Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | எலக்ட்ரானிய தகவல்தொடர்பு அமைப்பின் உறுப்புகள்
   Posted On :  03.12.2023 10:00 pm

12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள்

எலக்ட்ரானிய தகவல்தொடர்பு அமைப்பின் உறுப்புகள்

தகவல்தொடர்பில் எலக்ட்ரானியல் முக்கியப் பங்கு வகிக்கிறது.

எலக்ட்ரானிய தகவல்தொடர்பு அமைப்பின் உறுப்புகள்

தகவல்தொடர்பில் எலக்ட்ரானியல் முக்கியப் பங்கு வகிக்கிறது. எலக்ட்ரானிய தகவல்தொடர்பு என்பது ஒரு ஊடகத்தின் வழியே ஒலி , உரை, படங்கள் அல்லது தரவைப் பரப்புதலே ஆகும். நீண்ட தொலைவு பரப்புகையானது வெளியை ஊடகமாகப் பயன்படுத்துகிறது. இந்தப் பாடப்பகுதியானது எவ்வாறு குரல் சைகையானது ஒரு பரப்பியால் வெளியின் வழியே பரப்பப்பட்டு மற்றும் ஏற்கும் முனையில் ஏற்பியால் ஏற்கப்படுகிறது என்பதற்குத் தேவையான தகவல்களை வழங்குகிறது.

 

எலக்ட்ரானிய தகவல்தொடர்பு அமைப்பின் உறுப்புகள்


படம் 10.4இல் காட்டியுள்ள கட்டப்படம் மூலம், அடிப்படை தகவல்தொடர்பு அமைப்பின் உறுப்புகள் விளக்கப்பட்டுள்ளன.


1. தகவல் (அடிக்கற்றை அல்லது உள்ளீடு  - Information)

தகவலானது பேச்சு , இசை, படங்கள் அல்லது கணினித் தரவு போன்ற வடிவில் இருக்கலாம். இந்தத் தகவலானது உள்ளீடு ஆற்றல் மாற்றிக்கு உள்ளீடாக அளிக்கப்படுகிறது.


2. உள்ளீ டு ஆற்றல் மாற்றி (Input transducer)

ஆற்றல் மாற்றி என்பது இயற்பியல் அளவுகளின் (அழுத்தம், வெப்பநிலை, ஒலி) மாறுபாடுகளை அதற்குச் சமமான மின்சைகையாக மாற்றும் ஒரு சாதனம் மற்றும் அதன் மறுதலையாகும். தகவல்தொடர்பு அமைப்பில், ஆற்றல் மாற்றியானது ஒலி, இசை, படங்கள் அல்லது கணினித்தரவு வடிவில் உள்ள தகவலை அதற்குரிய மின்சைகைகளாக மாற்றுகிறது.

அசல் தகவலின் சமமான மின்சைகையானது அடிக்கற்றை சைகை எனப்படுகிறது. ஒலி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் ஒலிவாங்கி (microphone) ஆற்றல் மாற்றிக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.


3. பரப்பி (Transmitter)

பரப்பியானது ஆற்றல் மாற்றியில் இருந்து வரும் மின்சைகையை தகவல்தொடர்பு வழித்தடத்திற்கு (Communicationchannel) அளிக்கிறது. இது பெருக்கி, அலையியற்றி, பண்பேற்றி மற்றும் திறன் பெருக்கி போன்ற சுற்றுகளைக் கொண்டுள்ளது. பரப்பியானது ஒலிபரப்பு நிலையத்தில் அமைந்துள்ளது.

பெருக்கி : ஆற்றல் மாற்றியின் வெளியீடு மிகவும் வலிமை குறைவாக உள்ளதால், அது பெருக்கி யினால் பெருக்கப்படுகிறது.

அலையியற்றி : வெளியில் நீண்ட தொலைவு பரப்புகைக்காக, உயர் அதிர்வெண் ஊர்தி அலைகளை (சைன் வடிவ அலை) இது உருவாக்குகிறது. அலையின் ஆற்றல் அதன் அதிர்வெண்ணிற்கு நேர்த்தகவில் உள்ளதால், ஊர்தி அலை மிக அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது.

பண்பேற்றி: இது அடிக்கற்றை சைகையை ஊர்தி சைகையின் மீது மேற்பொருத்தி, பண்பேற்றப்பட்ட சைகையை உருவாக்குகிறது.

திறன் பெருக்கி : இது நீண்ட தொலைவுக்கு செல்லும் வகையில் மின் சைகையின் திறன் அளவை அதிகரிக்கிறது.


4. பரப்பும் விண்ண லைக்கம்பி (Transmitting antenna)

இதுரேடியோசைகையை வெளியில் அனைத்து திசைகளிலும் பரப்புகிறது. அது மின்காந்த அலைகள் வடிவில், ஒளியின் திசைவேகத்தில் (3 x 108 ms') செல்கிறது.


5. தகவல்தொடர்பு வழித்தடம் (Communication channel)

தகவல்தொடர்பு வழித்தடமானது பரப்பியில் இருந்து ஏற்பிக்கு குறைந்த இரைச்சல் அல்லது குலைவுடன் மின் சைகைகளை பரப்புவதற்கு உதவுகிறது. தகவல் தொடர்பு ஊடகமானது அடிப்படையில் இரு வகைப்படுகிறது. அவை கம்பிவழி தகவல்தொடர்பு மற்றும் கம்பியில்லா தகவல் தொடர்பு.

