அலை ஒளியியல் | இயற்பியல் - ஒளியின் தளவிளைவு | 12th Physics : UNIT 7 : Wave Optics
ஒளியின் தளவிளைவு (Polarisation)
ஒளியின் குறிக்கீட்டு விளைவு மற்றும் விளிம்பு
விளைவு பற்றிய நிகழ்வுகளை விளக்கும் போது, ஒளி அலைவடிவில் பரவுகிறது என்று நாம் கருதினோம்.
ஆனால் குறுக்கலை வடிவிலா அல்லது நெட்டலை வடிவிலா என அறுதியிட்டுக் கூறவில்லை . ஒளியின்
தளவிளைவு நிகழ்வு, ஒளி குறுக்கலையாகத்தான் பரவுகிறது என்பதை நேரடியாக நமக்கு விளக்குகிறது.
ஒளி மின்காந்த அலையாகப் பரவுகின்றது. மேலும், மின்காந்த அலை ஒரு குறுக்கலை ஆகும். ஒளி
அலை பரவும் திசைக்குச் செங்குத்தாக உள்ள ஒரு குறிப்பிட்ட திசையில் ஒளியின் அதிர்வுகளை
(மின்புலம் அல்லது காந்தப்புல வெக்டர்) அனுமதிக்கும் நிகழ்ச்சிக்கு ஒளியின் தளவிளைவு
என்று பெயர். இந்த அலகில் புரிந்துகொள்வதற்கு எளிமையாக இருக்க, மின்புலம் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
முழுவதும் தளவிளைவடைந்த ஒளி (Plane Polarized light)
படம் 6.71 தளவிளைவு அடையாத மற்றும் தளவிளைவு
அடைந்த ஒளி
குறுக்கலை ஒன்று; அலைபரவும் திசைக்குச் செங்குத்தாக
உள்ள தளத்தில், அனைத்து திசைகளிலும் அதிர்வுகளைப் பெற்றிருப்பதைப் படம் 6.71 (அ) காட்டுகிறது.
இவ்வாறு அனைத்துத் திசைகளிலும் அதிர்வுகளைப் பெற்றுள்ள ஒளி அலைக்கு தளவிளைவற்ற ஒளி
என்று பெயர். படம் 6.71 (ஆ) இல் தளவிளைவற்ற ஒளியின் அனைத்து அதிர்வுகளும் இரு செங்குத்துக்
கூறுகளாகப் பிரித்துக் காட்டப்பட்டுள்ளன. அலைபரவும் திசைக்குச் செங்குத்தாக உள்ள தளத்தில்
ஒரு திசையில் மட்டும் அதிர்வுகளைப் பெற்றுள்ள ஒளி அலை, தளவிளைவுற்ற ஒளி அல்லது முழுவதும்
தளவிளைவுற்ற ஒளி என அழைக்கப்படும். படங்கள் 6.71 (இ) மற்றும் 6.71 (ஈ) ஆகியவை முழுவதும்
தளவிளைவு அடைந்த ஒளியைக் காட்டுகின்றன.
படம் 6.71 தளவிளைவற்ற மற்றும் முழுவதும் தளவிளைவு
அடைந்த ஒளி அலைகள் மின்புல வெக்டர்களைக் கொண்டுள்ள தளத்திற்கு, அதிர்வுத்தளம்
(ABCD) என்று பெயர். இது படம் 6.72 இல் காட்டப்பட்டுள்ளது. ஒளிக்கற்றையைக் கொண்டுள்ள,
அதிர்வுத்தளத்திற்குச் செங்குத்தாக உள்ள தளத்திற்கு தளவிளைவுத்தளம் (EFGH) என்று பெயர்.
தளவிளைவு அடைந்த மற்றும் தளவிளைவு அடையாத ஒளிக்கற்றைகளின் சில பண்புகள் அட்டவணை 6.6 இல் விவரிக்கப்பட்டுள்ளன.
படம் 6.72 அதிர்வுத்தளம் மற்றும் தளவிளைவுத் தளம்