Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | மொழித் தொகுதி (வில்லைகள்) - C++ நிரல்
   Posted On :  24.09.2022 08:02 pm

11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம்

மொழித் தொகுதி (வில்லைகள்) - C++ நிரல்

மொழித்தொகுதிகள் (Lexical units) அல்லது மொழிக்கூறுகள் (Lexical elements) அல்லது வில்லைகள் (Tokens) என அழைக்கப்படுகின்றன. C++ பின்வரும் வில்லைகளை கொண்டுள்ளது: • சிறப்புச் சொற்கள் • குறிப்பெயர்கள் • நிலையுருக்கள் • செயற்குறிகள் • நிறுத்தற்குறிகள்

மொழித் தொகுதி (வில்லைகள்)


C++ நிரல் கூற்றுகள், பல சிறிய கூறுகளால் நிர்வகிக்கப்படுகின்றன கட்டளைகள், மாறிகள், மாறிலிகள் மற்றும் செயற்குறிகள், நிறுத்தக் குறிகள் போன்ற குறியீடுகள் கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த தனிப்பட்ட கூறுகள் கூட்டாக, மொழித்தொகுதிகள் (Lexical units) அல்லது மொழிக்கூறுகள் (Lexical elements) அல்லது வில்லைகள் (Tokens) என அழைக்கப்படுகின்றன. C++ பின்வரும் வில்லைகளை கொண்டுள்ளது: 

• சிறப்புச் சொற்கள்

• குறிப்பெயர்கள்

• நிலையுருக்கள்

• செயற்குறிகள்

• நிறுத்தற்குறிகள்


வில்லைகள்

ஒரு நிரலில் உள்ள மீச்சிறு தனித்த அலகு, வில்லைகள் அல்லது மொழித் தொகுதி என்று அழைக்கப்படுகிறது.


1. சிறப்புச் சொற்கள் (Keywords) 


C ++ -நிரல் பெயர்ப்பிக்கு மட்டுமே புரிகின்ற பொருள் கொண்ட காப்பு சொற்களுடன் (reserved words), அவை C++ நிரல்களைக் கட்டமைக்க, சிறப்புச் அவசியமான கூறுகளாகும். பெரும்பாலான சொற்கள் C, C ++ மற்றும் Java க்கு பொதுவானது.

C++ ஒரு எழுத்து வடிவ உணர்த்தி (case sensitive) மொழியாகும் எனவே, சிறப்புச் சொற்கள் சிறிய எழுத்துக்களில் இருக்க வேண்டும்.

அட்டவணை 9.1 C++ சிறப்புச் சொற்கள்


· திருத்தங்கள் மற்றும் சேர்த்தல்களுடன், பின் வரும் சிறப்புச் சொற்களும் அடங்கும்:

using, namespace, bal, static_cast, const_cast, dynamic_cast, true, false

· இரட்டை அடிக்கோடிடப்பட்ட கொண்ட குறிப்பெயர்கள், C++ செயலாக்கத்திற்கும் மற்றும் அடிப்படைகளஞ்சியங்களைப் (standard libraries) பயன்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால் இந்த குறிப்பெயர்களை பயனர்கள் தவிர்க்க வேண்டும். 


2. குறிப்பெயர்கள் (Identifiers)


குறிப்பெயர்கள் என்பது C++ நிரலில் வெவ்வேறு பகுதிகளுக்கு கொடுக்கப்படும் பெயர்களாகும். இவை பயனரால் வரையறுக்கப்பட்ட, மாறிகள், செயற்கூறுகள், அணிகள், இனக்குழுக்கள் போன்றவை ஆகும். இவை ஒரு நிரலின் அடிப்படை கட்டுமானத் தொகுதிகள் ஆகும். ஒவ்வொரு மொழியிலும் குறிப்பெயர்களுக்கு பெயரிடுவதற்கு என சில குறிப்பிட்ட விதிகள் உள்ளன. 


குறிப்பெயர்களுக்கு பெயரிடுவதற்கான விதிகள்: 

• ஒரு குறிப்பெயரின் முதல் எழுத்து கண்டிப்பாக எழுத்து அல்லது அடிக்கோடிட்டு (_) இருக்க வேண்டும். 

