கூழ்மங்களின் பல்வேறு பயன்கள்
வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் கூழ்மங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. மனித உடலானது எண்ணிலடங்கா கூழ்ம நிலை கரைசல்களை கொண்டுள்ளன. நமது உடலிலுள்ள இரத்தம், தாவர மற்றும் விலங்கு செல்களிலுள்ள புரோட்டோபிளாஸ்மா மற்றும் நமது இரைப்பையிலுள்ள கொழுப்பு ஆகியன பால்மங்களாக உள்ளன. பாலிஸ்டைரின், சிலிக்கோன்கள் மற்றும் PVC போன்ற தொகுப்பு பலபடிகளும்கூழ்மங்களே ஆகும்.
உணவுகள்
பால், கிரீம், வெண்ணெய், ஆகிய உணவுப்பொருட்கள் கூழ்நிலையில் உள்ளன.
மருந்துகள் :
ஊசிமூலம் செலுத்துவதற்கு ஏதுவாக, பெனிசிலின் மற்றும் ஸ்ட்ரெப்டோமைசின் போன்ற எதிர் உயிரி மருந்துகள் கூழ்ம நிலையில் தயாரிக்கப்படுகின்றன. கூழ்ம நிலையிலுள்ள கோல்டு மற்றும் கூழ்மநிலையிலுள்ள கால்சியம் ஆகியன டானிக்குகளில் பயன்படுகிறது. மெக்னீஷியா பால்மம் வயிற்று உபாதைகளை சரிசெய்ய பயன்படுகிறது. ஜெலாட்டினால் பாதுகாக்கப்பட்ட சில்வர் கூழ்மமானது ஆர்ஜீரால் என அறியப்படுகிறது. இது கண் மருந்துகளில் பயன்படுகிறது.
கூழ்மங்கள் பல்வேறு தொழிற் பயன்களைப் பெற்றுள்ளன.
(i) நீர்சுத்திகரிப்பு:
Al3+ அயனிகளைக் கொண்டுள்ள படிகாரங்ளை பயன்படுத்தி, குடிநீரிலுள்ள மிதக்கும் மாசுக்களை திரியச்செய்வதன் மூலம் குடிநீர் சுத்திகரிக்கப்படுகிறது.
(ii) சலவைத் தொழில்:
துணிகளிலுள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுக்குடன், சோப்பு மூலக்கூறுகள் சேர்ந்து பால்மங்கள் உருவாவதால் சோப்புகள் அழுக்கு நீக்கிகளாக செயல்படுகின்றன.
(iii) தோல் பதனிடுதல்:
விலங்குத் தோல் என்பது நேர்மின் துகள்களைக் கொண்ட புரதங்களாகும். இவற்றுடன் டானின் சேர்த்து, திரியச் செய்து விரைப்பான தோல் பெறப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதற்காக குரோமியம் உப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை குரோம் பதனிடுதல் மூலம் மிருதுவான, பளபளப்பான தோலை தயாரிக்க முடியும்.
(iv) இரப்பர் தொழில்:
இயற்கை இரப்பரின் இரப்பர் பாலானது எதிர்மின் துகள்களைக் கொண்ட ஒருபால்மமாகும். சல்பருடன் சேர்த்து இரப்பரை வெப்பப்படுத்தி வல்கனைஸ் செய்யப்பட்ட இரப்பர் தயாரிக்கப்படுகிறது. இது டையர்கள், டியூப்கள் போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.
(v) கழிவுநீர் நீக்கம்:
கழிவுநீரானது நீரில் பிரிகையடைந்த அழுக்கு, மண் மற்றும் கழிவுகளை கொண்டுள்ளது. இதில் மின்சாரத்தை செலுத்தும்போது கழிவுப்பொருட்கள் வீழ்படிவாகின்றன. இவை உரங்களாக பயன்படுத்தப்படுகின்றன.
படம் 10.17 கழிவு நீர்நீக்கும்
(vi) காட்ரெல் வீழ்படிவாக்கி
காற்றிலுள்ள கார்பன் துகள்கள் காட்ரெல் வீழ்படிவாக்கியால் வீழ்படிவாக்கப்படுகின்றன. இதில், ஏறத்தாழ 50,000V மின்னழுத்த வேறுபாடு பயன்படுத்தப்படுகிறது. கார்பன் துகள்கள் மீதுள்ள மின்சுமை நடுநிலையாக்கப்பட்டு வீழ்படிவாக்கப்படுகிறது. அதாவது,கார்பன் துகள்களற்ற காற்று கிடைக்கிறது.
(vii) காற்றிலுள்ள தூசித் துகள்களின் டிண்டால் விளைவால் வானம் நீல நிறமாக உள்ளது.
(Viii) டெல்டா உருவாதல்:
கடல் மற்றும் ஆற்றுநீர் ஒன்றாக சந்திக்கும் இடத்தில் அவற்றிலுள்ள மின்பகுளிகள், ஆற்றுநீரிலுள்ள திண்மத் துகள்களை திரியச் செய்கின்றன. இதனால் பூமியானது விளைநிலமாக மாறுகிறது.
(ix) பகுப்பாய்வு பயன்பாடுகள்
பண்பறி மற்றும் பருமன்றி பகுப்பாய்வுகள், கூழ்மங்களின் பல்வேறு பண்புகளை அடிப்படையாக கொண்டவைகளாகும்.
எனவே, நமது வாழ்வில் கூழ்மங்களின் பயன்பாடுகள் உள்ளடங்காத துறைகள் எதுவுமே இல்லை எனும் முடிவுக்கு வர இயலும்.
இயற்கைத் தேன் ஒரு கூழ்மமாகும். இதை செயற்கை தேனிலிருந்து வேறுபடுத்தி அறிய இதனுடன் அம்மோனியா கலந்த AgNO3 கரைசல் சேர்க்கப்படுகிறது. இயற்கைத் தேனாக இருந்தால் உலோக சில்வர் உருவாகும். மேலும் இக்கரைசலானது பாதுகாக்கப்ப்ட்ட கூழ்மங்களான ஆல்புமின் அல்லது ஈதர் கலந்த எண்ணெய் ஆகியவற்றை மிகக் குறைந்தளவில் கொண்டிருப்பதால் செம்மஞ்சள் நிறத்தை பெற்றுள்ளது. செயற்கைத் தேனாக இருந்தால் அடர் மஞ்சள் அல்லது பசுமைகலந்த மஞ்சள் நிற வீழ்படிவைத் தருகிறது.