pH அளவுகோல்
நீரின் சுய அயனியாதல் பண்பினால்
எல்லா நீர்க்கரைசல்களும் ஹைட்ரஜன் மற்றும் ஹைட்ராக்சில் அயனிகளைக் கொண்டிருக்கும்.
இதனுடன் நீரில் கரைக்கப்படும் சேர்மங்களும் அயனியாதலுக்குட்பட்டு ஹைட்ரஜன் அல்லது
ஹைட்ராக்சில் அயனிகளைத் தரலாம். இந்த அயனிகளின் செறிவு ஒரு கரைலின் அமிலத்தன்மை
அல்லது காரத்தன்மையை தீர்மானிக்கிறது.
pH அளவுகோல் ஒரு
கரைசலின் ஹைட்ரஜன் அயனிக் செறிவை அளக்க உதவும் ஒரு அளவீடாகும்.
pH என்ற குறியீட்டில்,
'p' என்பது 'potenz' என்ற ஜெர்மானியச்
சொல்லைக் குறிக்கும். இதன் பொருள் Power என்பதாகும். இது
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த உயிரிவேதியியல் விஞ்ஞானி S.P.L சாரன்சன்
என்பவரால் 1909 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது. pH அளவீடு என்பது 0 முதல் 14
முடிய உள்ள எண்களைக் கொண்ட அளவீடாகும். இது ஒரு கரைசல் அமிலமா? காரமா? அல்லது நடுநிலைத்தன்மை வாய்ந்ததா என
குறிப்பிட உதவுகிறது.
· அமிலங்களின் pH மதிப்பு 7 ஐ விட குறைவு
· காரங்களின் pH மதிப்பு 7 ஐ விட அதிகம்
· நடுநிலைக் கரைசலின் pH மதிப்பு
7க்கு சமம்.
pH என்பதை ஹைட்ரஜன்
அயனிச் செறிவின் பத்தை அடிப்படையாகக் கொண்ட மடக்கையின் எதிர் மதிப்பாகும்
pH = –log10[H+].
சில பொருள்களின் pH மதிப்பு கீழ்கண்ட
அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
pH தாளைக் கொண்டு ஒரு
கரைசலின் pH ஐ எவ்வாறு அளவிடலாம்?
ஒரு கரைசலின் pH மதிப்பினை பொது
நிறங்காட்டி ஒன்றின் உதவியால் கண்டறிய முடியும். இந்நிறங்காட்டி சில சாயங்களின்
கலவையாகும். இது கரைசலாகவோ அல்லது தாள் வடிவிலோ பயன்படுத்தப்படுகிறது.
பள்ளி ஆய்வக அளவிலான pH அளவீட்டுக்கு pH
தாளை பயன்படுத்துவது ஒரு பொதுவான முறையாகும். ஒரு pH தாள் நிறங்காட்டிகளின் கலவையால் ஆனது. இது கொடுக்கப்பட்ட pH இல் குறிப்பிட்ட நிறத்தைக் காட்டுகிறது. நிறங்காட்டியின் குடுவையோடு
(பாட்டிலோடு) ஒரு நிற வழிகாட்டி தரப்படுகிறது அல்லது நிறங்காட்டி நீள்வடிவ காகிதத்
துண்டுகள் தரப்படுகின்றன. இத்தாள்கள் pH தாள்கள் என
அழைக்கப்படுகின்றன. ஒரு துளி சோதனை கரைசல் பொது நிறங்காட்டியுடன் சேர்க்கப்பட்டு
அல்லது pH தாளில் வைக்கப்பட்டு நிறப்பட்டியலுடன்
தொடர்புபடுத்தி pH மதிப்பு கண்டறியப்படுகிறது. இவ்வாறு
கண்டறியப்படும் மதிப்புகள் தோராயமான மதிப்புகளே ஆகும். பொதுவாக மனித ரத்தத்தின் pH
மதிப்பு 7.4 ஆகும்.