சமநிலை
மீள்வினையில் முன்னோக்கு வினையும், பின்னோக்கு
வினையும் ஒரே நேரத்தில் நடைபெறும். முன்னோக்கு வினையின் வேகமும், பின்னோக்கு வினையின் வேகமும் சமமாக இருக்கும் போது வினை விளை பொருள்கள்
உருவாகாது. இந்த நிலைக்கு சமநிலை என்று பெயர். இந்த நிலையை அடைந்த பிறகு , வினைபடுபொருள் மற்றும் வினைவிளை பொருள்களின் அளவில் மாற்றம் ஏற்படுவது
இல்லை. ஒரு வேதிவினையில் எட்டப்படும் சமநிலையே வேதிச் சமநிலை எனப்படும்.
வேதிச் சமநிலை
என்பது ஒரு மீள்வேதிவினையின் வினைபடுபொருள் மற்றும் வினை விளைபொருளின் செறிவில்
எந்த மாற்றமும் நிகழாத நிலை ஆகும். சமநிலையில்,
முன்னோக்கு பின்னோக்கு வினையின் வேகம் = வினையின் வேகம்
வினையின் தொடக்கத்தில் முன்னோக்கு
வினையின் வேகமானது, பின்னோக்கு வினையின் வேகத்தை விட அதிகம். இருந்தபோதிலும் வினை நடைபெறும்
பொழுது வினைபடுபொருளின் செறிவு குறைகிறது மற்றும் வினைவிளைபொருளின் செறிவு
அதிகரிக்கிறது. வினைவேகம் என்பது செறிவுக்கு நேர்விகிதத் தொடர்புடையது ஆகையால்
முன்னோக்கு வினையில் வினைபடு பொருளின் செறிவு நேரத்தைப் பொருத்து குறைவதால்,
வினைவேகமும் குறைகிறது. அதேபோல் பின்னோக்கு வினையின் வினைவேகம்
அதிகரிக்கிறது.
ஒரு குறிப்பிட்ட நிலையில், இரு வினைகளின்
வினைவேகமும் சமமாகின்றன. இந்நிலையில், வினைபடு மற்றும்
விளைபொருளின் செறிவு நேரத்தை பொருத்து மாறுவதில்லை இந்த நிலையை சமநிலை என்கிறோம்.
கால்சியம் கார்பனேட் சிதைந்து
கால்சியம் ஆக்சைடாகவும், கார்பன் டை ஆக்சைடாகவும் மாறும் வினையைக் கருதுவோம். இந்த வினை ஒரு
மீள்வினை. ஒரு வேதிவினையின் வேகமானது எவ்வளவு விரைவாக அதன் வினைபடு பொருள்களின்
அளவு குறைகிறது என்பதை சார்ந்ததாகும். இந்த வினை, ஒரு மூடிய
கலனில் நடைப்பெற்றால் அது வேதிச் சமநிலையை அடையும்.
வேதியியல் மாற்றங்கள் மட்டுமின்றி
இயற்பியல் மாற்றங்களும் சமநிலையை அடைய வல்லது.
மூடிய கலனில் வைக்கப்பட்ட நீரானது, ஆவியாகும் போது
நீராவியாக மாறி கலனில் ஒரு அழுத்ததை ஏற்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட நிலையில்
நீராவி குளிர்ந்து நீராக மாறுகிறது. இவ்வாறு ஆவி சுருங்கும் வேகமும் நீராவியாக
மாறும் வேகமும் சமமாகும்போது, இந்நிகழ்வு சமநிலையை அடைகிறது.
இந்நிலையில் (இரண்டு நிலைகளில்)
நீரின் கனஅளவும், நீராவியின் கன அளவும் மாறாது. இது ஒரு இயற்பியல் மாற்றம் ஆகும். எனவே
இம்மாற்றத்தில் எட்டப்படும் சமநிலை இயற்பியல் சமநிலை என்று
அழைக்கப்படுகிறது. இயற்பியல் சமநிலை என்பது அனைத்து நிலைகளிலும் கனஅளவு மாறாது.
(நீராவி, நீர்)
1. வேதிச் சமநிலையில்
முன்னோக்கு வினையின் வேகமும், பின்னோக்கு வினையின் வேகமும்
சமம்.
2. நேரத்தை பொருத்து
அழுத்தம், செறிவு, நிறம், அடர்த்தி, பாகுநிலை போன்றவை மாறாது.
3. வேதிச் சமநிலை
என்பது ஒரு இயங்குச் சமநிலை ஏனெனில் முன்னோக்கு வினையும், பின்னோக்கு
வினையும் தொடர்ந்து நிலையாக நடந்து கொண்டிருக்கும்.
4. இயற்பியல்
சமநிலையில், அனைத்து நிலைமைகளும் மாறாத கனளவைப் பெறுகின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
காற்றடைக்கப்பட்ட
குளிர்பானங்களில் கார்பன் டை ஆக்சைடு நீரில் கரைக்கப்பட்டு (சோடா) ஒரு பாட்டிலில் வைக்கப்பட்டுள்ளது. வாயு வெளியேறா வண்ணம்
அடைக்கப்பட்டுள்ள நிலையில் பாட்டிலில் கரைக்கப்பட்ட கார்பன் டைஆக்சைடு வாயுவும்
(கார்பானிக் அமிலம்), வாயு நிலை கார்பன் டை ஆக்சைடு வாயுவம்
ஒன்றுடன் ஒன்று சமநிலையில் உள்ளன. நீங்கள் பாட்டிலைத் திறந்தவுடன் வாயுநிலை
கார்பன் டை ஆக்சைடு வெளியேறுகிறது. எனவே கரைக்கப்பட்ட கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியேறும்
பொருட்டு கரையா நிலைக்கு மீண்டும் திரும்புகிறது. எனவே தான் நீ பாட்டிலைத் திறந்து
நீண்ட நேரம் வைக்கும் பொழுது கார்பன் டை ஆக்சைடு அனைத்தும் வெளியேறி CO2
இல்லாத திரவமாக மாறுகிறது.