தமிழ்நாடு | புவியியல் - காலநிலை | 10th Social Science : Geography : Chapter 7 : Physical Geography of Tamil Nadu

   Posted On :  27.07.2022 07:29 am

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 6 : தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

காலநிலை

கடகரேகை இந்தியாவை இரு சமபாகங்களாகப் பிரிப்பதையும், தமிழ்நாடு கடகரேகைக்கு தெற்கேயும் பூமத்தியரேகைக்கு அருகாமையிலும் அமைந்துள்ளது என்பதையும் ஏற்கனவே கற்றுள்ளீர்கள். சூரியனின் செங்குத்து கதிர்களினால் வெப்ப நிலையானது ஆண்டு முழுவதும் அதிக அளவில் காணப்படுகிறது.

காலநிலை

கடகரேகை இந்தியாவை இரு சமபாகங்களாகப் பிரிப்பதையும், தமிழ்நாடு கடகரேகைக்கு தெற்கேயும் பூமத்தியரேகைக்கு அருகாமையிலும் அமைந்துள்ளது என்பதையும் ஏற்கனவே கற்றுள்ளீர்கள். சூரியனின் செங்குத்து கதிர்களினால் வெப்ப நிலையானது ஆண்டு முழுவதும் அதிக அளவில் காணப்படுகிறது. தமிழகம் வெப்பமண்டல காலநிலை மண்டலத்தில் அமைந்திருந்தாலும் கிழக்கு கடற்கரைப் பகுதி வெப்ப மண்டல கடல் காலநிலையைப் பெறுகிறது. இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக்கடல் இரண்டும் கடற்கரையோர காலநிலையில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன

கிழக்கு கடற்கரை பகுதியில் வெப்பமண்டலக் கடல் ஆதிக்க காலநிலையும் அதேவேளையில் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் மலைப்பாங்கான காலநிலையும் நிலவுகிறது. ஆனால் தமிழகத்தின் மத்திய பகுதிகள் குறைந்த உயரமும் கடலிலிருந்து விலகியும் இருப்பதால் அதிக வெப்பநிலை மற்றும் வறண்ட காலநிலை நிலவுகிறது. சூரியனின் செங்குத்துக் கதிர்களின் இடப்பெயர்வால் தமிழகத்தில் பல்வேறு பருவகாலங்கள் உருவாகின்றன. அவை:



குளிர் காலம்

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சூரியனின் செங்குத்துக்கதிர்கள் பூமத்திய ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையே விழுகிறது. இக்காலத்தில் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் சாய்வான சூரியக்கதிர்களைப் பெறுகின்றன. ஆதலால் இம்மாதங்களில் காலநிலை சற்று குளிராகக் காணப்படுகிறது. தமிழகத்தில் குளிர்கால வெப்பநிலையானது 15°C முதல் 25°C வரை மாறுபடுகிறது. இருந்தபோதிலும் மலைவாழிடங்களில் குளிர்கால வெப்பநிலையானது சில நேரங்களில் 5°C க்கும் குறைவாக உள்ளது. நீலகிரியில் சில பள்ளத்தாக்குகளில் வெப்பம் 0°C ஆகவும் பதிவாகிறது.

இக்குறைந்த வெப்பநிலை அடர் மூடுபனி மற்றும் மூடுபனி உருவாகக் காரணமாகிறது. இப்பருவத்தில் வறண்ட வானிலையே நிலவுகிறது

கோடைக்காலம்

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிகழ்வதால் சூரியனின் செங்குத்துக் கதிரானது தென்னிந்தியாவில் விழுகிறது. ஆகையால் பூமத்திய ரேகையிலிருந்து வெப்பநிலையானது படிப்படியாக அதிகரிக்கிறது. தமிழகம், கடகரேகைக்கு தென்பகுதியில் அமைந்திருப்பதால் அதிக வெப்பநிலையைப் பெறுகின்றது. பொதுவாக வெப்பநிலையானது 30°C லிருந்து 40°C வரை வேறுபடுகிறது. இப்பருவத்தில் குறிப்பாக மே மாதத்தில் தமிழகத்தின் தென்பகுதி முன் பருவமழை மூலமும், வெப்பச்சலனம் மூலமும் மழையைப் பெறுகிறது.

1. அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

2. தமிழகத்தை குறைந்த, மிதமான மற்றும் அதிக மழைபெறும் மாவட்டங்களாகப் பிரிக்கவும்.

தென்மேற்கு பருவக்காற்று காலம்

மார்ச் முதல் மே மாதம் வரை சூரியனின் செங்குத்து கதிர்களால் வட இந்திய நிலப்பரப்பு அதிக வெப்பத்தைப் பெறுகிறது. இதனால் வட இந்திய பகுதிகளில் குறைந்த அழுத்தம் உருவாகுகிறது.

