பொருளாதாரம் - நுகர்வோர் சமநிலை | 11th Economics : Chapter 2 : Consumption Analysis
நுகர்வோர் சமநிலை
சமநோக்கு வளைகோட்டின் அடி மட்டத்தில் வரவு செலவுக் கோடு தொடும் புள்ளியில் நுகர்வோர் சமநிலை அடைகிறார். AB என்ற வரவு செலவுக்
கோடு IC3 சமநோக்கு வளைகோட்டை T என்ற புள்ளியில் தொடுகிறது. இந்த IC3 வளைகோடே இருக்கின்ற வருமானத்தில் அதிக அளவு திருப்தியைத் தரும் வளைகோடாகும். இந்த சமநிலைப் புள்ளியில் IC யின் சாய்வு (slope) MRSxy -யைக் குறிக்கிறது (இறுதிநிலை பதிலீட்டு வீதம்). வரவு செலவுக் கோட்டின் சாய்வு X மற்றும் Yன் விலை விகிதத்தை குறிக்கிறது (Px / Py). ஆகவே MRSxy = Px / Py.
தொகுப்புரை
தனி நபர் வளங்களை ஒதுக்கீடு செய்வதற்கு நுகர்வோர் நடத்தை பற்றிய புரிதல் அவசியமாகிறது. நுகர்வைப் பற்றிய முடிவுகள் வருமானம், விலை மற்றும் பயன்பாடு ஆகியவற்றிற்கிடையே உள்ள தர்க்கரீதியான உறவினைப் பொறுத்தே அமைகின்றன. நுகர்வோரது நடத்தைக்கேற்ப பொருட்களை உற்பத்தி செய்யவும் உற்பத்தியாளர்கள் தம் இலாபத்தை அதிகரித்துக் கொள்ளவும் தேவைப் பகுத்தாய்வு உற்பத்தியாளர்களுக்கு உதவுகிறது.
சொற்களஞ்சியம்
நுகர்வு ஒருவரின் விருப்பங்களை பூர்த்தி செய்ய பண்டங்கள், பணிகளை பயன்படுத்துவது.
தேவை வாங்க வேண்டும் என்ற விருப்பமும், வாங்கும் திறனும் வாங்கும் எண்ணமும் கூடியது தேவை ஆகும்.
பயன்பாடு பண்டங்கள் மற்றும் பணிகளை நுகரும்போது நுகர்வோருக்குக் கிடைப்பதாக நுகர்வோர் கருதுவது. விருப்பத்தை நிறைவு செய்யும் ஆற்றல்
இறுதிநிலை பயன்பாடு
கூடுதலாக ஓர் அலகை நுகர்வதால் பெறும் அதிகப் பயன்பாடு
தேவை நெகிழ்ச்சி
தேவையில் ஏற்படும் மாற்ற விகிதத்தை விலையில் ஏற்படும் மாற்ற விகிதத்தினை வகுக்கக் கிடைப்பது
நுகர்வோர் எச்சம்
ஒரு பொருளுக்கு நுகர்வோர் கொடுக்க விரும்பும் விலைக்கும் உண்மையிலேயே கொடுக்கும் விலைக்கும் உள்ள வித்தியாசம்.
சமநோக்கு வளைகோடுகள் :
ஒரு வளைகோட்டில் உள்ள இரு பண்டங்களின் அனைத்து கலவையும் நுகர்வோருக்கு சமஅளவு திருப்தியைத் தருமாயின் அது சமநோக்கு வளைகோடாகும்.
சமநோக்கு தொகுதி
பல சமநோக்கு வளைகோடுகளின் தொகுப்பாகும். மேலே உள்ள சமநோக்கு வளைகோடு அதிக அளவு திருப்தியையும் கீழே உள்ள சமநோக்கு வளைகோடு குறைந்த அளவு திருப்தியையும் குறிக்கின்றன.
விலைக்கோடு அல்லது வரவுசெலவுக்கோடு
கொடுக்கப்பட்ட விலை மற்றும் வருவாயில் நுகர்வோரின் இரண்டு பண்டங்களுக்கான பல்வேறு கலவைகளின் புள்ளிகளின் இணைப்பே ஆகும்.
நுகர்வோர் சமநிலை
நுகர்வோர் தனது வருமானத்தின் முழுமையும் பண்டங்களை வாங்க செலவிடுதன் மூலம் அதிலிருந்து அதிகபட்ச திருப்தியை பெறுகின்ற புள்ளியே நுகர்வோர் சமநிலைப் புள்ளி ஆகும். அச்சமநிலையில் இருந்து அவர் விலகமாட்டார்.