படுகின்றன. அச்சிட முடியாத எழுத்துக்கள் C++ இல் ஒரு நிரலை செயல்படுத்தும் போது, விசைப்பலகையிலிருந்து நேரடியாக தட்டச்சு செய்ய முடியாத எழுத்துக்கள் ஆகும்: உதாரணமாக back space, tabs போன்றவை. இந்த அச்சிட முடியாத எழுத்துக்கள் விடுபடுவரிசைகளை பயன்படுத்தி குறிப்பிடப்படுகின்றன. ஒரு விடுபடுவரிசை ஒரு பின்சாய்வுக் குறியீட்டால் குறிக்கப்படுகிறது, அதன் பின் ஒன்று அல்லது இரண்டு எழுத்துக்கள் வரலாம்.


ஒரு விடுபடுவரிசை இரண்டு எழுத்துகளைக் கொண்டிருந்தாலும், அவை ஒற்றை மேற்கோள் குறிக்குள் குறிப்பிடப்பட வேண்டும். ஏனெனில், C++ விடுபடுவரிசையை ஒரு குறியுரு மாறிலியாக கருதுகிறது மற்றும் ASCII குறியீட்டு முறையில், நினைவகத்தில் ஒரு பைட் மட்டுமே ஒதுக்கீடு செய்கிறது.

உங்களுக்குத் தெரியுமா?

ASCII (American Standard Code for Information Interchange) முதன் முதலில் 1963 ஆம் ஆண்டில் X3 கமிட்டி மூலமாக உருவாக்கப்பட்டது, இது American Standards Association (ASA) இன் ஒரு பிரிவாகும்.


சரநிலையுருக்கள் (String literals)

சரநிலையுருக்கள் என்பது இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் தரப்படும் குறியுருக்களின் வரிசையைக் கொண்டிருக்கும். சரநிலையுருக்கள் தானமைவாக 'Null' என்னும் சிறப்புக் குறியுருவை ஈற்றில் இணைத்துக்கொள்ளும். எனவே "welcome" என்ற சரம் "welcome\0” என்று நினைவகத்தில் குறிக்கப்படுகிறது மற்றும் இந்த சரத்தின் அளவு 7 என்று குறிக்கப்படாமல் 8 குறியுருக்களாக குறிக்கப்படும். அதாவது, ஈற்றில் இணைக்கப்படும் '\0' வையும் சேர்த்துக் கொள்ளும். 

சரியான சரநிலையுருக்கள்: “All”, “Welcome" "1234” 

தவறான சரநிலையுருக்கள்: 'Welcome', '1234'

11th Computer Science : Chapter 9 : Introduction to C++ : Literals (Constants) - C++ program in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம் : நிலையுருக்கள் (மாறிலிகள்) - C++ நிரல் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம்