தகவல்தொடர்பு அமைப்புகள் - ரேடார் மற்றும் அதன் பயன்பாடுகள் | 12th Physics : UNIT 10b : Communication Systems
ரேடார் மற்றும் அதன் பயன்பாடுகள்
ரேடார் (RADAR) என்பது RAdio Detection
And Ranging என்ற சொற்றொடரின் சுருக்கமாகும். இது தகவல்தொடர்பு அமைப்புகளின் பயன்பாடுகளில்
முக்கியமான ஒன்றாகும். இது வானூர்தி, கப்பல்கள், விண்கலன் ஆகிய தொலைதூரப் பொருட்களை
கண்டுணர்வதற்கு மற்றும் அவற்றின் இருப்பிடத்தை அறியவதற்குப் பயன்படுகிறது. நமது கண்ணிற்குப்
புலப்படாத பொருட்களின் கோணம், தொலைவு மற்றும் திசைவேகம் ஆகியவற்றை ரேடார் மூலம் கண்டறியலாம்.
ரேடார் ஆனது தகவல்தொடர்புக்கு மின்காந்த அலைகளைப்
பயன்படுத்துகிறது. முதலில் மின்காந்த சைகையானது விண்ணலைக்கம்பி மூலம் வெளியின் அனைத்து
திசைகளிலும் பரப்பப்படுகிறது. குறிப்பிட்ட இலக்குப் பொருளின் மீது மோதும் சைகையானது
எதிரொளிக்கப்பட்டு, எல்லா திசைகளிலும் மீண்டும் பரப்பப்படுகிறது. இந்த எதிரொளிக்கப்பட்ட
சைகை (எதிரொளி), ரேடார் விண்ண லைக்கம்பியால் பெறப்பட்டு ஏற்பிக்கு அளிக்கப்படுகிறது.
பிறகு அது செயல்முறைப்படுத்தப்பட்டு, பெருக்கப்பட்டு
பொருளின் புவிசார் புள்ளிவிவரங்கள் கண்டறியப்படுகின்றன. சைகையானது ரேடாரில் இருந்து
இலக்குப்பொருளுக்குச் சென்று, மீண்டும் திரும்பி வருவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தில்
இருந்து இலக்குகளின் நெடுக்கம் கண்டறியப்படுகிறது.
பயன்பாடுகள்
ரேடார்கள் அனேக துறைகளில் பயன்பாடுகளைக் கொண்டவை.
அவற்றில் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
i) இராணுவத்தில், இலக்குகளை இடம் காணவும்,
கண்டறியவும் பயன்படுகின்றன.
ii) கப்பல் மூலம் பரப்பில் தேடுதல், வான் தேடுதல் மற்றும் ஏவுகணை வழிநடத்தும் அமைப்பு போன்ற வழிகாட்டும் அமைப்புகளில் பயன்படுகிறது.
iii) மழைப்பொழிவு வீதம் மற்றும் காற்றின் வேகம் ஆகியவற்றை அளவிட்டு, வானிலை கண்காணிப்பில் பயன்படுகின்றது. அவசரகால சூழ்நிலைகளில், மக்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்து, அவர்களை மீட்கும் பணியில் உதவுகிறது.