• எழுத்துக்கள், எண்கள் மற்றும் அடிக்கோடுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. பிற சிறப்பு எழுத்துருக்கள் பெயரின் ஒரு பகுதியாக அனுமதிக்கப்படாது.

• C++ ஒரு எழுத்து வடிவ உணர்த்தியாகும் (case sensitive) பெரிய (Uppercase) மற்றும் சிறிய (lowercase) எழுத்துக்கள் வெவ்வேறாக கருதப்படுகின்றன. 

• சிறப்புச் சொற்கள் (Keywords) அல்லது காப்புச் சொற்கள் (Reserve words) குறிப்பெயரின் பெயராக பயன்படுத்த முடியாது. 

• ANSI தரநிலைகளின் படி, C++ -ல் குறிப்பெயர்களுக்கான எழுத்தின் நீளத்திற்கு எந்த எல்லையும் இல்லை. எனவே அனைத்து எழுத்துகளும் குறிப்பிடத்தக்கவை.


• மாறியின் பெயரை பல்வேறு பகுதிகளாக பிரிக்க, மாறியின் பெயர்களில் அடிக்கீருடன் கொள்ளலாம் (எ.கா: total_sales என்பது சரியான குறிப்பெயர், total sales ஒரு தவறான குறிப்பெயர் ஆகும்.) 

• tamilMark போன்ற பாணி கொண்ட மாறியை பயன்படுத்தலாம். இரண்டாவது வார்த்தையின் முதல் எழுத்து ஆங்கில பெரிய எழுத்தில் இருப்பதைக் காணலாம். 


3. நிலையுருக்கள் (மாறிலிகள்) Literals (Constants)


• ஒரு நிரல் இயங்கும்போது மதிப்புகள் மாறாத தரவுகள் நிலையுருக்கள் ஆகும். எனவே, நிலையுருக்கள் மாறிலிகள் என அழைக்கப்படுகிறது. C++ -ல் பல வகையான நிலையுருக்கள் உள்ளன.



எண் மாறிலிகள் (Numeric Constants)

மாறிகளாகப் பயன்படுத்தப்படும் எண்கள் எண் மாறிலிகள் ஆகும். எண் மாறிலிகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன: 

1. முழு எண் மாறிலிகள் நிலையான புள்ளி மாறிலிகள் (Integer Constants / Fixed point constants) 

2. மெய் எண் மாறிலிகள் / மிதப்புப்புள்ளி மாறிலிகள் (Real constants / Floating point constants)

 

(1) முழு எண் மாறிலிகள் / நிலையான புள்ளி மாறிலிகள் (Integer Constants (or) Fixed point constants)

பின்ன மதிப்புகள் இல்லாத எண்கள் முழு எண்களாகும். ஒரு முழு எண் மாறிலி எந்த ஒரு தசம புள்ளியும் இல்லாமல் குறைந்தபட்சம் ஒரு இலக்கத்தை கொண்டிருக்க வேண்டும். இது மறை குறியீடு அல்லது குறியீடு இல்லாமல் இருக்கும் மறை குறியீடு உள்ள முழு எண்கள் எதிர்மறை எண்ணாக கருதப்படுகின்றன. காற்புள்ளிகள் மற்றும் வெற்று இடைவெளிகள் ஆகியவை ஒரு பகுதியாக அனுமதிக்கப்படாது. 

C++ இல், மூன்று வகையான முழு எண் மாறிலிகள் உள்ளன: (i) பதின்மம் (ii) எண்ணிலை (iii) பதினாறு நிலை.


(i) பதின்மம் (Decimal)

0 முதல் 9 வரையான, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முழு எண் இலக்கங்களின் வரிசை

குறிப்பு:

ஒரு பதின்ம மாறிலியை பின்ன மதிப்புகளுடன் கொடுத்தால், நிரல்பெயர்ப்பி முழுஎண் பகுதியை மட்டுமே எடுத்துக்கொள்ளும் பின்ன பகுதியை நிராகரித்துவிடும். இது உள்ளுறை இனமாற்றம் (Implicit Conversion) என அழைக்கப்படுகிறது. இதைப் பற்றி பின்னர் தெரிந்துகொள்ளலாம்.


