வன
உயிரினங்களின் பாதுகாப்பு:
இயற்கையான வாழிடத்தில் (காடுகள், புல்வெளிகள்,
பாலைவனங்கள்) வாழும், மனிதர்களால்
வளர்க்கப்படாத உயிரினங்கள் வன உயிரிகள் எனப்படும். உயிரியப் பல்வகைத் தன்மையை நிலை
நிறுத்த வன உயிரிகள் அவசியமாகின்றன. வன உயிரிகள், வனச்
சுற்றுலாவை மையமாகக்கொண்டு வருவாயைப் பெருக்குவதால் பொருளாதார வளர்ச்சியை
மேம்படுத்திட உதவுகின்றன. காடுகள் பாதுகாப்பும், வன உயிரின
பாதுகாப்பும் ஒன்றோடொன்று தொடர்புடையவை.
இந்திய வனஉயிரிகள் பெரும்
பாரம்பரியம் மிக்கவை வன உயிரினங்களை அதிகமாகப் பயன்படுத்தியதால் 1970 ஆம் ஆண்டு
முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், வன உயிரினங்களின் எண்ணிக்கை 52% அளவு குறைந்துள்ளது.
அதீத பயன்பாடு மற்றும் காடுகள் அழிக்கப்பட்டதன் காரணமாக பல விலங்கினங்கள்
அழிந்தும், சில வகை விலங்கினங்கள் அழியக்கூடிய நிலையிலும்
மற்றவை அழிந்து போகக்கூடிய, அச்சுறுத்தலான நிலையிலும் உள்ளன.
சமீப காலங்களில் மனித ஆக்கிரமிப்பின் காரணமாக இந்திய வன உயிரினங்களுக்கு மிகப்
பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
வன உயிர்களை பாதுகாப்பதில்
முக்கிய நோக்கமானது,
* சிற்றினங்களை அழிவிலிருந்து பாதுகாத்தல்.
* தாவரங்கள் மற்றும் விலங்குகளை
அழிவிலிருந்து பாதுகாத்தல்.
* அருகி வரும் சிற்றினங்கள்
மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள சிற்றினங்கள் அழியாமல் பாதுகாத்தல்.
* அழியக்கூடிய நிலையில் உள்ள
சிற்றினங்களை பாதுகாத்தல்.
* தாவர விலங்கினங்கள் அவற்றின்
இயற்கை வாழ்விடங்களுக்கிடையேயான சூழலியல் தொடர்பைப் பற்றி அறிந்து கொள்தல்.
* சட்டவிரோத வேட்டையாடுதல்
மற்றும் விலங்குகளை பிடித்தல் ஆகியவற்றைத் தடை செய்தல்.
* தேசிய பூங்காக்கள், வன உயிரி
சரணாலயங்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் உயிர்க்கோளக்
காப்பகங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துதல்
வன உயிரி
பாதுகாப்புச் சட்டம் 1972ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச் சட்டத்தின் முக்கிய
அம்சங்களாவன.
* குறிப்பிட்ட வன உயிரிகளை
வேட்டையாடுவதும்,
கொல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
* வன உயிரிகளை பாதுகாக்க
சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், மற்றும் பாதுகாக்கப்பட்ட
பகுதிகளை புதிதாக உருவாக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
* அழியும் நிலையிலுள்ள உயிரிகளை
பாதுகாக்க சிறப்பு திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
* மத்திய வன விலங்கு வாரியம்
ஏற்படுத்தப்பட்டு,
அதன் மூலம் தேசிய பூங்காக்களுக்கான அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
* வன உயிரிகள், மற்றும்
அவற்றின் மூலம் பெறப்படும் பொருட்கள் தொடர்பான வணிகம் தடை செய்யப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
* ஜிம்
கார்பெட் தேசியப் பூங்கா, 1936ம் ஆண்டு உத்தராகான்ட் மாநிலத்தில்
துவங்கப்பட்ட இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா.
* இந்தியாவில்
தற்போது 15 உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன.
* தமிழ்நாட்டிலுள்ள
நீலகிரி பகுதி, ஒரு பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோளக் காப்பக பகுதியாகும்.
(i) இந்திய வன
உயிரி வாரியம் (IWBL)
(ii) சர்வதேச வன
உயிரி நிதியம் (WWF).
(iii) உலகப்
பாதுகாப்பு ஒன்றியம் (WCN).
(iv) பன்னாட்டு
இயற்கை மற்றும் இயற்கை வளங்களுக்கான பாதுகாப்பு ஒன்றியம் (IUCN)
(v) ஆபத்தான
இனங்களை பாதுகாப்பதற்கான சர்வதேச வர்த்தக மாநாடு (CITES).
(vi) பாம்பே
இயற்கை வரலாற்று நிறுவனம். (BNHS)
(vii) இந்திய வன
உயிரி பாதுகாப்பு நிறுவனம், டெஹ்ராடூன்.
உங்களுக்குத் தெரியுமா?
தமிழ்நாட்டில்
தேனி மாவட்டம், வெங்கடாச்சலபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ராதிகா
ராமசாமி என்பவர் “இந்தியாவின் முதல் பெண் வன உயிரி
புகைப்படக் கலைஞர்" என்று சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளார். இவர் பறவை
இனங்களை புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவரது புகைப்படத்
தொகுப்பு “வன உயிரினங்களின் சிறந்த தருணங்கள்" என்னும்
தலைப்பில் நவம்பர் 2014ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
தகவல் துணுக்குகள்
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட வன உயிரி பாதுகாப்புக்கான நடவடிக்கைகள்
•
புலிகள் பாதுகாப்பு திட்டம் 1973ம் ஆண்டிலும், யானைகள் பாதுகாப்புத் திட்டம் 1992ம் ஆண்டிலும்
துவங்கப்பட்டது.
• 1976ம் ஆண்டில் முதலைகள் பாதுகாப்புத் திட்டம் துவங்கப்பட்டது.
• 1999ம் ஆண்டில் கடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம் துவங்கப்பட்டது.
• அசாம்
மாநிலத்திலுள்ள காண்டாமிருகங்களை பாதுகாக்க ‘இந்திய காண்டாமிருகங்கள்
பாதுகாப்பு 2020' என்னும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன்
மூலம் குறைந்த பட்சம் 3000 ஒற்றைக் கொம்புடைய
காண்டாமிருகங்களையாவது 2020 ம் ஆண்டுக்குள் பாதுகாத்திட குறிக்கோள்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.