புறப்பரப்பு வேதியியல் - உயர்த்திகள் மற்றும் வினைவேகமாற்ற நச்சு | 12th Chemistry : UNIT 10 : Surface Chemistry
உயர்த்திகள் மற்றும் வினைவேகமாற்ற நச்சு :
ஒரு வினைவேகமாற்ற வினையிலுள்ள சில சேர்மங்கள் வினைவேகமாற்றியின் செயல்திறனை அதிகரிக்கின்றன. அத்தகைய சேர்மங்கள் உயர்த்திகள் என்றழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்கும் செயல்முறையில், மாலிப்டினத்தை சேர்க்கும் போது இரும்பு வினைவேகமாற்றியின் செயல்திறன் அதிகரிக்கிறது. எனவே மாலிப்டினம் உயர்த்தி என்றழைக்கப்படுகிறது. இதேபோல, Al2O3 ஐ பயன்படுத்தியும் இரும்பு வினைவேகமாற்றியின் செயல்திறனை அதிகரிக்க முடியும்.
இதற்கு மாறாக, வினைவேகமாற்ற வினைகளில் சில சேர்மங்களை சேர்க்கும்போது, அவை வினைவேகமாற்றிகளின் செயல்திறனை குறைக்கவோ அல்லது முழுவதுமாக இழக்கவோ செய்கின்றன. அத்தகைய சேர்மங்கள் வினைவேகமாற்ற நச்சுகள் என்றழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டுகள்,
2SO2 + O2 → 2SO3 என்ற வினையில் செயல்படும் Pt வினைவேகமாற்றிக்கு, As2O3 நச்சாக செயல்படுகிறது.
அதாவது, As2O3 ஆனது Pt வினைவேகமாற்றியின் செயல்திறனை இழக்கச்செய்கிறது. வினைவேகமாற்றியிலுள்ள கிளர்வு மையங்களை As2O3 அடைத்துக்கொள்கிறது. இதனால் அதன் செயல்பாடு இழக்கப்படுகிறது.
ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்கும் செயல்முறையில், இரும்பு வினைவேகமாற்றிக்கு H2S நச்சாக செயல்படுகிறது.
2H2 + O2 + 2H2O என்ற வினையில் Pt வினைவேகமாற்றிக்கு, CO நச்சாக செயல்படுகிறது.