(ii) எண்ம / எண்ணிலை (Octal) 

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்ம இலக்கங்களின் வரிசை (0 ... .7). எண்ம மாறிலிகள் 0 என்ற முன்னொட்டுடன் தொடங்குகிறது.


குறிப்பு 

**0ல் தொடங்கும் ஒரு பின்ன எண்ணை, எண்ணிலை எண்ணாக பயன்படுத்தும் போது, அது எண்ம எண்ணாக கருதாமல், பதின்ம எண்ணாக கருதப்படும்.


(iii) பதினாறுநிலை (Hexadecimal) 

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பதினாறுநிலை இலக்கங்களின் வரிசை (0 …. 9, A …. F). பதினாறுநிலை மாறிலிகள் 0x அல்லது 0X என்ற முன்னொட்டு உடன் தொடங்குகிறது.


பொதுவாக, ஒரு முழு எண்ணுடன், L அல்லது l மற்றும் U அல்லது u ஆகியவற்றுள் ஒன்றை பின்னொட்டாக கொடுக்கும் போது அது long அல்லது unsigned வகை மாறிலியாக கருதிக்கொள்ளும்.


(2) மெய் மாறிலிகள் / மிதப்புப்புள்ளி மாறிலிகள் (Real Constants (or) Floating point constants) 

ஒரு மெய் அல்லது மிதப்புப்புள்ளி மாறிலி பின்னப்பகுதியை கொண்ட ஒரு எண் மாறிலி ஆகும். இந்த மாறிலிகள் பின்ன வடிவில் அல்லது அடுக்கு வடிவத்தில் எழுதப்படலாம். 

பின்ன வடிவில் உள்ள ஒரு மெய் மாறிலி குறியிடப்பட்ட (signed) அல்லது குறியிடப்படாத (unsigned), இலக்கங்களின் இடையில் ஒரு தசம புள்ளியைக் கொண்ட வரிசை ஆகும். ஒரு தசம புள்ளிக்கு முன்னும் பின்னும் ஒரு இலக்கத்தை அது கொண்டிருக்க வேண்டும். இதில் + அல்லது - குறியீடு முன்னொட்டாக இருக்கும். எந்த குறியீடும் இல்லாத மெய் மாறிலி நேர்மறை எண்ணாகக் கருதப்படுகிறது. 

அடுக்கு (Exponent) வடிவில் உள்ள மெய் மாறிலிகள் இரண்டு பாகங்களைக் கொண்டுள்ளது: 

(1) அடிஎண் (Mantissa) மற்றும் (2) அடுக்குக்குறி (Exponent). அடி எண் ஒரு முழு எண் அல்லது மெய் மாறிலியாக இருக்கவேண்டும். ஒரு எண்ணை அடுக்குக்குறி வடிவில் கொடுப்பதற்கு அடி எண்ணை தொடர்ந்து E அல்லது e என்ற ஒரு எழுத்து இருக்க வேண்டும். அடுக்குக்குறி எப்பொழுதும் முழு எண்ணாக இருக்கவேண்டும்.

உதாரணமாக, 58000000.00 என்பதை 0.58 × 108 அல்லது 0.58E8 என எழுதலாம். 


எடுத்துக்காட்டு



பூலியன் நிலையுருக்கள் (Boolean Literals)

பூலியன் நிலையுருக்கள் பூலியன் மதிப்புகளில் ஒன்றான மெய் அல்லது பொய் என்பதை குறிப்பிடப் பயன்படுத்தப்படுகின்றன. மெய் எனில் மதிப்பு 1- என்னும் மற்றும் பொய் எனில் மதிப்பு 0 –எனவும் எடுத்துக்கொள்ளும்.


குறியுரு மாறிலி (Character Constant) 

குறியுரு மாறிலி என்பது ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் தரப்படும் ஒற்றை குறியுருவைக் கொண்டிருக்கும். C++ -ல் ஒரு குறியுரு மாறிலி, ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் ஒற்றை எழுத்தை கண்டிப்பாக கொண்டிருக்கவேண்டும். 

