சுற்றுச்சூழல் மேலாண்மை - அறிமுகம் | 10th Science : Chapter 22 : Environmental Management
அலகு 22
சுற்றுச்சூழல் மேலாண்மை
கற்றல்
நோக்கங்கள்
இப்பாடத்தைக் கற்றபின், மாணவர்கள்
பெறும் திறன்களாவன
* புதுப்பிக்கத்தக்க மற்றும்
புதுப்பிக்க இயலாத வளங்களை வேறுபடுத்த தெரிந்து கொள்ளல்.
* பல்வேறு இயற்கை வளங்களைப்
பாதுகாப்பதற்கான அவசியத்தை அறிந்து கொள்ளுதல்.
* இயற்கை வளங்களை பாதுகாக்க
கையாளப்படும் பல்வேறு முறைகள் பற்றி அறிந்து கொள்ளுதல்.
* இயற்கை வளங்களைப்
பயன்படுத்துவதில் உள்ள வரையறைகள் பற்றிய விழிப்புணர்வு பெறுதல்.
* சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும்
மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மையிலும் ஈடுபாட்டோடு பங்கேற்க ஊக்கப்படுத்துதல்.
அறிமுகம்
சுற்றுச்சூழல் மேலாண்மை என்பது
சுற்றுச்சூழலில் உள்ள பல்வேறு காரணிகளான அதன் அமைப்பு, செயல்பாடு,
தரம் மற்றும் உயிரிய மற்றும் உயிரற்ற கூறுகளை பாராமரித்தல் ஆகியவற்றை
உள்ளடக்கியது. மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் பயன்படுத்தி உயிர்
வாழ்வதற்கான அனைத்து வளங்களையும் இப்பூமி வழங்குகிறது. இயற்கையிலிருந்து
பெறப்படும் அனைத்தும் மனிதனுக்கு பயன் அளிக்கக்கூடிய வகையிலே அமைந்திருந்தாலும்
அதன் பயன்பாடு பொருத்தமான தொழில் நுட்பம் மூலமே சாத்தியமாகிறது.
சில வகையான வளங்களை நாம்
தொடர்ச்சியாக பயன்படுத்திக் கொண்டிருக்கும்போதே அவை மீண்டும் தம்மை புதுப்பித்துக்
கொள்ளக்கூடியதாக இருக்கின்றன. (வனங்கள், பயிர்கள், வன உயிரிகள்,
நிலத்தடி நீர், காற்று மற்றும் சூரிய ஆற்றல்).
இவை இயற்கையான மறு சுழற்சி முறையிலோ அல்லது உரிய மேலாண்மை வழியாகவோ தம்மை மீண்டும்
புதுப்பித்துக் கொள்கின்றன. தம்மை இயற்கையான மறு சுழற்சி முறையில் புதுப்பித்துக்
கொள்ள இயலாத வளங்கள், தேவைக்கதிகமான மற்றும் தொடர்ச்சியான
பயன்பாட்டினால் தீர்ந்து போகக் கூடியதாக உள்ளன. (தாது வளங்கள், கரி, பெட்ரோலியம்). இவற்றை எளிதில் புதுப்பிக்க
இயலாது. இதனால் இவற்றின் பயன்பாடுகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் முடிந்து
போய்விடக் கூடிய சூழ்நிலை உருவாகலாம்.
மனிதர்களின் தேவை, மக்கள் தொகைப்
பெருக்கத்தின் காரணமாக அதிகரித்துள்ளது. மனிதன் தன்னுடைய தேவைகளுக்காகவும்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் மிக அதிகமாக இயற்கை
வளங்களைப் பயன்படுத்துவதால் அவை மிகவும் வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. எனவே
இயற்கை வளங்களை பாதுகாப்பது என்பது, ஒரு நாட்டின் சமூக
மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கியமான பங்கை அளிக்கக்கூடியதாக உள்ளது.