வங்கியியல் - வணிக வங்கியின் பணிகள் | 12th Economics : Chapter 6 : Banking
வணிக வங்கியின் பணிகள் (Functions of Commerical Banks)
வணிக வங்கிகள் இலாப நோக்கம் உடையவை. அதனால் அவைகள் வைப்புக்களைப் பெற்று முதலீட்டுக்கான கடன்களை அளிக்கின்றன. வணிக வங்கிகளின் பணிகளை முதன்மை பணிகள் மற்றும் இரண்டாம் நிலை பணிகள் என இருபெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தின் மூலம் அவைகளை நாம் அறியலாம்.
(அ) முதன்மைப் பணிகள் (Primary Functions)
1. வைப்புகளை ஏற்றுக்கொள்ளுதல் (Accepting Deposits)
பொதுமக்களால் செலுத்தப்படும் வைப்புக்களை (deposits) ஏற்றுக்கொள்ளுதல் ஆகும். இது வங்கி வணிகத்திற்கான முக்கிய நிதியாதாரம் ஆகும். பொது வைப்புக்களை இரு வகைகளாக பிரிக்கலாம் முறையே கேட்பு வைப்புகள் மற்றும் கால வைப்புகள் ஆகும்.
i. கேட்பு வைப்புகள் (Demand Deposits) இவை வங்கிகளில் வைப்புக்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர் முன்னறிவிப்பின்றி எப்பொழுது வேண்டுமானலும் பணத்தை தனது கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படும் ஒரு வைப்பாகும். பணம் பெறும் படிவம் , காசோலை, அல்லது தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் மூலம் எப்பொழுது அவருக்குத் தேவைப்படுகிறதோ அப்பொழுது பணத்தை தனது வைப்பிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். இவ்வகை வைப்புக்கள் மேலும் இருவகையாக பிரிக்கப்படுகின்றன. இவ்வகை வைப்புக்கள் சேமிப்புக் வங்கிக் கணக்கு (Savings Bank Account) மற்றும் நடப்புக் கணக்கு (Current Account) என இருவகைகளாக வங்கிகளில் நடைமுறையில் உள்ளது.
(ii) கால வைப்புக்கள் (Time Deposits) இவை ஒரு குறிப்பிட்ட காலவரையறை வரை வங்கிகளிடமிருந்து மீளப் பெறப்படாமல் இருக்கும் வைப்புகளாகும். வங்கிகள் கால வைப்புக்களுக்கு கூடுதலான வட்டியை வழங்குகின்றன. இவ்வகை வைப்புக்களை வங்கிகளிடமிருந்து மீளப்பெற குறிப்பிட்ட கால இடைவெளியும், எழுத்துபூர்வமான முன்னறிவிப்பும் தேவைப்படுகிறது. நிலை வைப்பு (Fixed Deposit) மற்றும் தொடர்வைப்பு (Recurring Deposit) ஆகியன கால வைப்பு வகைகளில் முக்கிய வகைகளாகும்.
2. கடன் வழங்கல் (Lending Loans)
தனி நபர்கள் மற்றும் வாணிபத்திற்கான கடன்களை வங்கிகள் வழங்குகின்றன. வணிக வங்கிகள் ரொக்கக் கடன், மாற்றுச் சீட்டு தள்ளுபடி, மிகைப்பற்று ஆகிய முறைகளில் கடன்களை வழங்குகின்றன.
(ஆ) இரண்டாம் நிலை பணிகள் (Secondary Functions)
இரண்டாம் நிலை பணிகளை முகமைப் பணிகள், பொதுப் பயன்பாட்டுப்பணிகள், இதரப் பணிகள் என மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன.
1. முகமைப்பணிகள் (Agency Function)
வங்கி வாடிக்கையாளர்களுக்கு முகவராக (Agent) இருந்து செய்யும் பணிகளை முகமைப்பணிகள் எனப்படுகிறது.
(i) காசோலைகளை பணமாக்குதல் : தன் வாடிக்கையாளர்களுக்காக அவர்களுக்கு வரும் காசோலைகள், மாற்றுச் சீட்டுக்கள் போன்றவற்றை வங்கிகள் தீர்வகத்தின் மூலம் வசூல் செய்து கொடுக்கின்றன.
(ii) வருமானத்தை பெறுதல்: வணிக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வரவேண்டிய இலாப ஈவு, ஓய்வூதியம், சம்பளம், வாடகை, வட்டி ஆகியவற்றினை வசூலித்து தருகின்றன. வாடிக்கையாளருக்கான வருமானம் வசூலிக்கப்பட்டதை பற்றுச்சீட்டின் மூலம் வங்கிகள் தெரியப்படுத்துகிறது.
(iii) செலவுகளை செலுத்துகிறது: வணிக வங்கிகள் வாடிக்கையாளர்களின் பல்வேறு செலுத்துக் கடமைகளை செய்கின்றது. தொலைபேசி கட்டணம், காப்பீட்டு பிரிமியம், கல்விக் கட்டணம், வாடகை செலுத்துதல் போன்றவற்றை வாடிக்கையாளர்களுக்காக செய்கிறது. இச்செலவுகளைச் செய்யும் பொது செலவுச் சீட்டின் மூலம் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துகின்றது.
