ஒளிச்சிதறலின்
வகைகள்
ஒளிச்சிதறல்
சூரிய ஒளி, புவியின்
வளிமண்டலத்தில் நுழையும் போது, வளிமண்டலத்தில் உள்ள பல்வேறு
வாயு அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளால் அனைத்து திசைகளிலும் விலகல் அடையச்
செய்யப்படுகிறது. இந்நிகழ்வு 'ஒளிச்சிதறல்' எனப்படுகிறது. இந்நிகழ்வில் ஒளிக்கற்றையானது ஊடகத்தில் (காற்றில்) உள்ள
துகள்களுடன் இடைவினையில் ஈடுபடும் போது, அவை அனைத்துத்
திசைகளிலும், திருப்பி விடப்பட்டுச் சிதறல் நிகழ்கிறது.
இடைவினையில் ஈடுபடும் துகள் சிதறலை உண்டாக்கும் துகள் (Scatterer) எனப்படுகிறது.
ஒளிச்சிதறலின் வகைகள்
ஒளிக்கற்றையானது, ஊடகத்தில் உள்ள
துகள்களுடன் இடைவினையாற்றும் போது, பல்வேறு வகையான சிதறல்கள்
ஏற்படுகின்றன.
ஒளிக்கற்றையின் தொடக்க மற்றும்
இறுதி ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு, ஒளிச்சிதறலை
1. மீட்சிச் சிதறல்
மற்றும் 2 மீட்சியற்ற சிதறல் என இருவகைகளாகப் பிரிக்கலாம்.
சிதறல் அடையும் ஒளிக்கற்றையின்
தொடக்க மற்றும் இறுதி ஆற்றல்கள் சமமாக இருப்பின் அச்சிதறல் மீட்சிச் சிதறல் எனப்படும்.
சிதறல் அடையும் ஒளிக்கற்றையின்
தொடக்க மற்றும் இறுதி ஆற்றல்கள் சமமற்று இருப்பின் அச்சிதறல் மீட்சியற்ற சிதறல்
எனப்படும்.
சிதறலை உண்டாக்கும் துகளின் தன்மை
மற்றும் அளவைப்(size)
பொறுத்து சிதறலைக் கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
· ராலே ஒளிச்சிதறல்,
· மீ ஒளிச்சிதறல்,
· டிண்டால் ஒளிச்சிதறல்,
· இராமன் ஒளிச்சிதறல்
சூரியனிலிருந்து வரும்
ஒளிக்கதிர்கள் வளிமண்டலத்தில் உள்ள வாயு அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளால்
சிதறலடிக்கப்படுவதே 'ராலே ஒளிச்சிதறல்' ஆகும்.
ஓர் ஒளிக்கதிர் சிதறலடையும் அளவானது, அதன் அலைநீளத்தின்
நான்மடிக்கு எதிர்த் தகவில் இருக்கும்.
சிதறல் அளவு ‘S’ ∝ 1/λ4
இவ்விதியின் படி, குறைந்த அலைநீளம்
கொண்ட நிறமானது, அதிக அலைநீளம் கொண்ட நிறத்தை விட அதிகமாக
சிதறல் அடைகிறது.
சூரிய ஒளியானது, வளிமண்டலத்தின்
வழியாகச் செல்லும் போது, குறைந்த அலைநீளம் உடைய நீல நிறமானது,
அதிக அலை நீளம் கொண்ட சிவப்பு நிறத்தை விட அதிகமாக சிதறல் அடைகிறது.
இதனால் வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது.
சூரிய உதயம் மற்றும் மறைவின்போது, சூரிய ஒளியானது,
நண்பகலில் இருப்பதை விட வளிமண்டலத்தில் அதிகத் தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது.
எனவே நீல நிற ஒளியானது முற்றிலுமாகச் சிதறலடைந்து சென்றுவிடுவதால், குறைவாகச் சிதறல் அடைந்த சிவப்பு நிற ஒளியே நம்மை அடைகிறது. எனவே, சூரிய உதயம் மற்றும் மறைவின் போது சூரியன் சிவப்பாகக் காட்சியளிக்கிறது.
ஒளிச் சிதறலை ஏற்படுத்தும் துகளின்
விட்டமானது, படும் ஒளிக்கதிரின் அலைநீளத்திற்குச் சமமாகவோ அல்லது அலைநீளத்தை விட
அதிகமாகவோ இருக்கும் போது மீ-ஒளிச்சிதறல் ஏற்படுகிறது. இச்சிதறல் மீட்சி சிதறல்
வகையை சார்ந்தது. மேலும் சிதறல் அளவானது ஒளிக்கதிரின் அலைநீளத்தைச் சார்ந்தது
அன்று.