இச்சமயத்தில் காற்றானது அதிக காற்றழுத்தம் உள்ள இந்தியப் பெருங்கடலிலிருந்து வடக்கு நோக்கி வீசுகிறது. இது தென்மேற்கு பருவக்காற்று உருவாக காரணமாகிறது.இப்பருவத்தில் அரபிக் கடலிலிருந்து வீசும் தென்மேற்கு பருவக்காற்றின் மழைமறைவுப் பிரதேசத்தில் தமிழ்நாடு அமைந்துள்ளதால் மிகக் குறைவான மழைப்பொழிவையேப் பெறுகிறது.

இப்பருவத்தின் மழைப் பதிவு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி குறைகிறது. கோயம்புத்தூர் பீடபூமி சராசரியாக 50 செ.மீ மழையைப் பெறுகிறது. எனினும் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்டங்கள் 50 முதல் 100 செ.மீ வரை மழையைப் பெறுகின்றன. மாநிலத்தின் கிழக்குப் பகுதிகள் மிகக் குறைவான மழைஅளவைப் பெறுகின்றன.

வடகிழக்கு பருவக்காற்று காலம்

வடகிழக்கு பருவக்காற்று அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்தின் முதல் பாதி வரை நீடிக்கிறது. மத்திய ஆசியா மற்றும் வட இந்திய பகுதிகளில் உருவாகும் அதிக அழுத்தம், வடகிழக்கு பருவக்காற்று உருவாக காரணமாகிறது. இப்பருவத்தில் சூரியன் கடகரேகையிலிருந்து மகர ரேகைக்குச் செல்வதால் வெப்பநிலை மற்றும் காற்றழுத்தத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் வட இந்தியாவிலிருந்து வங்கக் கடலை நோக்கி காற்று வீசுகிறது. இக்காற்று கொரியாலிஸ் விசை காரணமாக (பூமியின் சுழற்சியால் ஏற்படும் விசை) திசை விலக்கப்பட்டு வடகிழக்கு திசையிலிருந்து வீசுகிறது. ஆகையால் இக்காற்று வடகிழக்கு பருவக் காற்று என்று அழைக்கப்படுகிறது. வடகிழக்கு பருவக் காற்றானது திரும்பிவரும் தென் மேற்கு பருவக் காற்றின் ஒரு பகுதியாதலால் இக்காற்றைப் பின்னடையும் பருவக்காற்று' என்றும் அழைப்பர். இப்பருவம் தமிழ்நாட்டின் மழைக்காலமாகும். தமிழ்நாட்டின் வருடாந்திர மழையளவில் 48% இப்பருவத்தில் கிடைக்கிறது. இப்பருவத்தில் கடற்கரை மாவட்டங்கள் 60 சதவீதமும் உள்மாவட்டங்கள் 40 முதல் 50 சதவீதம் வரையிலான வருடாந்திர மழையையும் பெறுகின்றன.

பொதுவாக இப்பருவத்தில் வெப்ப மண்டல சூறாவளிகள் உருவாகின்றன. வங்கக் கடலில் உருவாகின்ற சூறாவளிகள் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மிக கனத்த மழையைத் தோற்றுவிக்கின்றன. தமிழ்நாட்டின் 50 சதவிகித மழை வெப்ப மண்டல சூறாவளி மூலம் கிடைக்கிறது இப்பருவத்தில் கிழக்கு கடற்கரைப் பகுதிகள் 100 முதல் 200 செ.மீ. வரை மழையைப் பெறுகின்றன. மத்திய மற்றும் வடமேற்கு தமிழகம் 50 முதல் 100 செ.மீ வரை மழையைப் பெறுகின்றன. இச்சூறாவளி காற்றுகள் சில நேரங்களில் பயிர்கள், உயிர் மற்றும் உடமைகளுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன.

உங்களுக்குத் தெரியுமா?

வால்பாறைக்கு அருகிலுள்ள சின்னக்கல்லார் தமிழ்நாட்டின் மிக அதிக மழை பெறும் பகுதியாகவும், இந்தியாவின் மூன்றாவது அதிக மழை பெறும் பகுதியாகவும் உள்ளது.



Tags : Geography தமிழ்நாடு | புவியியல்.
10th Social Science : Geography : Chapter 7 : Physical Geography of Tamil Nadu : Climate of Tamil Nadu Geography in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 6 : தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் : காலநிலை - தமிழ்நாடு | புவியியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 6 : தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்