புறப்பரப்பு வேதியியல் - கூழ்மம், பிரிகைநிலைமை மற்றும் பிரிகை ஊடகம் | 12th Chemistry : UNIT 10 : Surface Chemistry
கூழ்மம், பிரிகைநிலைமை மற்றும் பிரிகை ஊடகம்
ஒரு மெல்லிய சவ்வின் வழியே, சர்க்கரை, யூரியா அல்லது சோடியம் குளோரைடு கரைசல்கள் ஊடுருவிச் செல்கின்றன. ஆனால், பசை, ஜெலாட்டின் அல்லது கோந்து கரைசல்கள் ஊடுருவிச் செல்வதில்லை என்பதை தாமஸ்கிரஹாம் கண்டறிந்தார். அவர் முன்னதாக குறிப்பிடப்பட்ட சேர்மங்களை படிகப்போலிகள் எனவும், பின்னதாக குறிப்பிடப்பட்ட சேர்மங்களை கூழ்மங்கள் (கிரேக்க மொழியில், kola - பசை, eidos-போன்றவை) என்றும் அழைத்தார்.எந்தப் பொருளையும், அதன் துகள் அளவை 1-200nm அளவிற்கு குறைப்பதன் மூலம் கூழ்மமாக மாற்றமுடியும் என்பது பின்னர் உணர்ந்தறியப்பட்டது.
எனவே, கூழ்மம் என்பது இரண்டு பொருட்களைக் கொண்ட ஒருபடித்தான கலவை ஆகும். இதில் உள்ள ஒரு பொருளானது (குறைந்தளவு உள்ளது) மற்றொரு பொருளில் ( அதிகளவு உள்ளது) விரவியுள்ளது. ஒரு கூழ்மத்தில், அதிகளவு காணப்படும் பொருள், பிரிகை ஊடகம் எனவும், குறைந்தளவு காணப்படும் பொருள், பிரிகை நிலைமை எனவும் அழைக்கப்படுகின்றன.