Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | அளிப்பின் நெகிழ்ச்சியை தீர்மானிக்கும் காரணிகள்

பொருளாதாரம் - அளிப்பின் நெகிழ்ச்சியை தீர்மானிக்கும் காரணிகள் | 11th Economics : Chapter 3 : Production Analysis

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 3 : உற்பத்தி பகுப்பாய்வு

அளிப்பின் நெகிழ்ச்சியை தீர்மானிக்கும் காரணிகள்

நிலைத்து நீடிக்க கூடிய பொருட்களை நீண்டகாலம் வரை பாதுகாக்கலாம். உற்பத்தியாளர் அப்பொருளுக்கு அதிக விலை கிடைக்கும் வரை காத்திருக்க முடியும்.

அளிப்பின் நெகிழ்ச்சியை தீர்மானிக்கும் காரணிகள் 

1. பொருட்களின் தன்மை

நிலைத்து நீடிக்க கூடிய பொருட்களை நீண்டகாலம் வரை பாதுகாக்கலாம். உற்பத்தியாளர் அப்பொருளுக்கு அதிக விலை கிடைக்கும் வரை காத்திருக்க முடியும். எனவே, நிலைத்து நீடிக்க கூடிய பொருட்களின் அளிப்பு நெகிழ்ச்சி அதிகம் விலை கூடியதும் அதிக அளவு பொருட்கள் சந்தைக்கு வரும். ஆனால் அழுகும் பொருட்கள் உடனே விற்றுத் தீரக்கூடியவை.

அழுகும் பொருட்களின் அளிப்பின் நெகிழ்ச்சி குறைவு. விலை கூடினாலும் அதிக அளவுப் பொருட்களைச் சந்தைக்கும், கொண்டு வர இயலாது. 

2. உற்பத்திச் செலவு

ஒரு நிறுவனம் வளர்ந்து செல் விளைவு அல்லது மாறா விளைவு நிலையில் செயல்பட்டால், எளிதில் அளிப்பின் அளவை அதிகரிக்க இயலும். அதனால் அளிப்பின் நெகிழ்ச்சி அதிகம். ஒருநிறுவனம் குறைந்து செல் விளைவு நிலையில் செயல்பட்டால் உற்பத்தி அதிகமாகும்போது உற்பத்தி செலவு வேகமாக அதிகரிக்கும். எனவே, அளிப்பை அதிகரிப்பது கடினம். ஆகையால் அங்கு அளிப்பின் நெகிழ்ச்சி குறைவாக இருக்கும். 

3. தொழில்நுட்பநிலை

பேரளவு உற்பத்தியில் அதிக மூலதனத்தை முதலீடு செய்யும்போது அளிப்பை அதிகரிப்பது சுலபமல்ல. எனவே அளிப்பின் நெகிழ்ச்சி குறைவு. மூலதன கருவிகளை குறைவாக பயன்படுத்தும்போதோ அல்லது எளிமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போதோ, அளிப்பு அதிக நெகிழ்ச்சியுடையதாக இருக்க வாய்ப்பு உள்ளது.

4. கால அளவு

மிகக் குறுகிய காலத்தில் பல நிறுவனங்களுக்கு அளிப்பின் அளவை அதிகரிக்க இயலாது. எனவே அளிப்பின் நெகிழ்ச்சி மிகக்குறைவு. நீண்ட காலத்தில் எல்லா உள்ளீடுகளின் (மாறும் மற்றும் மாறா) அளவுகளையும் எளிதாக மாற்றலாம். எனவே, அளிப்பின் அளவும் மாறும். ஆகவே, அளிப்பு அதிக நெகிழ்வு தன்மை உடையது.


தொகுப்புரை

நுகர்வோரின் தேவையை நிறைவு செய்தவற்கு உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இன்று நுகர்வு பல்வேறு வழிகளில் விரிவடைந்துள்ளது. உற்பத்தியும் அதன் தரத்திலும் அளவிலும் விரிவடைந்து கொண்டுள்ளது. உற்பத்தியின் அளவு உற்பத்திக் காரணிகளின் விலையைத் தீர்மானிக்கிறது. உற்பத்திக் காரணிகளுக்கு உற்பத்தியின் மூலம் கிடைக்கும் வருவாய் பகிர்ந்தளிக்கப்படுகிறது.


சொற்களஞ்சியம்

உற்பத்தி உள்ளீட்டை வெளீயிடாக மாற்றும் நடவடிக்கை

உற்பத்திக் காரணிகள்  உற்பத்திக் காரணிகள் நான்கு: நிலம், உழைப்பு, மூலதனம் மற்றும் தொழிலமைப்பு இவை உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.

நிலம்  இயற்கையின் கொடை

உழைப்பு உற்பத்திக்கான மனிதனின் உடல் சார்ந்த அல்லது அறிவு சார்ந்த முயற்சி

மூலதனம்  மனிதனால் உருவாக்கப்பட்ட உற்பத்திக் காரணி

தொழில் அமைப்பு இடர்ப்பாடுகளை ஏற்று முடிவெடுக்கும் அமைப்பு.

உற்பத்தி சார்பு உள்ளீடு மற்றும் வெளியீடுகளுக்கிடையே உள்ள தொழில்நுட்ப தொடர்பு

அளிப்பு ஒரு விற்பனையாளர் வெவ்வேறு விலையில் எவ்வளவு பொருட்களைச் சந்தைக்குக் கொணருகிறார் என்பது.

அளிப்பு நெகிழ்ச்சி ஒரு பொருளின் விலையில் ஏற்படும் மாற்றத்தினால் அப்பொருளின் அளிப்பில் ஏற்படும் மாற்றத்தின் அளவைக் கூறும் ஒரு கருத்துரு. 

சம உற்பத்திக் கோடு  இரு காரணிகளின் பல்வேறு இணைப்புக் கலவைகளை பயன்படுத்தி பெறுகிற ஒரே அளவு உற்பத்தியைக் காட்டும் கோடு.

சம உற்பத்தி செலவுக் கோடு ஒரு நிறுவனம் குறிப்பிட்ட அளவு பணச்செலவில் வாங்கக்கூடிய இரு காரணிகளின் பல்வகை இணைப்புகளைக் காட்டும் கோடு.

குறுகிய கால உற்பத்தி சார்பு  ஒன்றைத் தவிர மற்ற உற்பத்திக் காரணிகள் மாறாமல் இருக்கும் போது உள்ளீட்டிற்கும் வெளியீட்டிற்கும் உள்ள தொடர்பு.

நீண்ட கால உற்பத்தி சார்பு அனைத்து உற்பத்திக் காரணிகளையும் மாற்றியமைத்துக் கொள்ளும் போது உள்ளீடு மற்றும் வெளியீட்டிற்கு இடையே உள்ள தொடர்பு.

பொருளாதார சிக்கனங்கள் உற்பத்தியில் உயர்வு ஏற்படும்பொழுது சராசரி உற்பத்திச் செலவு குறைவது.


Tags : Economics பொருளாதாரம்.
11th Economics : Chapter 3 : Production Analysis : Factors governing elasticity of supply Economics in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது பொருளாதாரம் : அத்தியாயம் 3 : உற்பத்தி பகுப்பாய்வு : அளிப்பின் நெகிழ்ச்சியை தீர்மானிக்கும் காரணிகள் - பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது பொருளாதாரம் : அத்தியாயம் 3 : உற்பத்தி பகுப்பாய்வு