வளிமண்டலத்தின் கீழ்
அடுக்குப்பகுதியில் உள்ள தூசு,
புகை, நீர்த்துளிகள் மற்றும் சில துகள்களால்
மீ - சிதறல் ஏற்படுகிறது.
மேகக்கூட்டங்கள் வெண்மை நிறமாகக்
காட்சியளிக்க மீ-சிதறல் காரணமாக அமைகிறது. வெள்ளொளியானது மேகத்தில் உள்ள
நீர்த்துளிகளின் மீது படும்போது,
அந்நீர்த் துளிகள் அனைத்து நிறங்களையும் சமமாகச் சிதறல் அடையச்
செய்கின்றன. இதனால் சிதறல் அடைந்த அனைத்து நிறங்களும் ஒன்றாகச் சேர்ந்து வெண்மை
நிறமாக மாறுகின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
மிக நுண்ணிய
துகள்கள் மற்றொரு பொருளில் சம அளவில் விரவி இருப்பதை கூழ்மம் என்கிறோம்.. எ.கா.
பால், புகை, ஐஸ்கிரீம் மற்றும் கலங்கலான நீர்.
சூரிய ஒளிக்கற்றையானது, தூசுகள் நிறைந்த
ஓர் அறையின் சாளரத்தின் வழியே நுழையும் போது ஒளிக்கற்றையின் பாதை நமக்குத்
தெளிவாகப் புலனாகிறது. அறையில் உள்ள காற்றில் கலந்திருக்கும் தூசுகளால்
ஒளிக்கற்றையானது சிதறலடிக்கப் படுவதால் ஒளிக்கற்றையின் பாதை புலனாகிறது.
இந்நிகழ்வு டிண்டால் ஒளிச்சிதறலுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
ஒரு கூழ்மக் கரைசலில் உள்ள
கூழ்மத்துக்கள்களால், ஒளிக்கதிர்கள் சிதறலடிக்கப்படுகின்ற நிகழ்வு டிண்டால் ஒளிச்சிதறல் அல்லது
டிண்டால் விளைவு எனப்படும்.
வாயுக்கள் அல்லது திரவங்கள் அல்லது
ஒளி புகும் தன்மை கொண்ட திண்மங்களின் வழியாக ஒற்றை நிற ஒளியானது இணைக் கற்றைகளாகச்
செல்லும் போது அவற்றின் ஒரு பகுதி சிதறல் அடைகிறது. சிதறலடைந்த கதிரானது, படுகின்ற கதிரின்
அதிர்வெண்ணைத் தவிர சில புதிய அதிர்வெண்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
இந்நிகழ்வு 'இராமன் ஒளிச்சிதறல்' எனப்படுகிறது.
ஒளிக்கதிரானது, தூய திரவங்கள்
மற்றும் ஒளி புகும் தன்மை கொண்ட திண்மங்களில் உள்ள துகள்களுடன் இடைவினை புரிவதன்
காரணமாக ஒளிக்கதிரின் அலைநீளம் மற்றும் அதிர்வெண்ணில் மாற்றங்கள் ஏற்படும் நிகழ்வை
'இராமன் ஒளிச்சிதறல்' என
வரையறுக்கலாம்.
படுகதிரின் அதிர்வெண்ணுக்குச் சமமான
அதிர்வெண்ணைக் கொண்ட நிறமாலை வரிகள் 'ராலே வரிகள்' என்றும்,
புதிய அதிர்வெண்களைக் கொண்ட நிறமாலை வரிகள் 'இராமன்
வரிகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.
படுகதிரின் அதிர்வெண்ணைவிடக்
குறைவான அதிர்வெண் கொண்ட நிறமாலை வரிகளை 'ஸ்டோக் வரிகள்' என்றும்,
படுகதிரின் அதிர்வெண்ணைவிட அதிகமான அதிர்வெண்ணைக் கொண்ட நிறமாலை
வரிகளை 'ஆண்டிஸ்டோக் வரிகள்’ என்றும்
அழைக்கிறோம்.
இராமன் விளைவைப் பற்றி மேலும்
விரிவாக உயர்வகுப்புகளில் கற்கலாம்.