Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | குறுக்கீட்டு விளைவு: ஓரியல் மூலங்கள்
   Posted On :  24.11.2022 12:08 am

12 வது இயற்பியல் :அலகு 7 : அலை ஒளியியல்

குறுக்கீட்டு விளைவு: ஓரியல் மூலங்கள்

இரண்டு அலை மூலங்கள் ஓரியல் மூலங்களாக இருக்கவேண்டுமெனில், அவை இரண்டும் ஒரே கட்ட வேறுபாட்டைக் கொண்ட அல்லது கட்டவேறுபாடு அற்ற அலைகளை உருவாக்கவேண்டும். மேலும் அவ்விரண்டு அலைமூலங்களும் ஒரே அதிர்வெண் அல்லது அலைநீளம் (ஒற்றை நிறம்) கொண்ட அலைகளை உருவாக்க வேண்டும்.

ஓரியல் மூலங்கள் (Coherent sources)

இரண்டு அலை மூலங்கள் ஓரியல் மூலங்களாக இருக்கவேண்டுமெனில், அவை இரண்டும் ஒரே கட்ட வேறுபாட்டைக் கொண்ட அல்லது கட்டவேறுபாடு அற்ற அலைகளை உருவாக்கவேண்டும். மேலும் அவ்விரண்டு அலைமூலங்களும் ஒரே அதிர்வெண் அல்லது அலைநீளம் (ஒற்றை நிறம்) கொண்ட அலைகளை உருவாக்க வேண்டும். அவ்வலைகள் ஒரே வீச்சுகொண்ட அலைவடிவம் கொண்டதாய் இருப்பதும் விரும்பத்தக்கது.

ஓரியல் தன்மை அலைகளின் பண்பாகும். இப்பண்பு நிலையான குறுக்கீட்டு அமைப்பைப் பெறுவதற்கு அடிப்படையாகும்.

இரண்டு தனித்தனி ஒற்றை நிற ஒளிமூலங்கள் ஓரியல் மூலங்கள் ஆகாது. ஏனெனில், அவை ஒரே அதிர்வெண் மற்றும் ஒரே வீச்சு கொண்ட அலைகளை உருவாக்கலாம் ஆனால், அவ்வொளிமூலங்களினால் ஒரே கட்டத்தில் உள்ள அலைகளை உருவாக்க முடியாது. இதற்கான காரணம் என்னவென்றால், அணுக்கள் ஒளியை உமிழும்போது ஏற்படும் வெப்ப அதிர்வின் காரணமாகக் கட்டமாற்றம் ஏற்படுகின்றது. எனவே, தனித்தனி ஒளி மூலங்கள் எப்போதும் ஓரியல் மூலங்களாகச் செயல்பட முடியாது.

ஓரியல் ஒளி அலைகளைப் பின்வரும் மூன்று வழிமுறைகளில் பெறலாம். அவை,

(i) ஒளிச்செறிவு அல்லது வீச்சுப்பிரிப்பு

(ii) அலைமுகப்புப் பிரிப்பு

(iii) ஒளிமூலம் மற்றும் பிம்பங்கள்.


(i) ஒளிச்செறிவு அல்லது வீச்சுப் பிரிப்பு: பகுதி வெள்ளிபூசப்பட்ட கண்ணாடி (கற்றைப் பிரிப்பான்) வழியே ஒளியைச் செலுத்தும்போது, ஒரே நேரத்தில் ஒளி எதிரொளிப்பு மற்றும் ஒளிவிலகல் இரண்டும் ஏற்படும். ஒரே ஒளிமூலத்திலிருந்து இரண்டு ஒளிக்கற்றைகளைப் பெறுவதால், பிரிக்கப்பட்ட இவ்விரண்டு ஒளிக்கற்றைகளும் ஓரியல் ஒளிக்கற்றைகளாகச் செயல்படும். படம் 6.54 இல் காட்டியுள்ளவாறு இவ்விரண்டு ஓரியல் ஒளிக்கற்றைகளும் ஒரே கட்டத்தில் அல்லது மாறாத கட்ட வேறுபாட்டில் உள்ளன.


(ii) அலைமுகப்புப் பிரிவு: ஓரியல் ஒளிமூலங்களைப் பெறுவதற்கான பொதுவான ஒருமுறை அலைமுகப்புப்பிரிப்பு ஆகும். நாம் அறிந்தபடி. புள்ளி ஒளிமூலம் ஒன்று கோளக அலைமுகப்பை ஏற்படுத்தும். இந்த அலைமுகப்பில் உள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒரே கட்டத்தில் இருக்கும். இரட்டைப் பிளவு ஒன்றினைப் பயன்படுத்தி அலை முகப்பிலுள்ள இண்டு புள்ளிகளைத் தேர்வு செய்தால் அவ்விரண்டு புள்ளிகளும் ஓரியல் ஒளிமூலங்களாகச் செயல்படும். இது படம் 6.55 இல் காட்டப்பட்டுள்ளது.


(iii) ஒளிமூலம் மற்றும் பிம்பங்கள்: இம்முறையில் ஒளிமூலமும் அதன் பிம்பமும் ஓரியல் ஒளிமூலத்தொகுப்பாகச் செயல்படுகின்றன. ஏனெனில், ஒளி மூலமும் அதன் பிம்பமும் ஒத்த கட்டத்தில் உள்ள அல்லது ஒரே கட்ட வேறுபாட்டையுடைய ஒளி அலைகளைக் தோற்றுவிக்கும். இது படம் 6.56 இல் காட்டப்பட்டுள்ளது . ப்ரனெல் (Fresnel's) இரட்டை முப்பட்டகத்தில்; இரண்டு மாய ஒளி மூலங்கள் ஓரியல்மூலங்களாகச் செயல்படுகின்றன. மேலும் லாயிட் (Lloyds) கண்ணாடியில் ஒரு ஒளி மூலமும் அதன் மாய பிம்பமும் இரண்டு ஓரியல் மூலங்களாகச் செயல்படுகின்றன.

12th Physics : UNIT 7 : Wave Optics : Interference: Coherent sources in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் :அலகு 7 : அலை ஒளியியல் : குறுக்கீட்டு விளைவு: ஓரியல் மூலங்கள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் :அலகு 7 : அலை ஒளியியல்