சரியான குறியுரு மாறிலிகள் : A', '2', '$' 

தவறான குறியுரு மாறிலிகள் : “A”

ஒவ்வொரு ஒற்றை குறியுரு மாறிலி மதிப்புக்கும் நிகரான ASCII மதிப்பு உள்ளது. உதாரணமாக, 'A'-ன் மதிப்பு 65 ஆகும். 


விடுபடுவரிசை / வடிவற்ற-குறியுரு (Escape sequences / Non-graphic characters)

C++ சில அச்சிட முடியாத எழுத்துக்களை குறியுரு மாறிலிகளாக ஏற்கிறது. அச்சிட முடியாத எழுத்துக்கள், வடிவற்ற - குறியுருக்கள் என அழைக்கப்படுகின்றன. அச்சிட முடியாத எழுத்துக்கள் C++ இல் ஒரு நிரலை செயல்படுத்தும் போது, விசைப்பலகையிலிருந்து நேரடியாக தட்டச்சு செய்ய முடியாத எழுத்துக்கள் ஆகும்: உதாரணமாக back space, tabs போன்றவை. இந்த அச்சிட முடியாத எழுத்துக்கள் விடுபடுவரிசைகளை பயன்படுத்தி குறிப்பிடப்படுகின்றன. ஒரு விடுபடுவரிசை ஒரு பின்சாய்வுக் குறியீட்டால் குறிக்கப்படுகிறது, அதன் பின் ஒன்று அல்லது இரண்டு எழுத்துக்கள் வரலாம்.


ஒரு விடுபடுவரிசை இரண்டு எழுத்துகளைக் கொண்டிருந்தாலும், அவை ஒற்றை மேற்கோள் குறிக்குள் குறிப்பிடப்பட வேண்டும். ஏனெனில், C++ விடுபடுவரிசையை ஒரு குறியுரு மாறிலியாக கருதுகிறது மற்றும் ASCII குறியீட்டு முறையில், நினைவகத்தில் ஒரு பைட் மட்டுமே ஒதுக்கீடு செய்கிறது.

உங்களுக்குத் தெரியுமா?

ASCII (American Standard Code for Information Interchange) முதன் முதலில் 1963 ஆம் ஆண்டில் X3 கமிட்டி மூலமாக உருவாக்கப்பட்டது, இது American Standards Association (ASA) இன் ஒரு பிரிவாகும்.


சரநிலையுருக்கள் (String literals)

சரநிலையுருக்கள் என்பது இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் தரப்படும் குறியுருக்களின் வரிசையைக் கொண்டிருக்கும். சரநிலையுருக்கள் தானமைவாக 'Null' என்னும் சிறப்புக் குறியுருவை ஈற்றில் இணைத்துக்கொள்ளும். எனவே "welcome" என்ற சரம் "welcome\0” என்று நினைவகத்தில் குறிக்கப்படுகிறது மற்றும் இந்த சரத்தின் அளவு 7 என்று குறிக்கப்படாமல் 8 குறியுருக்களாக குறிக்கப்படும். அதாவது, ஈற்றில் இணைக்கப்படும் '\0' வையும் சேர்த்துக் கொள்ளும். 

சரியான சரநிலையுருக்கள்: “All”, “Welcome" "1234” 

தவறான சரநிலையுருக்கள்: 'Welcome', '1234' 


4. செயற்குறிகள் (Operators)


செயற்குறிகள் என்பது சில கணித மற்றும் ஏரண செயல்பாடுகளை செய்ய பயன்படும் குறியீடுகளாகும். செயலேற்பிகள் (Operands) என்பது செயற்குறிகளால் செயல்படுத்தப்படும் தரவு கூறுகள் அல்லது மதிப்புகளை குறிக்கிறது.



C++ -ல், செயலேற்பிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் செயற்குறிகள் பின்வருமாறு வகைப் படுத்தப்படுகின்றன. 

