கண்ணின்
குறைபாடுகள்
இயல்பாக மனித கண்களினால் 25 செ.மீ முதல்
ஈறிலாத் தொலைவு வரை உள்ளப் பொருள்களைத் தெளிவாக காணமுடியும். ஆனால் வயது முதிர்வு
உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில மனிதர்களின் பார்வையில் குறைபாடு ஏற்படுகிறது.
கண்ணில் ஏற்படும் சில பொதுவான குறைபாடுகளைப் பற்றி விவாதிப்போம்.
மையோபியா என்று அழைக்கப்படும் ‘கிட்டப்பார்வை’ என்னும் குறைபாடானது விழிக்கோளம் சிறிது நீண்டு விடுவதால் ஏற்படுகிறது.
இக்குறைபாடு உள்ள மனிதர்களால் அருகில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காணமுடியும்.
ஆனால் தொலைவில் உள்ள பொருள்களை காணமுடியாது. விழி லென்சின் குவிய தூரம்
குறைவதாலும், விழி லென்சிற்கும் விழித் திரைக்கும் இடையே
உள்ள தொலைவு அதிகரிப்பதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது. இதனால் கண்ணின் சேய்மைப்
புள்ளியானது, ஈறிலாத் தொலைவில் அமையாமல், கண்ணின் அண்மைப் புள்ளியை நோக்கி நகர்ந்து விடுகிறது. இதனால் தொலைவில்
உள்ள பொருள்களின் பிம்பங்கள் விழித்திரைக்கு முன்பாக உருவாக்கப்படுகின்றன. தகுந்த
குவியத் தொலைவு கொண்ட குழிலென்சைப் பயன்படுத்துவதன் மூலம் இக்குறைபாட்டை
சரிசெய்யலாம். பயன்படுத்தப்பட வேண்டிய குழிலென்சின் குவியத் தொலைவைப் பின்வருமாறு
கண்டறியலாம்.
கிட்டப் பார்வை குறைபாடு உடைய ஒரு
மனிதரால் x என்ற தொலைவு
வரையுள்ள பொருள்களைக் காண முடிகிறது எனக் கொள்வோம். அவர் ஈறிலாத் தொலைவுவரை உள்ள
பொருள்களைக் காண விரும்பினால், பயன்படுத்தப்பட வேண்டிய குழி
லென்சின் குவிய தூரம் f =
- x
அதே நபர், y என்ற தொலைவு வரை காண
விரும்பினால், தேவைப்படும் குழிலென்சின் குவிய தூரம்
f = xy / x-y
தூரப் பார்வை என்று அழைக்கப்படும், ஹைப்பர்
மெட்ரோஃபியா குறைபாடானது விழிக்கோளம் சுருங்குவதால் ஏற்படுகிறது. இக்குறைபாடு உடைய
மனிதர்களால் தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காண முடியும். ஆனால் அருகில்
உள்ளப் பொருள்களைக் காண முடியாது. விழிலென்சின் குவியத்தொலைவு அதிகரிப்பதாலும்,
விழி லென்சுக்கும் விழித் திரைக்கும் இடையே உள்ளத் தொலைவு
குறைவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது. இதனால் அண்மைப் புள்ளியானது 25 செமீ என்ற தொலைவில் அமையாமல், சேய்மைப் புள்ளியை
நோக்கி நகர்ந்து விடுகிறது. எனவே, அருகில் உள்ள பொருள்களின்
பிம்பங்கள் விழித்திரைக்கு அப்பால் (பின்புறம்) உருவாக்கப்படுகின்றன. தகுந்த
குவியத்தொலைவு கொண்ட குவி லென்சினைப் பயன்படுத்துவதன் மூலம் இக்குறைபாட்டைச் சரி
செய்யலாம். பயன்படுத்தப்பட வேண்டிய குவிலென்சின் குவியத் தொலைவை பின்வரும்
முறையில் கண்டறியலாம்.
தூரப் பார்வை குறைபாடு உடைய ஒரு
மனிதரால் d என்ற தொலைவிற்கு அப்பால் உள்ள பொருள்களை மட்டுமே காணமுடிகிறது எனக்
கொள்வோம். அவர் d க்கு குறைவாக உள்ள D என்ற
தொலைவில் அமைந்த பொருள்களையும் காண விரும்பினால், பயன்படுத்தப்பட
வேண்டிய குவி லென்சின் குவிய தூரம்
F = dD / d-D
மனிதரில் ஏற்படும் வயது முதிர்வு
காரணமாக, சிலியரித் தசைகள்
வலுவிழக்கின்றன. மேலும் விழிலென்சு தன் நெகிழ்வுத் தன்மையை இழக்கிறது. இதனால்
விழியின் ஏற்பமைவுத் திறனில் குறைபாடு ஏற்படுகிறது.
இக்குறைபாடு உடைய சில வயது
முதிர்ந்த பெரியவர்களால் அருகில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காண முடியாது. எனவே
இக்குறைபாடு ‘வயது
முதிர்வு தூரப்பார்வை' என்றும் அழைக்கப்படுகிறது.
சில மனிதர்கள் ஒரே நேரத்தில்
கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை ஆகிய பார்வைக் குறைபாடுகளால் பாதிக்கப்படலாம்.
இக்குறைபாடானது, “இரு குவிய லென்சுகள்" (Bifocal lenses) மூலம்
சரி செய்யப்படுகிறது. இந்த லென்சின் மேல்புறம் குழி லென்சும் (கிட்டப்பார்வையை சரி
செய்து நீண்ட தொலைவில் உள்ள பொருள்களைக் காணவும்), கீழ்
புறம் குவி லென்சும் (தூரப்பார்வை சரி செய்து படிப்பதற்கு ஏற்ற வகையிலும்) கொண்டு
அமைக்கப்பட்டிருக்கும்.
இக்குறைபாடு உடைய கண்களால், இணையான மற்றும்
கிடைமட்டக் கோடுகளைத் தெளிவாகக் காண இயலாது. இக்குறைபாடு மரபு ரீதியாகவோ அல்லது
கண்ணில் ஏற்படும் பாதிப்புகளினாலோ தோன்றலாம்.
விழிலென்சில் ஏற்படும் கண்புரை, கார்னியாவில் உருவாகும்
புண்கள், விழியின் மேற்பரப்புகளில் உண்டாகும் காயங்கள்
போன்றவற்றால் விழிலென்சின் ஏற்படும் ஒழுங்கற்ற தன்மையால் இக்குறைபாடு ஏற்படுகிறது.
உருளை லென்சுகள் (cylindrical lenses) மூலம் இக்குறைபாட்டைச்
சரி செய்யலாம்.