தமிழ்நாடு | புவியியல் - வடிகாலமைப்பு | 10th Social Science : Geography : Chapter 7 : Physical Geography of Tamil Nadu
வடிகாலமைப்பு
ஆறுகள்
தமிழ்நாட்டின் உயிர்நாடிகளாகும். தமிழ்நாட்டில் பல ஆறுகள் காணப்பட்டாலும் காவிரி, பாலாறு, பெண்ணை, வைகை
மற்றும் தாமிரபரணி போன்ற ஆறுகள் குறிப்பிடத்தக்கவை ஆகும். தமிழ்நாட்டின்
பெரும்பாலான ஆறுகள் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கிழக்கு நோக்கி
பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. தாமிரபரணி ஆற்றைத் தவிர மற்ற ஆறுகள்
அனைத்தும் வற்றும் ஆறுகளாகும். தாமிரபரணி தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரு
பருவமழை காலங்களிலும் மழைபெறுவதால் வற்றாத ஆறாக உள்ளது.
காவிரி
ஆறு கர்நாடகா மாநிலத்தில் கூர்க் மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில்
பிரம்மகிரி குன்றுகளில் தலைக்காவிரி என்னும் இடத்தில் உற்பத்தியாகி 850 கிலோ
மீட்டர் நீளத்திற்கு பாய்கிறது. இதில் சுமார் 416 கிலோ
மீட்டர் நீளத்திற்கு தமிழ்நாட்டில் பாய்கிறது. இது கர்நாடகா மற்றும் தமிழ்நாடு
ஆகியவற்றிற்கு இடையே சுமார் 64 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லையாக உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் என்னும் இடத்தில் நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது.
ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்று அழைக்கப்படும் மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில்
இவ்வாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. மேட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து
சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் பவானி ஆறு இதன் துணையாறாக
வலது கரையில் காவிரியுடன் இணைகிறது. பின்னர் கிழக்கு நோக்கிப் பாய்ந்து தமிழ்நாட்டின் சமவெளிப் பகுதிக்குள்
நுழைகிறது. கரூரில் இருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள திருமுக்கூடல் என்னும்
இடத்தில் வலதுகரையில் மேலும் இரண்டு துணை ஆறுகளான அமராவதி மற்றும் நொய்யல் ஆறுகள்
இணைகின்றன. இப்பகுதியில் ஆற்றின் அகலம் அதிகமாக இருப்பதால், இது “அகன்ற
காவிரி” என
அழைக்கப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி
மாவட்டத்தில் இந்த ஆறு இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. வடகிளை கொலேருன் அல்லது
கொள்ளிடம் என்றும் தென்கிளை காவிரியாகவும் தொடர்கிறது. இவ்விடத்திலிருந்து காவிரி
டெல்டா சமவெளி தொடங்குகிறது. சுமார் 16கிலோமீட்டர் தொலைவிற்கு பாய்ந்த பின் மீண்டும்
இவ்விருகிளைகள் இணைந்து ‘ஸ்ரீரங்கம்
தீவை’ உருவாக்குகின்றன. ‘கிராண்ட்
அணைகட்’ என்றழைக்கப்படும் கல்லணை காவிரியாற்றின்
குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த ஆறு கல்லணையைக் கடந்த பின் பல கிளைகளாகப்
பிரிந்து டெல்டா பகுதி முழுவதற்கும் ஒரு வலைப்பின்னல் அமைப்பை உருவாக்கி உள்ளது.
காவிரி டெல்டா பகுதிகளில் கிளை ஆறுகளால் உண்டாகியுள்ள இவ்வலைப்பின்னல் அமைப்பு ‘தென்னிந்தியாவின்
தோட்டம்' என்று
அழைக்கப்படுகிறது. பின்னர் கடலூருக்கு தெற்கே வங்க கடலில் கலக்கிறது.
உங்களுக்குத்
தெரியுமா?
பாம்பன், முயல்
தீவு, குருசடை, நல்லதண்ணி
தீவு, புள்ளி வாசல், ஸ்ரீரங்கம், உப்புதண்ணித்
தீவு, தீவுத்திடல், காட்டுப்பள்ளித்
தீவு, குவிப்பில் தீவு மற்றும் விவேகானந்தர் நினைவுப்
பாறை ஆகியன தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தீவுகள் ஆகும்.
பாலாறு
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் தலகவரா கிராமத்திற்கு அப்பால் உற்பத்தி ஆகிறது.