(i) ஒரும செயற்குறிகள் (Unary Operators) - ஒரே ஒரு செயலேற்பியை மட்டும் ஏற்கும் 

(ii) இரும செயற்குறிகள் (Binary Operators) - இரண்டு செயலேற்பியை மட்டும் ஏற்கும் 

(iii) மும்ம செயற்குறிகள் (Ternary Operators) - மூன்று செயலேற்பியை மட்டும் ஏற்கும் 


பொதுவாக, C++ செயற்குறிகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன. 


1. கணக்கீட்டுச்செயற்குறிகள் (Arithmetic Operators) 

2. ஒப்பீட்டுச்செயற்குறிகள் (Relational Operators) 

3. தருக்கச்செயற்குறிகள் (Logical Operators) 

4. மதிப்பிருத்து செயற்குறிகள் (Assignment Operators) 

5. நிபந்தனைச்செயற்குறிகள் (Conditional Operator) 


(1) கணக்கீட்டுச் செயற்குறிகள் (Arithmetic Operators)

கணக்கீட்டுச் செயற்குறிகள் எளிய கணிதச் செயல்பாடுகளாகிய கூட்டல், கழித்தல், பெருக்கல், மற்றும் வகுத்தல் போன்ற கணக்கீடுகளை செயல்படுத்துகிறது. 


மேலே குறிப்பிடப்பட்டுள்ள கணக்கீட்டுச் செயற்குறிகள் இரும செயற்குறிகளாகும். இருமச் செயற்குறிகளுக்கு குறைந்தபட்சம் இரண்டு செயலேற்பிகள் தேவை. 


மிகுப்பு மற்றும் குறைப்புச்செயற்குறிகள் Increment and Decrement Operators 

+ + (Plus, Plus) மிகுப்பு செயற்குறி 

-- (Minus, Minus) குறைப்புச் செயற்குறி

மிகுப்பு அல்லது குறைப்பு செயற்குறி ஒரு செயலேற்பியின் மீது மட்டுமே செயற்பட்டு ஒரு புதிய மதிப்பை வழங்குகிறது. எனவே, இந்தச் செயற்குறிகள் ஒருமச் செயற்குறிகள் எனப்படும். மிகுப்பு செயற்குறி செயலேற்பியுடன் 1 என்ற மதிப்பை கூட்டுகிறது. குறைப்புச் செயற்குறி செயலேற்பியிலிருந்து 1 என்ற மதிப்பை குறைக்கிறது. 

எடுத்துக்காட்டாக 

x++ அல்லது ++ x என்பது x = x + 1 என்பதற்குச் சமம். x -ன் தற்போதைய மதிப்புடன் 1ஐ கூட்டுகிறது. 

x -- அல்லது -- x என்பது x = x-1 என்பதற்குச் சமம். x - ன் தற்போதைய மதிப்புடன் 1ஐ குறைக்கிறது.

இந்த மிகுப்பு (++) அல்லது குறைப்பு (--) செயற்குறிகள் மாறிகளுக்கு முன்னொட்டாகவோ அல்லது பின்னொட்டாகவோ இருத்தப்படுகிறது. முன்னொட்டு முறையில் செயலேற்பியை பயன்படுத்துவதற்கு முன்னதாகவே மிகுப்பு அல்லது குறைப்பு செயல்படுத்தப்படும்.


(2) ஒப்பீட்டுச் செயற்குறிகள் (Relational Operators)

ஒப்பீட்டுச் செயற்குறிகள் செயலேற்பிகளுக்கு இடையேயான உறவு முறையை கண்டுபிடிக்க பயன்படுகிறது. ஒப்பீட்டுச் செயற்குறிகள் இரண்டு செயலேற்பிகள் மீது செயல்படுத்தப்படும்போது, விடையானது பூலியன் மதிப்பாக இருக்கும். 1 அல்லது 0 என்பது முறையே சரி அல்லது தவறு என்பதைக் குறிக்கிறது. C++, ஆறு ஒப்பீட்டுச் செயற்குறிகளை வழங்குகிறது. அவைகள்,


மேலே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டில் செயலேற்பி a-செயலேற்பி b-யுடன் ஒப்பிடப்பட்டு ஒப்பீட்டின் அடிப்படையில் விடை 1 அல்லது 0 என வரும். அதாவது, 1 என்பது சரி, 0 என்பது தவறு. 

