வங்கியியல் - ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வணிக வங்கிக்களின் பங்கு | 12th Economics : Chapter 6 : Banking
பொருளாதார வளர்ச்சியில் வணிக வங்கிக்களின் பங்கு
1. மூலதன திரட்சி
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாததான மூலதன திரட்சியில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வணிக வங்கியானது தனது வங்கிப் பிரிவுகளின் (branches) கீழ் பரவலாக செயல்பட்டு பொதுமக்களின் சேமிப்பினை வைப்புகளாக திரட்டி அவைகளை உற்பத்தி நோக்கத்திற்காக கடன்களாக வழங்குகின்றன. இன்றைய நாட்களில் வங்கிகளின் சேமிப்புகளை திரட்டுவதில் பல கவர்ச்சிகரமான திட்டங்களை மக்களிடம் அறிமுகப்படுத்தி, அவர்களிடமுள்ள சேமிப்புகளை முறைப்படுத்தப்பட்ட பணச்சந்தைக்கு கொண்டுவருகின்றன. இவ்வாறு கொண்டுவரப்படவில்லையெனில், அப்பணம் பொதுமக்களிடமே பயன்படுத்தப்படாமல் இருந்தாலோ, அல்லது தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்யப்பட்டிருந்தாலோ அவைகள் உற்பத்திக்கு பயன்பட்டிருக்காது.
2. கடன் உருவாக்கம்
வங்களின் கடன் உருவாக்கம் மூலம் முன்னேற்றத் திட்டங்களுக்கு அதிக நிதியை பெற்றுத் தருகிறது. இதன் மூலம் உற்பத்தி, வேலைவாய்ப்பு, வருமானம், விற்பனை ஆகியவை ஏற்றம் பெற்று விரைவான பொருளாதார வளர்ச்சியை கொண்டு வருகின்றது.
3. அதிக உற்பத்தித்திறனை கொண்ட முதலீட்டை நோக்கி பணத்தை முறைப்படுத்துதல்
வங்கிகள் உற்பத்தி நோக்கில் பணத்தினை முதலீடு செய்கிறது. வெறுமனே வங்கிகள் மூலதன ஆக்கத்தை மட்டும் செய்யவில்லை. ஒரு துறையில் செய்யப்பட்ட முதலீட்டின் உற்பத்தித் திறன் குறைவாக இருந்தால் அத்துறைக்கு வழங்கப்படும் முதலீட்டுக் கடனை குறைத்துக்கொண்டு, அதிக உற்பத்தி திறன் கொண்ட துறைகளுக்கு கூடுதலாக முதலீட்டுக்கான கடனை மடைமாற்றம் செய்கிறது. இதனால் பொருளாதாரத்தில் முதலீட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி திறன் கூடுகிறது. இவ்வகையில் வணிகவங்கிகள் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவுகின்றன.
4. சரியான தொழிற்சாலைகளை ஊக்குவித்தல்
வங்கிகள் சரியான தொழிலையும், சரியான நபர்களையும் தெரிந்தெடுத்து கடன் வழங்குவதால் தொழிற்பெருக்கம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளதார வளர்ச்சியில் உதவுகின்றன. எந்த பொருளுக்கு அதிக தேவை உள்ளதோ அந்த பொருளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு கடன்களையும், முன்பணங்களையும் வழங்குகிறது. ஆகவே, உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தி முறைகளில் நவீனத்துவத்தைப் புகுத்தி நாட்டின் தேசிய வருவாய் உயர்வதற்கு வழி செய்கின்றனர். சில சமயங்களில் முக்கியத்துவம் குறைந்த துறைகளுக்கும் கடன் வழங்குகிறது. இதனால் அமெரிக்காவில் 2007 - 08ம் ஆண்டுகளில் ஏற்பட்டது போன்ற பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படும்
5. கடனை பணமாக்குதல்
வணிகத்தில் எழும் குறிப்பிட்ட காலக் கடன்களை இடையிலேயே ரொக்கமாக்கித் தருவதன் மூலம் உற்பத்தி மற்றும் வணிக நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்படாமல் வணிக வங்கிகள் பாதுகாக்கிறது. வணிகத்தை அதிகப்படுத்த கடன் அடிப்படையில் விற்பனை மேற்கொள்வதைத் தவிர்க்க முடியாது. ஆனால் கடன் விற்பனை முதலீட்டை முடக்கிடும் செயலைச் செய்கின்றது. இதனால் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. கடன் விற்பனையில் கடனுக்கான உத்தரவாதமாக மாற்றுச்சீட்டுக்களை (Bills of Exchange) வங்கிகள் கழிவு செய்வதால், வர்த்தக நிறுவனங்கள் எந்த இடையூறுமின்றி பொருளாதார நடவடிக்கைகளைத் தொடர முடிகின்றது.
6. அரசிற்கு நிதி வழங்குதல்
குறைவளர்ச்சி நாடுகளில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் பணியினை அரசு மேற்கொள்கிறது. இதற்கு அதிக அளவு நிதி அரசிற்குத் தேவைப்படுகிறது. வணிக வங்கிகள் அரசிற்கு நீண்டகால கடன்களை மற்றும் குறுகியகால கடன்களை அரசு பத்திரங்களை ஏற்பதன் வாயிலாக வழங்குகிறது. இந்திய ரிசர்வ் வங்கி 2018 - 19 ஆண்டில் தனது உபரி நிதியிலிருந்து மத்திய அரசுக்கு ₹68,000 கோடி வழங்கியுள்ளது.
7. வேலைவாய்ப்பினை உருவாக்குதல்
வங்கிகள் தேசியமயமாக்கலுக்குப் பின் வங்கித்துறை பெருமளவுக்கு வளர்ந்துள்ளது. நிறைய எண்ணிக்கையில் கிளைகள் திறக்கப்பட்டு கடன் பெருக்கத்தினைச் செய்வதால் வேலைவாய்ப்புகள் உருவாகிறது.
8. வங்கிகள் தொழில்முனைவினை ஊக்கப்படுத்துதல்
இந்திய போன்ற வளரும் நாடுகளில் அண்மைக் காலமாக வணிக வங்கிகள் தொழில் முனைவினை ஊக்கப்படுத்தி வருகிறது. தொழில் முனைவு உருவாக்குவது மிகவும் சிக்கலான ஒரு நடைமுறை ஆகும். திட்ட எண்ணங்கள் உருவாவது, கண்டறிந்த திட்டங்களில் உள்ளூர்ச் சூழ்நிலையுடன் ஒத்துப்போகும் சரியான திட்டத்தினை தேர்ந்தெடுப்பது, நன்கு தயாரிக்கப்பட்ட திட்டத்தினை மேற்கொள்ள தொழில்முனைவோரை ஊக்கப்படுத்துவது, மற்றும் தொழில்நுட்ப, மேலாண்மை தொடர்பான ஆலோசனைகளை வழங்குவது என்பன தொழில் முனைவு மேம்பாட்டு நிலைகளாகும்.
தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானதாகவும் மற்றும் பொருளாதார ரீதியாக பயனளிக்கத்தக்க மிகச்சிறந்த திட்டங்களுக்கு வங்கிகள் 100 சதவிகித கடன்களை அளிக்கின்றன. ஆகவே, வணிக வங்கிகள் தொழில் முனைவுக்கும் நாட்டின் மேம்பாட்டிற்கும் தங்களின் சீரிய பணியினை செய்து வருகின்றன.