மரபுசாரா
(மாற்று ஆற்றல்) மூலங்கள்
ஆற்றல் துறையில் நீடித்த
வளர்ச்சியை நாம் பெற வேண்டுமெனில், விரைவாக தீர்ந்து போகும் மரபு சாரா ஆற்றல்
மூலங்களின் பயன்பாட்டைக் குறைத்து, பாதுகாத்து, அவற்றுக்குப் பதிலாக, சுற்றுச்சூழலுக்கு மாசு
ஏற்படுத்தாத புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை நாம் பயன்படுத்த வேண்டும். இதுவே
ஆற்றல் நெருக்கடி நமக்கு உணர்த்துவதாகும். புதிய மரபுசாரா ஆற்றல் மூலங்கள்
எனப்படும் புதிய ஆற்றல் மூலங்களை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
இது உள்ளூர் மக்கள் தங்கள் ஆற்றல் தேவைகள் மற்றும் வளங்களை கண்டறியும் முயற்சியைத்
துவக்கவும் அவர்களுக்கு பயன்படக்கூடிய உத்திகளை வகுக்கவும் உதவிகரமாக இருக்கும்.
சூரியனில் இருந்து பெறப்படும்
ஆற்றல் சூரிய ஆற்றல் எனப்படும். சூரியன் பெருமளவு வெப்பத்தையும் ஒளியையும்
வெளியிடுகிறது. சூரியனிலிருந்து ஒளி ஆற்றல் ஏறக்குறைய பாதியளவே (47%) பூமியின்
மேற்பரப்பை வந்து அடைகிறது. இதில் மிகச் சிறிய அளவைப் பயன்படுத்துவதன் மூலம் நாம்,
நம் நாட்டில் பெருமளவு ஆற்றல் தேவைகளில் நிறைவு பெற முடியும். சூரிய
ஆற்றல் பல மேன்மைகளை கொண்டிருந்தாலும் ஒரு சில வரையறைகளுக்கும் உட்பட்டதாகும்
மேலும் அறிந்து கொள்வோம்
தாஜ்மஹால்
உலகின்
ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ளது. இது
வெண்மை நிற பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு
சொந்தமான மதுரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தாஜ்மஹாலுக்கு அருகில் அமைந்துள்ளது.
இதிலிருந்து உற்பத்தியாகும் சல்ஃபர் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் இப்பகுதியில்
உள்ள தாஜ்மஹாலின் வெண்ணிற பளிங்கு கற்களில் மேல் படிந்து அக்கற்களை மஞ்சள் நிறமாக
மாற்றியுள்ளது. தாஜ்மகாலை சிதைவிலிருந்து பாதுகாக்க தற்போது இந்திய அரசானது
வெளியேற்றும் புகைகளுக்கு குறிப்பிட்ட வரையறை அளவினை விதித்துள்ளது.
சூரிய ஆற்றல் சாதனங்கள்
சூரிய ஒளியை ஆற்றலாக
பயன்படுத்தலாம். சூரிய ஆற்றலை வெவ்வேறு பயன்பாட்டிற்காக மாற்றி உபயோகிக்க உதவும்
பல்வேறு சாதனங்கள் சூரிய ஆற்றல் சாதனங்கள் எனப்படும்.
சூரிய மின்கலன்கள்
சூரியமின்கலன்கள்
(ஃபோட்டோவோல்டாயிக் கருவிகள்) சிலிக்கானால் உற்பத்தி செய்யப்பட்டு சூரிய ஒளியை
மின் ஆற்றலாக மாற்றும் திறன் கொண்டவை. சூரிய மின்கலன்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு
ஏற்படுத்தாத வகையில் மின் உற்பத்தி செய்யக்கூடியவை. இதிலிருந்து மாசு உண்டாக்கக்கூடிய
எரிபொருட்களோ, ஆபத்தான வாயுக்களோ, கழிவுப் பொருட்களோ
வெளியேறுவதில்லை. இவற்றினை யாரும் அணுக இயலாத அல்லது மிக தொலை தூர இடங்களிலும்
பொருத்த முடியும். (காடுகள் மற்றும் மலைப்பாங்கான பிரதேசங்கள்). இங்கு வேறு ஆற்றல்
நிலையங்களை பெரும் பொருட்செலவில் மட்டுமே அமைக்க இயலும்.
சூரிய மின் கலன்களின் பயன்கள்
(i) தெருவிளக்குகள்,
போக்குவரத்து விளக்குகள், நீரேற்றம் மற்றும்
மின்கலனில் மீண்டும் ஆற்றலை நிரப்பவும் பயன்படுகிறது.
(ii) செயற்கைக்
கோள்கள் மற்றும் தொலைவெளி நுண்ணுணர்விகள், ஆகியவற்றில்
பயன்படுத்தப்படுகிறது.
(iii) தொலைதூரப்
பகுதிகளில் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு பயன்படுகிறது.
(iv) கால்குலேட்டர்கள்,
மின்னணு விளையாட்டு பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்களில்
பயன்படுத்தப்படுகிறது.
சூரிய மின் கலன் அடுக்குகள்
சூரிய மின்கலன்களை தொடர்
அடுக்காக அமைப்பதன் மூலம் சூரிய மின் கலன் அடுக்குகள் அமைக்கப்படுகிறது. இதனால்
இதில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவு அதிகமாகிறது. ஆனால் இவை மிகவும் உற்பத்தி
செலவு மிக்கவை.
சூரிய சமையற்கலன்
சூரிய சமையற்கலன் என்பது
உட்புறம் கருமை நிற வர்ணம் பூசப்பட்ட காப்பிடப்பட்ட உலோகம் அல்லது மரத்தால் ஆன
பெட்டியாகும். இதன் மேற்புறம் தடிமனான கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. சமதள கண்ணாடி
சூரிய ஒளியை சூரிய சமையற்கலன் எதிரொளிப்பதாக அமைந்துள்ளது. சூரியனில் இருந்து
பெறப்படும் கதிர்வீச்சு ஆற்றல் மூலம் உணவு சமைக்கப்படுகிறது.
சூரிய ஒளி வெப்ப ஆற்றல் நிலையங்கள்
சூரிய ஒளித் தகடுகள் மூலம்
குவிக்கப்பட்ட சூரிய ஒளியின் மூலம் நீர் வெப்பப்படுத்த பட்டு நீராவியாக மாற்றி
டர்பைன்களை இயக்குவதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
சூரிய ஆற்றலின் நன்மைகள்:
(i) பெருமளவிலும்,
விலையில்லாமலும் கிடைக்கக்கூடியது.
(ii) இது ஒரு
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகும்.
(iii) இது
வெப்பமூட்டியாகவும், மின்னாற்றலை உற்பத்தி செய்யவும் பயன்
படுகிறது.
(iv) எவ்வித
மாசும் உண்டாக்குவதில்லை.
உங்களுக்குத்
தெரியுமா?
100 சூரிய வெப்ப
சூடேற்றிகள் மூலம் ஒரு ஆண்டுக்கு 1500 யூனிட் மின்சாரத்தை
சேமிக்க முடியும்.
உயிரி வாயு என்பது மீத்தேன் (75%), ஹைட்ரஜன்
சல்பைட், கார்பன்-டை ஆக்ஸைடு, மற்றும்
ஹைட்ரஜன் சேர்ந்த கலவையாகும். இவ்வாயு விலங்குகள் மற்றும் தாவரங்களின் கழிவுகள்,
காற்றில்லாச் சூழலில் மட்கும் போது (சிதைவடையும் போது) உருவாகிறது.
பொதுவாக இவை "கோபர் கேஸ்" (கோபர் (ஹிந்தி) = மாட்டுச் சாணம்) என்றும்
அழைக்கப்படுகிறது.
உயிரி
வாயுவின் பயன்கள்:
(i) சமையலுக்கான
எரிபொருளாகப் பயன்படுகிறது.
(ii) நீரேற்றப்
பயன்படும் இயந்திரங்களையும், மோட்டார்களையும் இயக்குவதற்குப்
பயன்படுகிறது.
(iii) மின்சார
உற்பத்திக்குப் பயன்படுகிறது.
உயிரி
வாயுவின் மேன்மைகள்:
(i) இவை எரியும்
போது புகையை வெளியிடுவதில்லை. எனவே இவை குறைந்த மாசினை உண்டாக்குகின்றன.
(ii) உயிரியக்
கழிவுகள் மற்றும், கழிவுப்பொருட்கள் போன்ற கரிமப் பொருள்களை
சிதைவடையச் செய்வதற்கு மிகச் சிறந்த வழியாகும்.
(iii) படியும்
கழிவுகளில் பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் அளவு மிகுந்திருப்பதால், அதனை சிறந்த உரமாக பயன் படுத்தலாம்.
(iv) இது
பயன்படுத்த, பாதுகாப்பானதும் வசதியானதுமாகும்.
(v) பசுமை இல்ல
வாயுக்கள் வெளியேறும் அளவை பெருமளவில் குறைக்கிறது.
ஷேல் எனப்படுவது பூமியின்
அடிப்புறத்தில் அமைந்துள்ள சேறு மற்றும் தாதுக்கள் (குவார்ட்ஸ் மற்றும் கால்சைட்)
அடங்கிய மென்மையான பாறை அடுக்குகளைக் குறிப்பதாகும். இப்பாறை அடுக்குகளின்
இடையிலுள்ள துளைகளில் எண்ணெய் மற்றும் வாயுக்கள் நிரம்பியிருக்கின்றன.
இவ்வாயுக்கள் மற்றும்
எண்ணெயினை வெளியே எடுக்க ஹைட்ராலிக் ப்ராக்சரிங் / ஹைட்ராலிக் முறிவு (பாறை
அடுக்குகளின் மேல் எண்ணெய் மற்றும் வாயுக்கள் நிரம்பியுள்ள அடுக்கை அடையும் வரை
ஆழமாகத் துளையிடப்படுதல்.) என்னும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
ஷேல் வாயுவினால் உண்டாகும் சுற்றுச்சூழல் விளைவுகள்
(i) ஷேல்
வாயுக்களுக்காக இடப்படும் துளைகள் நிலத்தடி நீர் மட்டத்தினை வெகுவாகப் பாதித்து
குடிநீர் ஆதாரத்தை மாசுபடுத்துகிறது. மேலும் மண் வளத்தையும் பாதிக்கிறது.
(ii) நிலத்தடியில்
உள்ள வாயுக்கள் மற்றும் எண்ணெயினை வெளியேற்ற பல மில்லியன் கன அளவு நீரைப்
பயன்படுத்த வேண்டியிருப்பதால், இவை நிலத்தடி நீர் மட்டத்தை
வெகுவாகப் பாதிக்கிறது.
மேலும் அறிந்து கொள்வோம்
ஷேல்
வாயுக்கள் எடுப்பதற்காக இந்தியாவில் ஆறு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை
கேம்பே(குஜராத்), அஸ்ஸாம் - அரக்கான் (வட கிழக்குப் பகுதி),
கோண்ட்வானா (மத்திய இந்தியா), கிருஷ்ணா
கோதாவரி (கிழக்கு கடற்கரைப் பகுதி), காவேரி மற்றும் இந்தோ -
கங்கைப் வடிநிலப் பகுதி.
வேகமாக வீசக்கூடிய காற்றின்
விசையானது காற்றாலை (டர்பைன்) சுழற்றியின் மூலம் எந்திர ஆற்றலாக மாற்றப்படுகிறது.
இந்த காற்றாற்றல் (i)
மின்சார உற்பத்தி (ii) நீர் உந்திகள், அரவை ஆலைகள் (iii) கிணற்றிலிருந்து நீரை மேலேற்றப்
பயன்படுகிறது.
காற்றாலை
காற்றாலை என்பது, காற்றால்
உந்தப்படும் ஆற்றலானது சுழற்சி ஆற்றலாக மாற்றப்படுவதற்கு நீளமான இறக்கைகள் ஒரு
சுழலும் அச்சுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு எந்திரமாகும். வேகமான காற்று, இறக்கைகள் மீது மோதி அவற்றினை சுழலச் செய்கிறது. இறக்கைகள் சுழல்வதால்
அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மின்னியற்றி செயல்பட்டு மின்னாற்றல் உற்பத்தி ஆகிறது.
ஒவ்வொரு காற்றாலையில் இருந்து உற்பத்தி ஆகும் மின்சாரமும் ஒன்றோடொன்று
இணைக்கப்பட்டு வர்த்தக ரீதியில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
உங்களுக்குத்
தெரியுமா?
• உலகின் மிக
உயரமானதும், மிகப் பெரியதுமான காற்றாலை ஹவாய் பகுதியில்
அமைந்துள்ளது.
• ஒரு
காற்றாலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தினை 300
வீடுகள் பயன்படுத்த முடியும்.
காற்றாற்றலின்
நன்மைகள்:
(i) காற்றாற்றல்,
விலையில்லாத, சுற்றுச்சூழலுக்குகந்த, புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளமாகும்.
(ii) இவை எவ்வித
மாசும் ஏற்படுத்துவதில்லை.
(iii) பிற
மின்னாற்றல் உற்பத்தி நிலையங்களை ஒப்பிடும்போது பராமரிப்பு செலவு மிகவும் குறைவு
செயல்பாடு 1
கீழ்க்காணும்
அணைக்கட்டு திட்டங்கள் குறித்த தகவல்களை சேகரித்து தொகுத்தளி
1. டேஹ்ரி அணைக்கட்டு திட்டம்
2. சர்தார் சரோவர் அணைக்கட்டு திட்டம்
புவியின் மேற்பரப்பு ஏறக்குறைய
71% நீரால்
சூழப்பட்டுள்ளது. ஓடும் நீரினில் இருந்து பெறப்படும் ஆற்றல், மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது. இவ்வாறு பெறப்படும் ஆற்றல் புனல்
மின்னாற்றல் எனப்படும்.
புனல் மின் உற்பத்தி
நிலையங்களில் மேலிருந்து வேகமாக கீழே விழும் நீர் அல்லது வேகமாக ஓடும் நீரின்
இயக்க ஆற்றல் மின்னாற்றலாகப் பெறப்படுகிறது. மலைப்பகுதிகள் இதற்கு மிகவும் ஏற்றவை.
ஏனெனில் அதிக சரிவான பகுதிகளிலிருந்து நீர் பெருமளவில் தொடர்ந்து வழிந்தோடி
வருகின்றது. இவை சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் உண்டாக்காமலும், எவ்வித
கழிவையும் ஏற்படுத்தாமல் செயல்படக்கூடியவை.
நீர்
மின்சார நிலையங்கள், ஓடும் நீரிலுள்ள
நிலை ஆற்றலை மின்னாற்றலாக மாற்றக்கூடியவை. இது நீர் மின்சாரம் எனப்படும்.
ஓத ஆற்றல் எனப்படுவது
கடலோரங்களில் உண்டாகும் கடல் நீரின் வேகமான இடப்பெயர்ச்சியினால் ஏற்படும் ஆற்றல்
ஆகும். ஓதங்கள் என்பவை கடல் நீரின் மீது, புவியீர்ப்பு விசையில் ஏற்படும் மாற்றங்கள்
காரணமாக, கடல் நீர் மட்டம் உயர்வதும், தாழ்வதுமாகும்.
ஓத நீரோட்டம் என்பது மிக
வேகமாக இடப்பெயர்ச்சி ஆகும் நீரினை, ஓதங்கள் உருவாக்குவதாகும். அவ்வாறு நிகழும் போது
உண்டாகும் இயக்க ஆற்றலைப் பயன்படுத்தி டர்பைன்களை இயங்கச் செய்வதன் மூலம்
மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஓத ஆற்றலினால் உண்டாகும் நன்மைகள்:
(i) எவ்வித
சுற்றுச்சூழல் மாசும் ஏற்படுத்துவதில்லை.
(ii) இவற்றுள்
எவ்வித எரிபொருளும் பயன்படுத்தாததால் கழிவுகள் ஏதும் வெளியேறுவதில்லை.
(iii) ஓதங்கள்
எப்போது உருவாகும் என்பதனை முன்னரே நம்மால் கணிக்க முடியும். இதனால் இந்த ஆற்றலை
நாம் தொடர்ச்சியாக பெறமுடியும்.
(iv) நீரின்
அடர்த்தி காற்றை விட அதிகமாக உள்ளதால் மிக மெதுவான நீரின் இயக்கத்தினால் கூட,
டர்பைனை இயங்கச் செய்வதால், மின்சாரம்
உற்பத்தி செய்ய முடிகிறது.