அனைத்து ஆறு ஒப்பீட்டு செயற்குறிகளும் செயற்குறி இருமச் செயற்குறிகள் ஆகும். 


(3) தருக்கச் செயற்குறிகள் (Logical Operators) 

தருக்கச் செயற்குறிகள், தருக்க மற்றும் ஒப்பீட்டு கோவைகளை மதிப்பிட பயன்படுகிறது. தருக்க செயற்குறிகள் செயலேற்பிகளாகிய தருக்க கோவைகளின் மீது செயல்படுகிறது. C++ மூன்று தருக்கச் செயற்குறிகளை வழங்குகிறது.


AND, OR இரண்டும் இரும செயற்குறிகள் NOT என்பது ஒரும செயற்குறி ஆகும்.

எடுத்துக்காட்டு: a = 5, b = 6, c = 7;



(4) மதிப்பிருத்து செயற்குறி (Assignment Operator): 

செயற்குறி = (சமம்) என்பது சாதாரண மதிப்பிருத்து செயற்குறி ஆகும். ஒரு மதிப்பிருந்து கூற்றின் வலப்பக்கம் இருக்கும் மதிப்பை இடப்பக்கம் உள்ள மாறியில் இருத்தும். இது பொதுவாக எல்லா கணிப்பொறி மொழிகளிளும் பயன்பாட்டில் உள்ளது. இது ஒரு இரும செயற்குறி ஆகும். 


C++ பல விதமான மதிப்பிருந்து செயற்குறிகளைப் பயன்படுத்துகிறது. அவைகள் குறுக்கு வழி மதிப்பிருத்து செயற்குறிகள் எனப்படும்.



(5) நிபந்தனைச் செயற்குறி (Conditional Operator):

C++இல் உள்ள ஒரே ஒரு நிபந்தனைச் செயற்குறி (?:) உள்ளது. இது ஒரு மும்ம செயற்குறி ஆகும். இந்த செயற்குறி if .... else கட்டுப்பாட்டு கூற்றுக்கு மாற்றாகப் பயன்படுகிறது. இதைப் பற்றி பின்வரும் if .... else கூற்றுயுடன் விரிவாகக் காண்போம். 


(6) பிற செயற்குறிகள் (Other Operators):



செயற்குறிகளின் முன்னுரிமை (Precedence of Operators): 

செயற்குறிகள் முன்னுரிமையின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகின்றன. செயலேற்பிகளும், செயற்குறிகளும் குறிப்பிட்ட தருக்க முறைப்படி குழுவாக்கப்பட்டு மதிப்பிடப்படுகின்றன. இத்தகைய குழு வாக்கம் தொடர்புறுத்தம் (Association) எனப்படுகிறது. 

முன்னுரிமை வரிசை (The order of precedence):


உங்களுக்குத் தெரியுமா?

C++ -ல் ஒன்றிரண்டு செயற்குறிகள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருள்படும்படி செயல்படுகிறது. 

உதாரணமாக (*) எனும் செயற்குறி பெருக்கல் மற்றும் சுட்டு மாறி செயற்குறியாகவும் பயன்படுத்தப்படுகிறது. 


5. நிறுத்தற்குறிகள் (Punctuators)


நிறுத்தற்குறிகள் என்பவை குறிப்பிட்ட பணியைச் செய்யும் குறியுருக்களாகும். C++ நிரலில் நிறுத்தற்குறிகள் வரம்புச்சுட்டி (Separator) அல்லது வரம்புக்குறியாகப் பயன்படுத்தப்படுகிறது. கீழ்வரும் நிறுத்தற்குறிகள் C++-ல் பயன்படுத்தப்படுவது போலவே C மற்றும் Java - நிரலாக்க மொழிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. 



11th Computer Science : Chapter 9 : Introduction to C++ : Lexical Units (Tokens) - C++ program in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம் : மொழித் தொகுதி (வில்லைகள்) - C++ நிரல் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம்