அலகு 10
புறப்பரப்பு வேதியியல்
இர்விங் லாங்மியேர்
இர்விங் லாங்மியேர் என்பவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியல் மற்றும் இயற்பியல் அறிஞர் ஆவார். அவர் புறப்பரப்பு வேதியியலில் அவர் ஆற்றிய பங்கிற்காக வேதியியலுக்கான நோபல் பரிசினை 1932 ஆம் ஆண்டு பெற்றார். அவர் அணு அமைப்பின் ஒரு மைய வட்டக் கொள்கையினை அளித்தார். உலோகங்களில் பற்ற வைத்தலில் ஹைட்ரஜனின் பயன் மற்றும் வாயு நிரப்பப்பட்ட ஒளிர் விளக்குகளை அவர் கண்டறிந்தார். நியூமெக்சிகோவில் செகோரோவிற்கு அருகில் அமைந்துள்ள ஆராய்ச்சி நிறுவனம் அவரைப் பெருமைபடுத்தும் வண்ணம் அவர் பெயரால் அழைக்கப்படுகிறது. லாங்க்மயர் மற்றும் டாங்ஸ் அவர்களால் கண்டறியப்பட்ட பிளாஸ்மாவிலிருக்கும் எலக்ட்ரான் அடர்வு அலைகள் லாங்மேயர் அலைகள் என அறியப்படுகின்றன.
கற்றலின் நோக்கங்கள் :
இந்த பாடப்பகுதியை கற்றறிந்த பின்னர்,
• பரப்புகவர்தலை வகைப்படுத்துதல்,
• உறிஞ்சுதல் மற்றும் பரப்புகவர்தல் ஆகியவற்றை வேறுபடுத்துதல்,
• ஃபிரண்ட்லிச் பரப்புகவர்தல் சமவெப்பக் கோடுகளை விளக்குதல்,
• வினைவேக மாற்றம் மற்றும் வினைவேக மாற்றிகளின் சிறப்பியல்புகள் பற்றி புரிந்து கொள்ளுதல்,
• வினைவேக மாற்ற கொள்கைகள் மற்றும் நொதி வினைவேகமாற்றம் ஆகியவற்றை விளக்குதல்.
• கூழ்மங்களை வகைப்படுத்துதல்,
• கூழ்மங்களின் தயாரிப்பு முறைகள் மற்றும் கூழ்மங்களின் தூய்மையாக்கல் முறைகளை விளக்குதல்.
• கூழ்மக் கரைசலின் பண்புகளை விவாதித்தல்.
• நம் அன்றாட வாழ்வில் கூழ்மங்கள் மற்றும் பால்மங்களின் பங்களிப்பை விளக்குதல். ஆகிய திறன்களை மாணவர்கள் பெறுவர்.
பாட அறிமுகம்
புறப்பரப்பு வேதியியல் என்பது இரண்டு வெவ்வேறு நிலைமைகளின் இடைப்பரப்பில் நிகழும் செயல்முறைகளைப் பற்றி விவரிக்கும் வேதியியலின் ஒரு பிரிவாகும். எடுத்துக்காட்டாக, திண்மம் மற்றும் நீர்மம், திண்மம் மற்றும் வாயு, நீர்மம் மற்றும் நீர்மம். நம் அன்றாட வாழ்விற்கும், பெயிண்ட்டுகள் முதல் மருந்துகள் வரை பல்வேறு பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், உயிர்தொழில் நுட்பவியல் துறைக்கும், இந்த பாடப் பகுதி அதிமுக்கியமானது. பலபடித்தானவினைவேக மாற்றம், கூழ்மங்களை தயாரித்தல் மற்றும் நிலைப்படுத்துதல், மின்முனை வினைகள் ஆகியவற்றில் புறப்பரப்பானது முக்கிய பங்காற்றுகிறது. திண்மங்களின் புறப்பரப்பானது, அதன் திரள் பகுதியிலிருந்து இயல்பாகவே வேறுபட்டதாக உள்ளது.புறப்பரப்பிலுள்ள அணுக்களுக்கிடையேயான பிணைப்புகள், திரள் பகுதியிலுள்ளவற்றிலிருந்து வேறுபட்டது. விண்வெளியிலுள்ள ஹைட்ரஜன் முழுவதும் தூசி மற்றும் பாறைத் துகள்களின் புறப்பரப்பில் பரப்பு கவரப்பட்டு உருவானவையே ஆகும். கொசுக்கள் மற்றும் சிறிய பூச்சிகள் நீரின் மீது நடைபயில முடியும் ஆனால் நீருக்கருகில் சோப்புகளை சேர்க்கும்போது இந்த பூச்சிகள் நீரில் மூழ்கிவிடுகின்றன. நீர் மற்றும் பாதரச துளிகளின் கோள வடிவம் நம்மை ஆச்சரியமூட்டுகின்றன.நீர் ஒட்டாத வண்ணத்துபூச்சியின் இறக்கைகளும், தாவர இலைகளும் நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடியவை. வானத்தின் நீல நிறம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் சிவப்பு நிறம் ஆகியனவும் நம்மை வெகுவாக கவரக்கூடியவைகளாக உள்ளன. இவை அனைத்திலும் பொருளின் புறப்பரப்பு முக்கிய பங்குவகிக்கிறது.பல்வேறு கிரீம்கள், களிம்புகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் ஆகியவை பால்மங்களாக உள்ளன. உணவுப்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள், ஆரோக்கியமான, சுவைமிக்க மற்றும் நீண்டநாள் கெட்டுப்போகாத உணவுப்பொருட்களை தயாரிப்பதில் முனைப்பு காட்டுகின்றன. இவை அனைத்தும் கூழ்மங்கள் மற்றும் புறப்பரப்பு வேதியியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. எனவே, புறப்பரப்பு வேதியலானது கற்பதற்கு ஆர்வமூட்டும் பாடப்பகுதியாகும்.