புறப்பரப்பு வேதியியல் - வரையறை மற்றும் வினைவேகத்தின் வகைகள் | 12th Chemistry : UNIT 10 : Surface Chemistry
வினைவேக மாற்றம்
1836 ஆம் ஆண்டு பெர்ஜீலியஸ், சில குறிப்பிட்ட சேர்மங்கள், வினைபடு பொருளிலுள்ள பிணைப்புகளை தளர்த்தி வினைவேகத்தை அதிகரிக்கின்றன என கண்டறிந்தார். இந்த சேர்மங்கள் எவ்வித வேதி மாற்றத்திற்கும் உட்படுவதில்லை என்பதையும் அவர் கண்டறிந்தார். இந்த பண்பை குறிப்பிடுவதற்காக, அவர் வினைவேக மாற்றி எனப் பெயரிட்டார். (கிரேக்க மொழியில், kata - முழுவதும், lein - தளர்த்துவதற்காக). ஒரு வினையின் வேகத்தை குறைக்கும் சேர்மங்களும் இருப்பது பின்னர் கண்டறியப்பட்டது.
எனவே, தாமாக எவ்வித வேதி மாற்றத்திற்கும் உட்படாமல், ஒரு வினையின் வேகத்தை மாற்றியமைக்கும் சேர்மமானது வினைவேகமாற்றி என வரையறுக்கப்படுகிறது. வினைவேக மாற்றிகள் செயல்படும் நிகழ்வானது வினைவேக மாற்றம் என்றழைக்கப்படுகிறது.
ஊக்க வினைவேக மாற்றத்தில், வினைவேக மாற்றி முன்னிலையில் ஒரு வினையின் வேகம் அதிகரிக்கிறது, ஆனால் தளர்வு வினைவேக மாற்றத்தில், வினையின் வேகம் வினைவேக மாற்றி முன்னிலையில் குறைக்கப்படுகிறது. வினைவேக மாற்றத்தில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன (i) ஒருபடித்தானவினைவேக மாற்றம் (ii) பலபடித்தானவினைவேக மாற்றம்
ஒருபடித்தானவினைவேகமாற்ற வினையில், வினைபடுபொருட்கள், விளைபொருட்கள் மற்றும் வினைவேகமாற்றி ஆகியவை ஒரே நிலைமையில் காணப்படுகின்றன.
விளக்கம் (1):
2SO2(g) + O2(g) + [NO](g) → 2SO3(g) +[NO](g)
இந்த வினையில், வினைவேகமாற்றி NO, வினைபடுபொருட்கள் SO2 மற்றும் O2 , மற்றும் விளைபொருள் SO3 ஆகியன வாயு நிலைமையில் உள்ளன.
விளக்கம் (2):
அசிட்டால்டிஹைடு சிதைவடையும் வினையில், வினைவேகமாற்றி I2 வினைபடுபொருட்கள் மற்றும் விளைபொருட்கள் என அனைத்தும் வாயு நிலைமையில் உள்ளன.
CH3CHO(g)+[I2] (g) → CH4(g) + CO(g) + [I2] (g)
வினைபடுபொருட்கள், விளைபொருட்கள் மற்றும் வினைவேகமாற்றி ஆகிய அனைத்தும் நீர்த்த கரைசலில் உள்ள சில எடுத்துக்காட்டுகளை நாம் கருதுவோம்.
(1) கனிம அமிலத்தை வினைவேகமாற்றியாக கொண்டு நிகழும் கரும்பு சர்க்கரையின் நீராற்பகுப்பு வினை .
(2) அமில அல்லது கார வினைவேகமாற்றி முன்னிலையில் எஸ்டரை நீராற்பகுத்தல்.
இந்த வினையில், வினைவேகமாற்றியானது வேறு நிலைமையில் உள்ளது. அதாவது, வினைபடு பொருட்கள் அல்லது விளைபொருட்கள் உள்ள அதே நிலைமையில் இல்லாமல் வினைவேகமாற்றி வேறு நிலைமையில் இருக்கும். இது பொதுவாக தொடர்பு வினைவேக மாற்றம் என குறிப்பிடப்படுகிறது, மேலும் வினைவேகமாற்றியானது நன்கு தூளாக்கப்பட்ட உலோக நிலையிலோ அல்லது கம்பிவலை வடிவிலோ பயன்படுத்தப்படுகிறது.
விளக்கம்
(i) தொடு முறையில் கந்தக அமிலம் தயாரித்தலில், Pt அல்லது V2O5 வினைவேகமாற்றி முன்னிலையில் SO2 மற்றும் O2 ஆகியவற்றை வினைப்படுத்தி SO3 தயாரிக்கப்படுகிறது.
ii) ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில், ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஜன் ஆகியவற்றிற்கிடையே நிகழும் வினைக்கு இரும்பு வினைவேக மாற்றியாக பயன்படுத்தப்படுகிறது.
iii) பிளாட்டினம்கம்பிவலையின் முன்னிலையில் நிகழ்த்தப்படும் அம்மோனியாவின் ஆக்சிஜனேற்றம்.
iv) நன்கு தூளாக்கப்பட்ட நிக்கல் உலோகத்தை வினைவேக மாற்றியாக பயன்படுத்தி நிகழ்த்தப்படும் நிறைவுறா கரிம சேர்மங்களின் ஹைட்ரஜனேற்ற வினைகள்.
v) Pt வினைவேகமாற்றி முன்னிலையில் நிகழும் H2O2 சிதைவு வினை.
vi) நீரற்ற AIC13 முன்னிலையில் பென்சீன் மூலக்கூறு எத்தனாயில் குளோரைடுடன் வினைப்பட்டு அசிட்டோ பீனோனை உருவாக்கும் வினை.