இது சுமார் 17,871 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பாய்கிறது. இதில் 57% தமிழகத்திலும்
மீதிமுள்ள பகுதிகள் கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலும் உள்ளன.
பொன்னி, கவுண்டினியா
நதி,
மலட்டாறு, செய்யாறு
மற்றும் கிளியாறு ஆகியன பாலாற்றின் துணை ஆறுகளாகும். இவ்வாற்றின் மொத்த நீளம் 348 கிலோமீட்டர்
ஆகும். இதில் 222 கி.மீ. தொலைவு தமிழ்நாட்டில் பாய்கிறது. இது
வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாகப்பாய்ந்து, கூவத்தூருக்கு
அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
இது
கிழக்கு கர்நாடகாவின் நந்தி துர்கா மலைகளின் கிழக்கு சரிவுகளிலிருந்து உருவாகிறது.
இதன் வடிநிலப்பரப்பு சுமார் 16,019 சதுர கிலோ மீட்டர் ஆகும். இதில் 77% தமிழ்நாட்டில்
உள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர்
மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக தென்கிழக்கு திசையில் சுமார் 247 கிலோ
மீட்டர் நீளத்திற்கு இந்நதி பாய்கிறது. கெடிலம் மற்றும் பெண்ணையாறு என இரண்டு
கிளைகளாக திருக்கோவிலூர் அணைக்கட்டிற்கு அருகில் பிரிகிறது.
கெடிலம்
ஆறு கடலூருக்கு அருகிலும் பெண்ணையாறுபுதுச்சேரியூனியன் பிரதேசத்திற்கு அருகிலும்
வங்கக் கடலில் கலக்கின்றன. சின்னாறு, மார்க்கண்ட நதி, வாணியாறு
மற்றும் பாம்பன் ஆறு ஆகியன முக்கிய துணை ஆறுகளாகும். இந்த ஆறு உற்பத்தியாகும்
இடங்களில் கனமழை காரணமாக திடீர், குறுகியகால வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்துகிறது.
இது தமிழ்நாட்டின் முக்கிய நீர்ப்பாசன ஆதாரமாக உள்ளது. ஆற்றின் குறுக்கே
கிருஷ்ணகிரி மற்றும் சாத்தனூர் நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பெண்ணையாறு
இந்து சமய மக்களால் புனித நதியாகக் கருதப்படுகிறது. மேலும் தமிழ் மாதமான தை
மாதத்தில் இந்த ஆற்றுப் பகுதியில் (ஜனவரி, பிப்ரவரி)
பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
வைகையாறு
தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள வருச நாட்டு குன்றுகளின் கிழக்குச்
சரிவில் உற்பத்தியாகிறது. இதன் வடிநிலம் சுமார் 7,741ச.கி.மீ
பரப்பளவைக் கொண்டது.
இப்பரப்பளவு
முழுவதும் தமிழகத்தில் அமைந்துள்ளது. இது மதுரை, சிவகங்கை
மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் வழியாகப் பாய்கிறது. இதன் மொத்த நீளம்
சுமார் 258 கிலோ மீட்டராகும். இவ்வாற்றின் நீரானது
இராமநாதபுரத்தின் பெரிய ஏரி மற்றும் பல சிறிய ஏரிகளில் நிரப்பப்பட்டு பின்
ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீரானது இராமநாதபுரம் அருகில் உள்ள பாக்
நீர்ச்சந்தியில் கலக்கிறது.
தாமிரபரணி
எனும் பெயர் தாமிரம் (காப்பர்) மற்றும் வருணி (சிற்றோடைகள்) என்பதிலிருந்து
பெறப்பட்டது. இவ்வாறுகளில் கரைந்திருக்கும் செம்மண் துகள்கள் காரணமாக இந்நதியின்
நீரானது செந்நிறத் தோற்றத்துடன் காணப்படுகிறது.
தாமிரபரணி, அம்பாசமுத்திரம்
வட்டம் பாபநாசத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் பொதிகை மலை முகடுகளில்
தோன்றுகிறது.
இவ்வாற்றின்
தோற்றம் அகத்திய முனிவரோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. திருநெல்வேலி மற்றும்
தூத்துக்குடி மாவட்டங்களின் வழியே பாய்ந்து இறுதியில் வங்கக் கடலில் கலக்கிறது.
காரையாறு, சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா நதி, பச்சையாறு, சிற்றாறு
மற்றும் இராமந்தி ஆகியன இதன் முக்கிய துணை ஆறுகளாகும். இது தென்னிந்தியாவின் ஒரே
வற்றாத நதியாகும்.