கம்பிவழி தகவல் தொடர்பு (இருமுனைத் தகவல் தொடர்பு) கம்பிகள், கம்பி வடங்கள் மற்றும் ஒளிஇழைகள் போன்ற ஊடகங்களைப் பயன்படுத்துகிறது. ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளதால், இந்த அமைப்புகள் நீண்ட தொலைவு பரப்புகைக்கு பயன்படுத்த இயலாது. தொலைபேசி, உள் இணைப்பு (Intercom) மற்றும் கேபிள் தொலைக்காட்சி ஆகியவை உதாரணங்களாகும்.

கம்பியில்லா தகவல் தொடர்பானது வெளியை தகவல்தொடர்பு ஊடகமாகப் பயன்படுத்துகிறது. பரப்பும் விண்ணலைக்கம்பியின் உதவியால் சைகைகள் மின்காந்த அலைகள் வடிவில் பரப்பப்படுகின்றன. எனவே கம்பியில்லா தகவல் தொடர்பு நீண்ட தொலைவு பரப்புகைக்கு பயன்படுகிறது. செல்லிடப்பேசி, வானொலி அல்லது தொலைக்காட்சி ஒலிபரப்பு மற்றும் செயற்கைக்கோள் தகவல்தொடர்பு ஆகியவை உதாரணங்களாகும்.


6. இரைச்சல் (Noise)

இது பரப்பப்பட்ட சைகையை இடைமறிக்கும் விரும்பத்தகாதமின்சைகையாகும். இரைச்சலானது பரப்பப்பட்ட சைகையின் தரத்தைக் குறைக்கிறது. இது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள் (தானியங்கிகள், பற்றவைப்பு இயந்திரங்கள், மின்மோட்டார்கள் ஆகியவை) அல்லது இயற்கை நிகழ்வாக (மின்னல், சூரியன் மற்றும் விண்மீன்களில் இருந்து வரும் கதிர்வீச்சு மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகள் ஆகியவை) இருக்கலாம். இரைச்சலை முற்றிலுமாக நீக்க இயலாது. எனினும் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி இதனைக் குறைக்கலாம்.


7. ஏற்பி (Receiver)

தகவல் தொடர்பு ஊடகத்தின் வழியாக பரப்பப்பட்ட சைகைகள் ஒரு ஏற்கும் விண்ணலைக்கம்பியால் ஏற்கப்பட்டு, மின்காந்த அலைகளை ரேடியோ அதிர்வெண் சைகைகளாக மாற்றி, ஏற்பிக்கு அளிக்கப்படுகிறது. ஏற்பியானது பண்பிறக்கி, பெருக்கி, பகுப்பான் ஆகிய எலக்ட்ரானியச் சுற்றுகளைக் கொண்டுள்ளது. பண்பிறக்கியானது பண்பேற்றப்பட்ட அலையிலிருந்து அடிக்கற்றை சைகையைப் பிரித்தெடுக்கிறது. பிறகு அடிக்கற்றை சைகை பகுக்கப்படுகிறது மற்றும் பெருக்கிகளைப் பயன்படுத்திப் பெருக்கப்படுகிறது. இறுதியாக இதற்கு வெளியீடு ஆற்றல் மாற்றிக்கு அளிக்கப்படுகிறது


8. மறுபரப்பிகள் (Repeaters)

மறுபரப்பிகள் சைகைகள் அனுப்பப்படும் நெடுக்கம் அல்லது தொலைவை அதிகரிக்கப் பயன்படுகின்றன. இது பரப்பி மற்றும் ஏற்பியின் தொகுப்பாகும். சைகைகள் ஏற்கப்பட்டு, பெருக்கப்பட்டு மற்றும் மாறுபட்ட அதிர்வெண் கொண்ட ஊர்தி சைகை மூலம் மறுபடியும் சேருமிடத்திற்கு அனுப்பப்படுகிறது. விண்வெளியில் உள்ள தகவல்தொடர்பு செயற்கைக்கோள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.


9. வெளியீடு ஆற்றல் மாற்றி (Output transducer)

இது மின் சைகையை மீண்டும் அதன் தொடக்க வடிவமான ஒலி , இசை, படங்கள் அல்லது தரவு ஆகியனவாக மாற்றுகிறது. ஒலிப்பான்கள், படக்குழாய்கள், கணினித் திரை ஆகியன வெளியீடு ஆற்றல் மாற்றிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.


10. வலுவிழப்பு (Attenuation)

ஒரு ஊடகத்தின் வழியே பரப்பப்படும் போது சைகையின் வலுவில் ஏற்படும் இழப்பு வலுவிழப்பு எனப்படும்.


11. நெடுக்கம் (Range)

இது பரப்பும் முனை மற்றும் போதுமான வலுவுடன் சைகை சேருமிடம் இடையே உள்ள பெரும் தொலைவு ஆகும்.
12th Physics : UNIT 10b : Communication Systems : Elements of an Electronic Communication System in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள் : எலக்ட்ரானிய தகவல்தொடர்பு அமைப்பின் உறுப்புகள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள்