தமிழ்நாடு - கிழக்கு தொடர்ச்சி மலை | 10th Social Science : Geography : Chapter 7 : Physical Geography of Tamil Nadu
கிழக்கு தொடர்ச்சி மலை
மேற்கு தொடர்ச்சி மலையைப் போலன்றி கிழக்கு தொடர்ச்சி மலையானது ஒரு தொடர்ச்சியற்ற குன்றுகளாகும். இம்மலையானது பல இடங்களில் வங்காள கடலில் கலக்கும் ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மலையின் உயரம் 1,100 மீட்டர் முதல் 1,600 மீட்டர் வரை மாறுபடுகிறது. இக்குன்றுகள் பீடபூமியை சமவெளியிலிருந்து பிரிக்கின்றன. ஜவ்வாது, சேர்வராயன், கல்வராயன், கொல்லி மலை மற்றும் பச்சை மலை ஆகியவை தமிழ்நாட்டிலுள்ள கிழக்கு தொடர்ச்சி மலையின் முக்கிய குன்றுகளாகும். இவைகள் மாநிலத்தின் வட மாவட்டங்களில் அமைந்துள்ளன
கிழக்கு தொடர்ச்சி மலையின் நீட்சியான இம்மலைகள் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் பரவியுள்ளன. இம்மலை இவ்விரண்டு மாவட்டங்களையும் பிரிக்கிறது. சுமார் 1,100 முதல் 1,150 மீட்டர் உயரம் கொண்ட பல்வேறு சிகரங்கள் இம்மலைத்தொடரில் அமைந்துள்ளன. இம்மலையின் மிக உயரமான சிகரம் மேல்பட்டு ஆகும். ஜவ்வாது மலையின் பல பகுதிகள் நீல நிற சாம்பல் கிரானைட் பாறைகளால் உருவானது. பல்வேறு பழ மரங்கள், மருத்துவ மூலிகைகள் மற்றும் சந்தன மரங்கள் போன்றவற்றிற்கு இப்பகுதி பெயர் பெற்றது. சட்ட விரோத மரம் வெட்டுதலால் தற்பொழுது இப்பகுதியின் சந்தன மரங்கள் அழிந்துவிட்டன.
"கல்வராயன்" என்ற சொல் தற்போதுள்ள பழங்குடியினரின் பண்டைய கால பெயரான ‘கரலர்’ என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள கிழக்கு தொடர்ச்சி மலைகளில் ஒரு முக்கிய மலை கல்வராயன் மலையாகும். இம்மலை ஜவ்வாது மற்றும் சேர்வராயன் மலைகளுடன் இணைந்து காவிரி மற்றும் பாலாறு ஆகியவற்றின் ஆற்று வடிநிலப் பகுதியைப் பிரிக்கிறது. இம்மலைத் தொடரின் உயரம் 600 மீ முதல் 1,220 மீ வரை காணப்படுகிறது.
1,200 முதல் 1,620 மீட்டர் வரையிலான உயரம் கொண்ட சேர்வராயன் மலைத் தொடர் சேலம் நகருக்கு அருகே அமைந்துள்ளது. இம்மலைத்தொடரின் பெயரானது உள்ளூர் தெய்வமான “சேர்வராயன்” என்ற பெயரில் இருந்து வந்ததாகும். இவற்றில் அமைந்துள்ள 1,620 மீட்டர் உயரம் கொண்ட 'சோலைக்கரடு' என்பது கிழக்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் அமைந்துள்ள உயரமான சிகரமாகும். 'ஏழைகளின் ஊட்டி' என்று அழைக்கப்படும் ஏற்காடு மலைவாழிடம் இம்மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்குள்ள சேர்வராயன் கோவில் இப்பகுதியின் உயரமான பகுதி ஆகும் (1,623 மீட்டர்).
கொல்லி மலை நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். இது சுமார் 2,800 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. 1,300 மீட்டர் வரை உயரம் கொண்ட இம்மலைத் தொடரானது, தென்னிந்தியாவின் கிழக்கு கடற்கரைக்கு இணையாகச் செல்கிறது. அரப்பளீஸ்வரர் கோவில் இந்த மலைத்தொடரில் அமைந்துள்ள முக்கியமான புனிதத் தலமாகும். கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் பிற பகுதிகளை ஒப்பிடுகையில் இங்கு பசுமைமாறா காடுகள் அல்லது சோலை காடுகள் அதிகம் காணப்படுகின்றன. பல காபி தோட்டங்கள், பழங்கள், பூக்கள் மற்றும் சவுக்குப் பண்ணைகள் இம்மலைப் பகுதியில் காணப்படுகின்றன.
திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் உயரம் குறைந்த குன்றுத் தொடராக இது காணப்படுகின்றது. தமிழ் மொழியில் ‘பச்சை’ என்பது பசுமையைக் குறிக்கிறது. இம்மலைகளில் காணப்படும் தாவரங்கள் மற்ற பகுதியை விட பசுமையாக காணப்படுவதால் இது பச்சைமலை என அழைக்கப்படுகிறது. இம்மலைகளில் பலாப்பழம் ஒரு குறிப்பிடத்தக்க வேளாண் பருவ விளைபொருளாக உள்ளது.
மலைகளின்
உயரம் கடல் மட்டத்திலிருந்து அளக்கப்படுவது ஏன்? ஏன்
நிலப்பகுதியில் இருந்து அளவிடப்படவில்லை?