2. பொதுப் பயன்பாட்டு பணிகள் (General Utility Functions)
இது வங்கிகள் தன் வாடிக்கையாளர் - களுக்காக சில கூடுதல் பயன்பாடுகளை உருவாக்கும் நோக்கில் செய்யும் பணிகளைப் பொதுப் பயன்பாட்டு பணிகள் என்கிறோம். அவைகள் :
(i) பாதுகாப்பு பெட்டக வசதி: நகைகள், பங்குகள், கடன் பத்திரங்கள் போன்ற மதிப்புமிக்க பொருட்களை பாதுகாக்க, பெட்டக வசதியை வணிக வங்கிகள் தருகின்றன. திருட்டு, இழப்புக்களையும் தவிர்க்க இவ்வசதி உதவுகிறது. பெட்டகத்தில் உள்ள பொருட்களுக்கு வங்கி பொறுப்பல்ல.
(ii) பயணக் காசோலைகளை வழங்குதல் : பயணக் காசோலைகளை வழங்குவதன் மூலம் வெளிநாட்டு பயணத்தின்போது பணப்பாதுகாப்பினை வழங்குகிறது.
(iii) அந்நியச் செலாவணியைக் கையாளுதல் :ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபடும் வணிகர்களுக்கு வணிக வங்கிகள் அந்நிய செலாவணி வசதியைச் செய்து தருகிறது. ஆனால், இதற்காக நாட்டின் மைய வங்கியிடம் வணிகவங்கிகள் உரிய அனுமதியினை பெற்றிருக்க வேண்டும்.
3. நிதிமாற்றுதல்:
ஒரு வங்கியிலிருந்து மற்ற வங்கிக்கு நிதியை மாற்றுவதாகும். வரைவு காசோலைகள், தொலைபேசி மற்றும் மின்னணு பரிமாற்றங்கள் மூலம் நிதி மாற்றப்படுகிறது.
4. கடன் உறுதியளிப்பு கடிதம் (Letter of Credit):
வாடிக்கையாளரின் கடன் நம்பகத் தன்மையை சான்றளிக்கும் விதமாக வணிக வங்கிகள் கடன் உறுதியளிப்பு கடிதங்களை வழங்குகின்றன.
(i). பத்திரங்களுக்கு எழுத்துறுதி வழங்குதல் (Under-writing of Securities): வணிக வங்கிகள் மேலும் பத்திரங்களுக்கான எழுத்துறுதி வழங்கும் பணியினை செய்கிறது. பொதுமக்கள் வங்கிகளின் மீது முழு நம்பிக்கையை வைத்திருப்பதால் அவைகள் எழுத்துறுதி வழங்கிய பத்திரங்களை வாங்குவதில் தயக்கம் ஏதும் இருக்காது.
(ii). மின்னணு வங்கி: வணிக வங்கிகள் மின்னணு முறையை பின்பற்றுவதால் அவைகள் பற்று அட்டை, கடன் அட்டை மற்றும் இணைய வங்கி மூலம் விரைவான பணப்பரிவர்த்தணைகள் மேற்கொள்ள உதவுகின்றன.
இ) இதர பணிகள் (Other Functions)
(i) பண அளிப்பு
வணிக வங்கியின் முக்கிய பணிகளில் ஒன்று பணப்புழக்க வேகத்தை அதிகரிப்பதன் மூலம் பண அளிப்பை அதிகரித்தல் ஆகும். உதாரணமாக வங்கி ஒருவருக்கு ₹ 5 இலட்சம் கடன் வழங்கும் போது கடன் பெறுபவர் பெயரில் உள்ள கேட்பு வைப்பு கணக்கில் வரவு வைக்கப்படுகின்றது. இங்கு பணம் ரொக்கமாகச் செலுத்தப்படவில்லை என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே அதிகமாக பணம் அச்சடிக்கப்படாமல் பண அளிப்பு அதிகரிக்கின்றது.
(ii) கடன் உருவாக்கம்
கடன் உருவாக்கம் வணிக வங்கிகளின் பணிகளில் மிகச் சிறந்த ஒன்றாகும். இது மேற்சொன்ன பண அளிப்பினை அதிகரிக்கும் பணியை ஒட்டி அமைந்ததாகும். கடன் உருவாக்கம் என்பது கடன்களையும், முன்பண அளிப்பினையும் அதிகரிக்கும் ஒரு செயல். மொத்த பண அளிப்பில் கடன் பணத்தின் அளவினை அதிகரிப்பது கடன் உருவாக்கம் ஆகும்.
(iii) புள்ளிவிவரங்களை திரட்டுதல்
இந்திய ரிசர்வ் வங்கியை போன்றே, வணிக வங்கிகளும் வணிகம், தொழில், விவசாயம், நிதி போன்ற அடிப்படை துறைகளின் புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. இவைகளின் அடிப்படையில் தனது வாடிக்கயாளர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தங்களது ஆலோசனைகளை வணிக வங்கிகள் வழங்குகிறது.